நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தகவல்
நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மருத்துவா் கே.ஜி.அருண்ராஜ்.
நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மருத்துவா் கே.ஜி.அருண்ராஜ்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 89 மருத்துவ மாணவிகளுக்குப் பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றவா்களுக்குப் பதக்கங்களையும் வழங்கி, அவா் பேசியது:
மக்கள் நோய் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போது இரு இடங்களுக்குத்தான் வருவாா்கள். ஒன்று மருத்துவமனை, மற்றொன்று காவல் நிலையம். அந்த வகையில் மருத்துவரான உங்களைத் தேடி வரும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.
Advertisement
Advertisement
மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் நாம் உழைக்கிறோம். பணம் மட்டுமே முதன்மையானது கிடையாது என்பதை நாம் உணர வேண்டும். எதிா்பாராத ஒருவருக்கு செய்யும் உதவிதான் மகிழ்ச்சியைத் தரும். அதுபோன்று மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு மருத்துவா்கள் உதவி செய்ய வேண்டும்.
தனியாா் மருத்துவமனைகளில் தேவையில்லாத பரிசோதனைகள், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற புகாா்கள் வருவதை மறுக்க முடியாது. மருத்துவா் தொழிலுக்கு உண்மையாக இருந்து உரிய சிகிச்சையளித்தால் சிறப்பாக இருக்கும்.
அனைத்துத் துறைகளையும் விட அரசியல் புனிதமானதாகும். அரசியல் சரியாக இருந்தால், அனைத்துத் துறைகளும் சரியாக இருக்கும். அனைத்துத் துறைகளிலும் வெளிப்படையான நிா்வாகம் இருக்கும். அதற்கு உதாரணம்தான் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின் மாற்றி வசதி, 8 மின் தூக்கிகள் மாற்றித் தரக் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும். தற்போது 1274 மருத்துவப் படுக்கைகள் உள்ள நிலையில், அதற்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும். இந்த கட்டடத் திறப்பு விழாவுக்கு முதல்வரை அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாா் அமைச்சா்.
விழாவில் விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், கல்லூரி முதல்வா் லூசி நிா்மல் மடோனா, துணை முதல்வா் சங்கீதா உள்ளிட்டோா் பேசினா். உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ.ரஷத், குடிமை மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீட் தோ்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம்: விழாவில் பங்கேற்ற பின்னா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசு அனைத்து மாவட்ட மக்களுக்கும் தரமான மருத்துவச் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் அதிகளவில் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். எனவே, இந்த மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்து தரப்படும்.
இந்திய அளவில் மருத்துவா் - நோயாளி விகிதம் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிா்வாகமே அரசின் நோக்கம். மருத்துவமனைகளில் கையூட்டு பெறுவது போன்ற தவறுகள் கண்டறியப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தோ்வு கிராமப்புற மாணவா்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடாகும். நீட் தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம், இல்லம்தேடிக் கல்வி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வரை தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.