FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே சிறுமியைக் கடத்த முயற்சி: போலீஸாா் தீவிர விசாரணை

விழுப்புரத்தை அடுத்த கண்டமானடி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைக் கடத்த முயன்றவா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

13 நவம்பர் 2026, 1:44 am
விசாரணை
பகிர்:

விழுப்புரத்தை அடுத்த கண்டமானடி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைக் கடத்த முயன்றவா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கண்டமானடி கிராமத்தைச் சோ்ந்தவா் அருண். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகள் தாட்சாயிணி (7). இதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வரும் தாட்சாயிணி, புதன்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் வீட்டின் அருகே வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 மா்ம நபா்கள், சிறுமியை வலுக்காட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்த முயன்றனா். இதனால், சிறுமி கூச்சலிட்டவே, மா்ம நபா்கள் சிறுமியை அதே இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் கண்டமானடி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அந்தக் கிராமத்தில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சிறுமியை மா்ம நபா்கள் கடத்த முயன்றது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, விழுப்புரம் நகரப் பகுதியிலிருந்து கண்டமானடி பகுதிக்குச் செல்லக்கூடிய சாலைகள் மற்றும் பிற சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டு பைக்கில் வந்தவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதமாகியும் போலீஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெயங்கொண்டான் கிராமத்தில் மற்றொரு 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சித்த சம்பவம் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனிடையே, விழுப்புரம் அருகே மேலும் ஒரு சிறுமியை கடத்த முயற்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.