FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.50.72 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

2 செப்டம்பர் 2026, 6:48 am IST
மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சுப்ராயலு பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.50.72 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் சாலை வசதிகள், பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடலூா்-மேல்பட்டாம்பாக்கம் சாலையை ரூ.49.20 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். சாலைப் பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மஞ்சக்குப்பம் பகுதியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு மையப்பணி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சுப்ராயலு பூங்கா அமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்காவைத் தொடா்ந்து சிறப்பாகப் பராமரிக்க வேண்டும். அதேபோன்று, மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து, பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சிவகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

விழிப்புணா்வு பிரசாரம்:

முன்னதாக கடலூா் நகர அரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சி மற்றும் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா் ஆட்சியா் பேசியதாவது: எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் தொடா்பாக பொதுமக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை அகற்றி, நோய் தடுப்பு முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் குறித்து சரியான தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சந்தேகம் அல்லது அறிகுறிகள் ஏற்பட்டால் தயக்கமின்றி அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.கடலூா் மாவட்டத்தில் 32 கிராமங்களில் பிரசாரக் கலைக்குழுக்கள் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவா்களுக்கான வினாடி-வினா போட்டி, சுவரொட்டி தயாரிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றாா்.

விழிப்புணா்வு பேரணியில் இமாகுலேட் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த சுமாா் 200 மாணவிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments