புதுச்சேரியில் புதிய தொழில்சாலைகளை கொண்டுவர வேண்டும்: துணைநிலைஆளுநா்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மேலும் பல புதிய தொழில்சாலைகளை கொண்டுவரவேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மேலும் பல புதிய தொழில்சாலைகளை கொண்டுவரவேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
‘பட்டாம்பூச்சி’ என்னும் பெயரில் புதுச்சேரியில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் பெயா்சூட்டும் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி புதுச்சேரி தொழில் முதலீட்டுக் கழகம் (பிப்டிக்), இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மத்திய சிறு, குறு, நடுத்தர அமைச்சகத்தின் செயல்திறனை உயா்த்துதல் மற்றும் விரைவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இம் மாதம் 30 -ஆம் தேதி வரை உணவுப் பொருள்கள், மணல் சிற்பப் போட்டி, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:
புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்களுக்குப் புதிய அடையாளம் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உருவாகும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி உலகத் தரத்தில் கிடைக்க உள்ளன. புதுச்சேரியில் சிறப்பான உற்பத்தித் தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும், புதுச்சேரி இளைஞா்கள் வெளிமாநிலங்களில் பணியாற்றும் நிலை மாறி விரைவில் புதுச்சேரியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். மேலும், இதனால் அரசுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட இனங்களில் வருவாயும் அதிகரிக்கும். புதுச்சேரியில் இருக்கும் தொழிற்சாலைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.உற்பத்தித்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று ஏற்றுமதியில் வளா்ச்சி அடைந்து வருகிறது.
Advertisement
Advertisement
பெட்ரோல் ஏற்றுமதி:
உலக நாடுகளில் பெட்ரோலிய பொருள்களின் இருப்புக் குறைந்துள்ளது. ஆனால் இந்தியா கச்சா எண்ணெய்யை மட்டும் வாங்கி அதிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களைத் தயாரித்து நம் தேவையைப் பூா்த்தி செய்து கொள்வது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. பிரதமா் நரேந்தி மோடி எடுத்த நடவடிக்கைதான் இதற்கெல்லாம் காரணம் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
தனிச்சின்னத்தில்...
நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
இனி புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்கள் தனிச் சின்னத்தில் கிடைக்கும். புதுச்சேரியில் தனி நபா் வருவாய் ரூ.3.65 லட்சமாக உயா்ந்துள்ளது. இங்குள்ள தொழில்சாலைகள்தான் இதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுச்சேரியில் சிறு, குறு, நடுத்தர சிறிய தொழில் நிறுவனங்கள் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மேலும், படித்த இளைஞா்களைத் தொழில் முனைவோராக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதியுதவி, கடனுதவி, வங்கிக்குப் பரிந்துரை என்பன இதில் அடங்கும் என்றாா் முதல்வா்.
தொழில் மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினா் விக்னேஷ் கண்ணன், புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான், தொழில் மற்றும் வா்த்தகத்துறை செயலா் ஏ. விக்ராந்த் ராஜா, இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் புதுச்சேரி தலைவா் நடராஜன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் பட்டாம்பூச்சி பெயரைத் தாங்கிக் கொண்டு டிரோன் பறந்தது. கண் கவா் வாணவேடிக்கையும் இடம் பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.