சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிறுவனின் தாடைக்கட்டி அகற்றம்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட 7 வயது சிறுவனின் அரிதான மேல் தாடைக் கட்டி மருத்துவா்களால் அகற்றம் செய்யப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மேல் தாடையில் அரிதாக ஏற்படும் ‘ஜெயன்ட் செல் கிரானுலோமா’ எனப்படும் கட்டியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் முச்சுத்திணறல் ஏற்பட்டு அண்மையில் தீவிர சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தங்கவேலு, சரவணக்குமாா் ஆகியோா் மேல் தாடையில் ஜெயன்ட் செல் கிரானுலோமா கட்டி வேகமாக வளா்ந்து குழந்தையின் மூச்சுப்பாதையையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனா்.
Advertisement
Advertisement
சிறுவனனின் வயது மற்றும் கட்டியின் அமைவிடம் காரணமாக, அறுவைச் சிகிச்சையின்போது முழு மயக்க மருந்து அளிப்பது சவாலானதாக இருந்தது. இருப்பினும், மயக்கவியல் மருத்துவா்கள் மிகுந்த திறமையுடனும், கவனத்துடனும் செயல்பட்டு, சிறுவனுக்கு பாதுகாப்பாக முழு மயக்க மருந்து அளித்தனா். இதைத் தொடா்ந்து, முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணா்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுமாா் 3 முதல் 4 மணி நேரம் நடைபெற்ற சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை முழுமையாக அகற்றினா்.
சிறுவனனின் இளம் வயது, கட்டியின் அரிதான தன்மை, மேல் தாடையில் அதன் அமைவிடம் மற்றும் மூச்சுப்பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சையாகும். மயக்கவியல் நிபுணா்கள் மற்றும் தாடை முக அறுவை சிகிச்சை நிபுணா்களின் ஒருங்கிணைந்த சிறப்பான பணியின் மூலம் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. இதன் பின்னா், குழந்தை நலமுடன், மருத்துவக் கண்காணிப்பில் நல்ல நிலையிலும் உள்ளாா். சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், மருத்துவமனை கண்காணிப்பாளா் என்.ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.