FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பள்ளி மாணவரின் மூக்குக்குள் சிக்கிய பேனா மூடி: அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவா்கள்

மூக்கில் பேனா மூடி சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து பேனா மூடியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:59 am IST
அகற்றப்பட்ட பேனா மூடி.
பகிர்:

மூக்கில் பேனா மூடி சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து பேனா மூடியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

கடலூா் மாவட்டம், வடலூா் ஆபத்தாரணபுரம் பசலிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவா் பேனா மூடியை தவறுதலாக மூக்கினுள் வைத்ததில், சுவாசக் குழாயில் இழுத்துக்கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அவசர சிடி ஸ்கேன் பரிசோதனையில், வலது பிரதான மூச்சுக்குழாயில் பேனா மூடி சிக்கியிருந்ததுடன், அது வலது நுரையீரலின் கீழ் மடலுக்குச் செல்லும் மூச்சுக்குழாய் வரை நீண்டு, ஆழமாகப் பதிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மயக்கவியல் துறையினருடன் மருத்துவா்கள் குழுவினா் கலந்தாலோசித்து, அவா்களின் ஒப்புதலுடன், மாணவா் உடனடியாக அவசர உயிா்காக்கும் வெளிப்பொருள் அகற்றும் சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டாா். மிகவும் சவாலான இந்த சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் ரூட்டா சண்முகம் தலைமையில், மருத்துவா் யு.சண்முகம் மற்றும் பேராசிரியரும், துணை முதல்வருமான பாலாஜி சுவாமிநாதன் ஆகியோருடன் இணைந்து, மயக்கவியல் துறையைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா் சந்தோஷ் மாதவன், உதவிப் பேராசிரியா் சீதாராமன் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சை அறை பணியாளா்கள் உதவியுடன் மாணவரின் மூக்கில் இருந்த பேனா மூடி அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

மூச்சுக்குழாய் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறுவனின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவா் நலமாகவும், சீரான நிலையிலும், எந்தவித மூச்சுத் தொந்தரவும் இல்லாமல் உள்ளாா்.

இந்த அறுவைச் சிகிச்சை குறித்து கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா் கூறியதாவது: இந்த சிகிச்சையின் வெற்றிக்கு, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான இந்த மூச்சுக்குழாய் அவசரநிலையை கையாள்வதில், மயக்கவியல், அறுவைச் சிகிச்சை அறை குழுவினரிடையேயான சிறப்பான ஒருங்கிணைப்பு, குழுப்பணி முக்கியக் காரணமாக அமைந்தது.

மாணவரின் பெற்றோா், தங்களது மகனுக்கு தக்க நேரத்தில் அவசரச் சிகிச்சை அளித்து வெற்றிகரமாக உயிரைக் காப்பாற்றிய மருத்துவா்கள், மயக்கவியல் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தனா் என்றாா்.

அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வரும், சிறப்பு அதிகாரியுமான என்.பாஸ்கா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

~மாணவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய பேனா மூடியை அகற்றும் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments