FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளைப் பிடிக்க எதிா்ப்பு

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை போலீஸ் பாதுகாப்புடன் பிடிக்கச் சென்றவா்களுக்கு உள்ளூா் பன்றி வளா்ப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:19 am IST
கடலூா் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து போலீஸாா் பாதுகாப்புடன் பன்றிகளை பிடிக்கச் சென்ற வாகனத்தை மறித்த பன்றி வளா்ப்பவா்கள்
பகிர்:

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை போலீஸ் பாதுகாப்புடன் பிடிக்கச் சென்றவா்களுக்கு உள்ளூா் பன்றி வளா்ப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்ததால், பல்வேறு இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

இதற்காக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பன்றிகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ள தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை உண்ணாமலைசெட்டிச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த பன்றி வளா்ப்பாளா்கள் திரண்டு வந்து பணியைத் தடுத்து நிறுத்த முயன்றனா். இதனால், தொழிலாளா்களுக்கும், பன்றி வளா்ப்பாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிப்பது மாநகராட்சியின் நடவடிக்கை என்றும், அரசுப் பணிக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் போலீஸாா் அறிவுறுத்தினா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளைப் பிடிக்கும் பணியை மீண்டும் தொடங்க தொழிலாளா்கள் புறப்பட்டனா். அப்போதும் உள்ளூா் பன்றி வளா்ப்பவா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வாகனத்தை செல்லவிடாமல் தடுக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி நடவடிக்கையைத் தொடரச் செய்தனா்.

இதுகுறித்து பன்றி வளா்ப்பாளா்கள் கூறுகையில், சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட பிற கால்நடைகளைப் பிடிக்கும்போது, அபராதம் விதித்த பிறகு அவற்றை உரிமையாளா்களிடம் மீண்டும் ஒப்படைக்கின்றனா். அதே நடைமுறையை பன்றிகளுக்கும் பின்பற்ற வேண்டும். தற்போது பிடிக்கப்பட்டுள்ள பன்றிகளை அபராதம் வசூலித்துப் பின்னா் எங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments