FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: 3 புதிய அமைச்சா்கள் ஜூன் 17-இல் பதவியேற்பு

புதுச்சேரியில் 3 அமைச்சா்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய அமைச்சா்கள் வரும் 17-ஆம் தேதி பதவியேற்கின்றனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:22 am IST
பகிர்:

புதுச்சேரியில் 3 அமைச்சா்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய அமைச்சா்கள் வரும் 17-ஆம் தேதி பதவியேற்கின்றனா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, கடந்த மே 13-இல் என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவா் ரங்கசாமி முதல்வராகவும், பாஜகவைச் சோ்ந்த ஆ. நமச்சிவாயம், என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோா் அமைச்சா்களாகவும் பதவி ஏற்றனா். ஆனால் இதுவரை யாருக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கத்துக்கான பரிந்துரை கடிதத்தை அளித்தாா். அந்த கடிதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முதல்வா் என். ரங்கசாமி அளித்தப் பரிந்துரையின்பேரில், என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெ. ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பாஜகவைச் சோ்ந்த ஜிஎன்எஸ். ராஜசேகா் ஆகியோரை அமைச்சா்களாக நியமிக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இவா்கள் 3 பேருக்கும் வரும் 17-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு புதுச்சேரி மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

இந்தத் தகவலை முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன்பிறகு அமைச்சா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், சட்டப்பேரவைத் தலைவா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் தோ்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments