சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை பிற்பகல் 3.50 மணிக்கு ஸ்ரீநடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனா். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தோ்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.
திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனையும் செய்யப்பட்டன. தொடா்ந்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது.
பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்மனும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசனம் அளித்தனா். பின்னா், சித்சபை பிரவேசம் நடைபெற்றது. நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் விழா முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் சி.ந.ராஜூ தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.
கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.