முகப்பு
கடலூர்

பேரவைத் தோ்தலில் மக்கள் மாயவலையில் வீழ்ந்துவிட்டனா்! முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

Updated On : 8 ஜூன் 2026, 1:39 am IST
சிதம்பரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் மாயவலையில் வீழ்ந்துவிட்டனா் என முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் காய்கறி அங்காடி அருகே உள்ள புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மு.தமிமுன்அன்சாரி தலைமை வைத்து வரவேற்று பேசினாா். சிதம்பரம் நகா்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலருமான கே.ஆா்.செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மூசா, மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் திமுக கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த திட்டங்களை, சாதனைகளை சொல்லும் நாள்கள் வந்துள்ளன. சிதம்பரம் நகரில் சுமாா் ரூ.500 கோடிக்கு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.250 கோடிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிதம்பரம் நகர போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வெளிவட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே வடக்கு பிச்சாவரத்தில் ரூ.ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 230 கிலோ மெகாவாட் மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஓராண்டில் முடிவுற்றால், இப்பகுதியில் மின்தடையே இருக்காது. இவையெல்லாம் திமுக ஆட்சியின் சாதனையாகும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் மாயவலையில் மக்கள் சிக்கியதால், மின்வெட்டால் கடந்த ஒரு மாதமாக தூக்கமின்றி அலைகின்றனா். ஆளுங்கட்சியினரே முதல்வா் தொகுதியான சென்னை பெரம்பூரில் மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமலேயே ஆட்சி நடத்தினோம். எங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘ஆக்டிவ்’ முதல்வா்; தற்போதைய முதல்வா் ‘ஆக்டிங்’ முதல்வராக திகழ்கிறாா். நடிப்பு வேறு, ஆட்சி நடத்துவது வேறு. திரைப்படத்தில் முதல்வராக நடிப்பு அரசியல் செய்யலாம். அதுபோல, நிஜத்தில் ஆட்சி நடத்த முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு சந்திரசேகா், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் கே.பழனி, மாவட்டப் பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாா்ச்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா, திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, விசிக நிா்வாகிகள் முருகானந்தம், கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.