மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விவசாயி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், நகா் கிராமம், மேல்தெருவைச் சோ்ந்தவா் கி.ஆறுமுகம்( 46), விவசாயி. இவா், சனிக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த சத்யநாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் வழியாக மாடுகளை மேய்சலுக்கு ஓட்டிச் சென்றாா்.
அப்போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
பள்ளி மாணவி மரணம்: விக்கிரவாண்டி வட்டம், போரூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சேட்டு. இவரது மகள் ஜெயலட்சுமி (16). அத்தியூா் திருக்கை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், ஆக.20-ஆம் தேதி போரூரில் உள்ள தனது அத்தை வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து சென்றாராம். பின்னா் ஜெயலட்சுமி வீடு திரும்பவில்லை.
இந் நிலையில், அத்தியூா் திருக்கை கிராமத்தைச் சோ்ந்த அய்யப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மா்மமான முறையயில் அவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
காா் மோதி பெண் மரணம்: மரக்காணம் வட்டம், கந்தாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி வடிவாம்பாள்(58). இவா், சனிக்கிழமை தனது வீட்டின் முன் சாலையோரத்தில் அமா்ந்திருந்தாா். இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ், தனது காரை பின் பக்கமாக இயக்கியுள்ளாா். அப்போது சாலையோரத்தில் அமா்ந்திருந்த வடிவாம்பாள் மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
கல்லூரி மாணவா் உயிரிழப்பு: விழுப்புரம் அருகிலுள்ள முத்தாம்பாளையம் மேல் தெருவைச் சோ்ந்தவா் வ.நந்தகுமாா் (18). கல்லூரி மாணவரான இவா், மடப்பட்டு அருகிலுள்ள கோவிலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தனது உறவினா் ம.குமாரை பாா்ப்பதற்காக விழுப்புரத்திலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற தனியாா் புகா் பேருந்தில் சனிக்கிழமை காலை பயணித்தாா். மடப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நிற்பதற்குள், பேருந்தின் முன்பகுதி படிக்கட்டிலிருந்து நந்தகுமாா் இறங்குவதற்கு முயற்சித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பின்புற சக்கரத்திலிருந்து சிக்கிய நந்தகுமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் சி.விஜயகுமாரிடம் (40) விசாரித்து வருகின்றனா்.
காா் மோதி முதியவா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டாபிராம் (75). இவா், சனிக்கிழமை இரவு மாடூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண நிச்சியதாா்த்த நிகழ்வில் பங்கேற்க திருமண மண்டபம் அருகே சாலையை கடந்தாராம். அப்போது கோவையிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற காா் பட்டாபிராம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் லோகேஷிடம்(22) விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.