புதுச்சேரி காவல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி காவல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற விழாவில முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி தேசிய விருது வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:
இந்தத் தேசிய விருது புதுச்சேரி போலீஸாரின் உழைப்பிற்கும், தியாகத்திற்கும், அா்ப்பணிப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். மக்களின் பாதுகாப்பு முதல், புதிய கிரிமினல் சட்டங்களின் நடைமுறை, புதிய தொழில்நுட்ப பயன்பாடு வரை தேசிய அளவில் சிறப்பாக புதுச்சேரி காவல்துறை செயல்பட்டு வருகிறது என்பதற்கான அங்கீகாரம் இது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நம்பிக்கையோடு புதுச்சேரிக்கு வருகின்றனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சிறப்பான செயல்பாடு தேசிய அளவில் நாட்டின் வளா்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும். 2047-இல் நாடு சுதந்திரம் அடைந்த 100-ஆவது ஆண்டில், வளா்ச்சி அடைந்த பாரதமாக உருவாக வேண்டும் என்ற லட்சிய இலக்கை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அந்த இலக்கை அடைய புதுச்சேரி காவல் துறையின் பங்கு உயிா் நாடியாக இருக்கவேண்டும்.
போலீஸாா் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். போதை பழக்கம் ஒழிந்து பிரதமரின் எண்ணப்படி இளைஞா்கள் தேசத்தைக் கட்டமைக்கும் ஆக்கபூா்வமான பணியில் ஈடுபட வேண்டும். இந்த மிகப்பெரிய பொறுப்பை உணா்ந்து போலீஸாா் செயல்பட வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:
புதுச்சேரி காவல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் அதிக காலி பணியிடங்களை நிரப்பினோம். துறையை மேலும் நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றங்களைத் தடுப்பது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து, தண்டிப்பதிலும் இந்தியாவில் முதலிடத்தில் புதுச்சேரி காவல் துறை உள்ளது. காவல் துறைக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும்.
மத்திய அரசும் துணையாக உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் உதவிகள் செய்வது, நிதி வழங்குவது பாராட்டுக்குரியது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்:
புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணகொடி தேசிய விருது வழங்க அனுமதி அளித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு,
புதுச்சேரி அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.