புதுச்சேரி: மீண்டும் வெல்லுமா என்.ஆர். மாயாஜாலம்?
புதுச்சேரி பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து...
புதுச்சேரி - பரப்பளவில் சிறிய யூனியன் பிரதேசம் என்ற போதிலும், அங்கு அரங்கேறும் அரசியல் காட்சிகள் உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், மிகப்பெரிய தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும் அளவுக்கு உள்ளன.
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இங்கு சாமானியர்களின் வெற்றிமுகமாக தன்னை அடையாளப்படுத்திவரும் முதல்வர் என். ரங்கசாமியின் மீண்டும் ஆட்சியமைக்கும் கனவு பலிக்குமா? திமுக - காங்கிரஸ் இடையே களத்தில் உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு இருக்குமா? மாற்று அரசியல் குரலுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் எந்த அணியின் வாக்குகளை அதிகம் பிரிக்கப்போகிறது போன்றவை பரவலாக விவாதிக்கப்படும் விஷயங்களாக உள்ளன.
உள்கட்சி மோதல்களுக்கும் குழப்பங்களுக்கும் பிரசித்தி பெற்ற புதுச்சேரியில் ஆளும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஓர் அணியாகவும், காங்கிரஸ், திமுக இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணி எதிரணியாகவும், நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும், புதிய வரவாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் வெற்றி வியூகங்களை வகுத்து வருகின்றன.
இருந்தபோதிலும், இரண்டு தேசிய கட்சிகள் இடம்பெற்ற அணிகள் கூட்டணிக்குள் ஒருமித்த தேர்தல் புரிதலை எட்டுவதற்குப் பெரிதும் சிரமப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
கடைசிவரை இழுபறி: வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான மார்ச் 23-ஆம் தேதிதான் காங்கிரஸ் 16, திமுக 14 தொகுதிகளில் (விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி உள்ஒதுக்கீடு) போட்டியிடுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளில் தனித்துக் களம் காண்பதாகவும், பிற தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும் அறிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியுள்ளது. இந்த கடைசி நேர இழுபறி மற்றும் தன்னிச்சைப் போக்குகள், களத்தில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆளும் கூட்டணியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவெடுத்தன. அதிமுக மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிதாக தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மத்தியிலும், யூனியன் பிரதேசத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருப்பதால் இரட்டை என்ஜின் முழக்கம் மற்றும் புதுச்சேரிக்கு தன்னாட்சியுடன் கூடிய மாநில அந்தஸ்து பெறுவதே இலக்கு என்ற குரலுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் வியூகங்களை முதல்வர் ரங்கசாமி வகுத்து வருகிறார். இது குறித்து புதுச்சேரி வந்த பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தவும் செய்தார்.
பாஜக தனது பங்குக்கு தேர்தல் பரப்புரை வியூகங்களை வழிநடத்த மேலிடப் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரை களத்தில் இறக்கி பரப்புரை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறது.
ஓயாத பிரச்னை: இங்கு தீர்க்கப்படாத பிரச்னைகளாக ஆளும் முதல்வர் அலுவலகத்துக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான நிர்வாக அதிகாரம் மற்றும் அது தொடர்பாக முடிவெடுப்பதில் நிலவும் நடைமுறை சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இவை தவிர, வழக்கமான ஊழல் முறைகேடு புகார்கள், விதிமீறல்கள் போன்றவை தேர்தல் கால பிரச்னைகளாக இம்முறையும் எழுப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் பரப்புரையில் காட்டும் ஆர்வத்தை விட, காங்கிரஸ் கட்சியினர் பலரும் தனிப்பட்ட முறையில் பல தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதை திமுக தலைவர்களோ தொண்டர்களோ ரசிக்கவில்லை என்பதே உண்மை.
தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் என். ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், முன்னாள் முதல்வரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பியபோதும் அவருக்கு பிரதேச காங்கிரஸ் தலைவரான வைத்திலிங்கம் கட்சியின் அங்கீகார படிவத்தை வழங்க மறுத்ததால் உள்கட்சி குழப்பம் தீவிரம் அடைந்துள்ளது.
மறுபுறம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் புதுச்சேரியில் அசாதாரண நிலைமை உருவாகியுள்ளது என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது. புதுச்சேரியில் தமிழ் பேசும் நகர்ப்புறப் பகுதிகளிலும், இளம் வாக்காளர்களிடையேயும் தவெக தலைமைக்குள்ள செல்வாக்கு, ஆளும் கூட்டணி, இண்டி கூட்டணியின் வெற்றி வித்தியாசத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கியக் காரணியாகலாம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
அன்றும், இன்றும்: 1974, 1977 ஆகிய ஆண்டுகளில் புதுச்சேரியில் ஆட்சி அமைத்த அதிமுக, 2001-இல் 12.6 சதவீதம் 2016-இல் கிட்டத்தட்ட 17 சதவீதம் வரை வாக்குகளைக் கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு புதுச்சேரியில் அதிமுக தனது தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்த பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பது அதன் தற்போதைய தொகுதிப் பங்கீடு முடிவில் வெளிப்பட்டுள்ளது.
மறுபுறம், 2016-ஆம் ஆண்டுவரை போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் தொகை இழந்ததாகப் பார்க்கப்பட்ட பாஜக, 2021-இல் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த பிறகு தனக்கான பங்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில்தான் சுமார் ரூ. 2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க கடந்த மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து ஆளும் அரசைப் பாராட்டிச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரண்டு மாதங்களில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்து தனது கட்சியினரை உற்சாகப்படுத்திச் சென்றுள்ளார்.
சவால்கள்: இண்டி கூட்டணிக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க சவாலாக, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளில் போட்டியிடும் தவெகவை குறிப்பிடலாம். கடைசி நேரத்தில் தவெக கூட்டணியில் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையிலான நேயம் மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியது தவெக.
புதுச்சேரியின் அரசியலை வடிவமைப்பது, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்திய மற்றும் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிகளே ஆகும். அங்குள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சிறிய அளவில் இருப்பதால் அரசியல் கூட்டணியில் மாற்றம் ஏற்படுவது, சுயேச்சைகள் கட்சிகளில் சேருவது அல்லது அணி மாறுவது, கட்சித் தாவல்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பதவி விலகல்கள் போன்றவை தேர்தல் கால இயல்புகளாகிவிட்டன.
இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில் முதல்வர் என். ரங்கசாமி ஆட்சியை தக்க வைக்க என்ன மாயாஜாலம் செய்வார் என்பதும், எதிரணியில் திமுக, காங்கிரஸ் இணக்கத்துடன் களத்தில் பணியாற்றுவார்களா என்பதும், விஜய்யின் தவெக யாருடைய வாக்குகளை விழுங்கும் என்பதும் உற்று கவனிக்க வேண்டிய விஷயங்களாகியுள்ளன.