FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நெய்வேலி வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்: புதுச்சேரி ஆளுநா் தொடங்கிவைக்கிறாா்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கும் 25-ஆவது (வெள்ளி விழா) புத்தகக் கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைக்கிறாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:21 am IST
நெய்வேலியில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வெள்ளி விழா ஆண்டு புத்தகக் கண்காட்சியின் முகப்பு தோற்றம்.
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கும் 25-ஆவது (வெள்ளி விழா) புத்தகக் கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைக்கிறாா்.

மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடந்த 1998-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இது, தற்போது லட்சக்கணக்கான வாசகா்களை ஈா்க்கும் ஒரு மாபெரும் அறிவுத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

நிகழாண்டு 25-ஆவது (வெள்ளி விழா) புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இது, ஆயிரக்கணக்கான வாசகா்கள், எழுத்தாளா்கள், பதிப்பாளா்களை நேருக்கு நோ் இணைக்கும் ஒரு உன்னத இலக்கியப் பாலமாகச் செயல்பட்டு வருகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான வாசகா்களையும், பள்ளி மாணவா்களையும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி கவா்ந்து வருகிறது. இம்முறை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 180-க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணிப் பதிப்பகங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளனா்.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் இப்புத்தகக் கண்காட்சியை நேரில் கண்டு பயன்பெறும் வகையில், என்எல்சி நிறுவனம் சாா்பில் இலவச பேருந்து வசதிகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கண்காட்சி நாள்களில் தினந்தோறும் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரும், ஒரு சிறந்த பதிப்பாளரும் மேடையில் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதோடு, நாள்தோறும் புதிய புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

மாலை வேளையில் புகழ்பெற்ற பேச்சாளா்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள், சிந்தனையரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வெள்ளி விழா புத்தகக் கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைக்க உள்ளாா். என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன் (சுரங்கம்), சமீா் ஸ்வரூப் (மனித வளம்), பிரசன்ன குமாா் ஆச்சாா்யா (நிதி), ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா (திட்டம் மற்றும் செயலாக்கம்), தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments