FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இனிப்பா? காரமா? உங்கள் உணவுப் பழக்கத்தைச் சொல்லும் ஜாதகத்தின் 2-ம் வீடு!

ஜாதகத்தின் இரண்டாம் வீடு, அதில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் மூலம் ஒருவரின் உணவு விருப்பங்களும், சுவையும் பற்றி..

உணவும், சுவையும் - file photo
பகிர்:

வேத ஜோதிடத்தில் ஒருவரின் உணவுப் பழக்கம். சுவை உணர்வுடன் நேரடியாகத் தொடர்புடையது இரண்டாவது வீடு. மறைமுகமாக, உங்கள் ஜாதகத்தில் உள்ள இரண்டாம் வீடும், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களும் ஒருவரின் சுவை உணர்வை வெகுவாகப் பாதிக்கின்றன.

உணவைப் பொருத்தவரை நாம் மேற்கொள்ளும் தேர்வுகள், நாம் எதைச் சாப்பிட விரும்புகிறோம் என்பதை இரண்டாவது வீடு முக்கிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. உணவு இயற்கையாகவே நமது அடையாளத்துடன் தொடர்புடையது. மேலும், 2வது வீடு உணவுடன் நமது உறவு, காதலை வலியுறுத்துகிறது. மற்ற எல்லா உறவுகளையும் போலவே, நாம் உணவோடு பகிர்ந்துகொள்ளும் உறவும் மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் விலையுயர்ந்த சாக்லேட் கேக்கை விரும்புவீர்கள், மற்ற நேரங்களில் சாதாரணமான சாலட்(வெறும் காய்கறிகள்) தேர்வு செய்யலாம்.

இயல்பாகவே காலபுருஷ தத்துவத்தின்படி இரண்டாம் வீடு (வாக்கு, தானம், குடும்பம்) ரிஷப ராசியுடன் தொடர்புடையவை, குடும்பத்துடனும் பிணைப்பைக் கொண்டுள்ளது. உணவு தொடர்பான முக்கியப் பிரச்னைகளுக்கும் குடும்பத்தில் நிலவும் சூழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. இதனால்தான், குடும்பத்துடன் இணைந்து உண்ணும் உணவானது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், கொண்டாட்டங்களுக்கும், உரையாடல்களுக்கும் ஒரு சிறந்த வழியாக அமைகிறது.

Advertisement

Advertisement

உங்கள் இரண்டாம் வீட்டில் (ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு அடுத்த வீடான) உள்ள கிரகங்களின் தாக்கம், மற்ற உணவுகளை விடக் குறிப்பிட்ட சில உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களைத் தூண்டுகிறது. உங்கள் சுவை உணர்வை நிர்வகிக்கும் மூளையின் பகுதிகளை இக்கிரகங்கள் நேரடியாகப் பாதிக்கின்றன.

இரண்டாம் வீட்டில் சந்திரன் அமைந்திருப்பது, ஒருவரை இனிப்புகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ளத் தூண்டுகிறது. அதேவேளையில், சந்திரன் நிலையற்ற மனநிலையையும் குறிக்கிறது. எனவே, ஒருவர் வழக்கமான விருப்பங்களை விடுத்து, பொதுவாக அவர் தேர்ந்தெடுக்காத உணவுகளைத் தேர்ந்தெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால்...

அவர் அரிசி உணவுகள், ரொட்டி வகைகள், பழச்சாறுகளை அதிகம் விரும்பக்கூடும். பாதிக்கப்பட்ட அல்லது பலவீனமான சந்திரன், ராகு அல்லது கேதுவுடன் தொடர்புடைய சந்திரன், ஒருவரை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்திற்கும், மதுவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் மாற்றக்கூடும். ரொட்டி, கிரீம் கலந்த உணவுகள் மற்றும் குக்கீஸ்கள் போன்றவை அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாக இருக்கலாம்.

பரிகாரங்கள் - உங்கள் இரண்டாம் வீட்டில் உள்ள சந்திரனின் ஆற்றலைச் சீர்செய்ய, திங்கள் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது. இரவில் குளிர்ந்த அல்லது கெட்டுப்போன உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும். புத்துணர்ச்சியான உணவுகள் மற்றும் நீர்ச்சத்து மிக்க பழங்களை உட்கொள்ளவும். பால் சார்ந்த பொருள்கள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் (சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை), சூப் மற்றும் உடலுக்கு இதமளிக்கும் உணவுகளை உட்கொள்வது உங்கள் இரண்டாம் வீட்டில் உள்ள சந்திரனின் பலத்தை அதிகரிக்கும்.

ஒருவர் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் சூரியன் அமைந்திருந்தால்,

அவர் காரமான மற்றும் சூடான உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. ராகு, கேது, சனி அல்லது செவ்வாய் ஆகிய தீய கிரகங்களின் சேர்க்கை சூரியனுக்கு ஏற்படும்போது, அது அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை உருவாக்கக்கூடும்.

பரிகாரங்கள் - அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது; ஒருவேளை உட்கொண்டால், அதன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியனின் ஆற்றலைச் சீராக்க, அதிகளவு தண்ணீர் அருந்துங்கள், மது அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள் மற்றும் சுவையற்ற அல்லது தரமற்ற உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால், உணவில் போதுமான அளவு உப்பு சேர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், காரமான உணவுகள் மற்றும் இலவங்கப்பட்டை, மிளகு போன்ற நறுமணப் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியனின் பலத்தை அதிகரிக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில், இரண்டாம் வீட்டில் உள்ள புதன் உணவு விருப்பங்களை எவ்வாறு பாதிக்கிறது?

இவர்கள் கீரை வகைகளைச் சாப்பிடுவதில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். அனைத்து வகையான சாலடுகள், வெண்டைக்காய், சுரைக்காய் மற்றும் காலிஃபிளவர் ஆகியவை அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கலாம்.
சமநிலையான புதன் கீரை வகைகளை ஒருவர் உணவின் முக்கிய அங்கமாக ஆக்குகிறது, பலவீனமான புதன் ஒருவரை அதிக முட்டைகளைச் சாப்பிடத் தூண்டக்கூடும்.

பரிகாரங்கள் - உங்கள் இரண்டாம் வீட்டில் சமநிலையற்ற நிலையில் உள்ள புதன் கிரகத்தின் தாக்கத்தைச் சரிசெய்ய, உங்கள் உணவில் கோதுமை, புதினா, பார்லி ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். புதன் கிரகத்தின் ஆற்றலை வலுப்படுத்துவதில் இந்த மூன்று பொருள்களும் குறிப்பாகப் பெரிதும் உதவுகின்றன.

புதன் கிழமைகளில் தாவர அடிப்படையிலான உணவுகள் (காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள்) ஆகியவற்றை உட்கொள்வது, புதன் கிரகத்தின் ஆற்றலை அதிகரிக்கவும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக புதன்கிழமைகளில் பச்சைப்பயறு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்களுக்குத் துரித உணவுகள் மீது விருப்பம் இருக்கலாம். எனவே, பீட்சா, பர்கர் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது கவனமாக இருங்கள். உங்கள் புதன் கிரகத்தின் ஆற்றலை வலுப்படுத்த, வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் மற்றும் கிரான்பெர்ரி ஆகியவற்றை உங்கள் அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் உணவு விருப்பங்களை எவ்வாறு பாதிக்கிறது?

இரண்டாம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பது உங்களுக்குச் சிறந்த உணவு ரசனையை அளிக்கிறது. குறிப்பாக, இனிப்பு வகைகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகளை நீங்கள் அதிகம் விரும்பலாம்.

ஆடம்பரமான உணவுகள் மற்றும் கவர்ச்சிகரமான பேக்கேஜிங் கொண்ட உணவுகள் உங்களை வெகுவாகக் கவரும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தேன், ரொட்டி வகைகள், கார்ன் ஃபிளேக்ஸ், சாக்லேட் கேக்குகள், ட்ரஃபிள்ஸ் போன்றவற்றை நீங்கள் விரும்பக்கூடும். சுக்கிரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், அது உங்களுக்குத் தயிர் மற்றும் நாட்டு நெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி, உங்களை அளவுக்கு அதிகமாக உண்ணத் தூண்டலாம்.

பரிகாரங்கள் - உங்கள் இரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரனின் ஆற்றலை வலுப்படுத்தத் தயிர் மற்றும் நெய் ஆகியவை சிறந்த உணவுகளாகும்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால்...

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். செவ்வாய் வலுவாக இருந்தால், சாக்லேட், எண்ணெயில் பொரித்த உணவுகள் மீது ஈர்ப்பு உண்டாகும். காரமான மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் விரும்பலாம். அல்வா உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கலாம்.

ராகு, கேது அல்லது சனி போன்ற தீய கிரகங்களின் பார்வை செவ்வாய் மீது விழும்போது, போதைப் பழக்கங்கள் அல்லது தவறான உணவுப் பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம். உணவு உட்கொள்ளல் தொடர்பான கோளாறுகளும் விரைவாக ஏற்படலாம்.

பரிகாரங்கள் - அசைவ உணவுகளின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் உள்ள செவ்வாயின் ஆற்றலைச் சமநிலைப்படுத்த...

உங்கள் உணவை பெரும்பாலும் 'சாத்வீக' தன்மையுடையதாக மாற்றிக்கொள்ளுங்கள். உணவில் இனிப்புகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அவற்றை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். செவ்வாய் பலவீனமாகவோ அல்லது அதன் ஆற்றல் குறைந்தோ இருந்தால், தக்காளி, மிளகாய் போன்ற சிவப்பு நிற உணவுகளை (அளவாக) உட்கொள்ளுங்கள்.

இரண்டாம் வீட்டில் சனி அமைந்திருந்தால்...

உங்களுக்கு ஆற்றல் தரும் உணவுகளின் மீது விருப்பத்தை ஏற்படுத்துகிறது. கசப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகளின் மீதும் உங்களுக்கு மிகுந்த ஈர்ப்பு இருக்கலாம். நீங்கள் உடல் மெலிந்தவராக இருந்தாலும், உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு எப்போதும் சற்று அதிகமாகவே இருக்கக்கூடும்.

சனி ஒரு தீய கிரகமாகக் கருதப்படுகிறது; ராகு, கேது அல்லது செவ்வாய் போன்ற பிற தீய கிரகங்களின் தாக்கம் அதனுடன் சேரும்போது, அது போதைப் பழக்கங்கள் அல்லது புகையிலை மெல்லும் பழக்கத்திற்கு வழிவகுக்கலாம். அதேசமயம், இரண்டாம் வீட்டில் சனி நல்ல நிலையில் அமைந்திருந்தால், அது எளிமையான உணவுப் பழக்கத்தையும் 'சாத்வீக' உணவுகளின் மீதான விருப்பத்தையும் வளர்க்கிறது.

இரண்டாம் வீட்டில் சனி இருக்கும்போது,

ஆடம்பரமான உணவுகளை விட எளிமையான முழுமையான உணவை உண்ணவே நீங்கள் விரும்பலாம். இரண்டாம் வீட்டில் சனி வலுவாகவோ அல்லது சாதகமான நிலையிலோ இருந்தால், நீங்கள் குறைவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளவும் விரும்பக்கூடும்.

பரிகாரங்கள் - பழைய அல்லது கெட்டுப்போன உணவுகள், துரித உணவுகள் மற்றும் உறையவைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். உங்களுக்கு உளுந்து மிகவும் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் வீட்டில் உள்ள சனியின் ஆற்றலை மேம்படுத்த, கருப்பு திராட்சை மற்றும் உளுந்து போன்ற கருப்பு நிற உணவுப் பொருள்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் வீட்டில் குரு வலுவாக அமைந்திருந்தால்,

பப்பாளி, வாழைப்பழம், கடலைப்பருப்பு, சிட்ரஸ் பழங்கள், நெய், கொட்டை வகைகள், விதைகள் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற மஞ்சள் நிற உணவுகள் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கும். இனிப்பு வகைகளுக்கு உங்கள் வாழ்வில் ஒரு சிறப்பான இடம் உண்டு.

சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் விரும்புவீர்கள்; சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று உணவுப் பொருள்களை வாங்குவது உங்களுக்கு ஒருவித நிறைவான, செழிப்பான உணர்வைத் தரும். ஒருவேளை குரு கிரகம் பலவீனமாகவோ அல்லது பாதகமான நிலையிலோ இருந்தால், அது உங்களை அளவுக்கு அதிகமாக உண்ணத் தூண்டுவதுடன், உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் மீது அதிக நாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

பரிகாரங்கள் - இரண்டாம் வீட்டில் உள்ள குருவின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த, உங்கள் உணவில் கடலைப்பருப்பு, கடலை மாவில் செய்யப்பட்ட உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அளவுக்கு மீறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால், தக்காளி, பூண்டு, எலுமிச்சை, நறுமணம் மிக்க பழச்சாறுகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மொறுமொறுப்பான உணவு வகைகளை உண்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ராகு ஒரு அசுப கிரகமாகும்; இது உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் அமரும்போது, அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை (அதிக உணவுப் பசி) ஏற்படுத்தக்கூடும். நீங்கள் உணவிற்காக அதிகப் பணத்தைச் செலவிட நேரிடலாம், அத்துடன் வெளிநாட்டு வகை உணவுகளை உண்ணும் ஆர்வமும் உங்களுக்கு ஏற்படலாம்.

ராகு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறான உணவு விருப்பங்களுடன் தொடர்புடையது. இரண்டாம் வீட்டில் அமர்ந்து விருச்சிகம், மேஷம், சிம்மம் அல்லது கடகம் ஆகிய ராசிகளுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது செவ்வாய்க் கிரகத்தின் எதிர்மறைப் பார்வையைப் பெற்றாலோ, இது மது மற்றும் பிற போதைப் பொருள்கள் (புகையிலை, போதை மருந்துகள்) மீதான அடிமைத்தனத்தை உருவாக்கக்கூடும். உங்கள் ஜாதகத்தில் ராகு இரண்டாம் வீட்டில் அமைந்திருக்கும்போது, நீங்கள் உணவை மிக அவசரமாக உண்ணும் வாய்ப்பும் உள்ளது.

பரிகாரங்கள் - இரண்டாம் வீட்டு ராகு வழக்கத்திற்கு மாறான உணவு விருப்பங்களைத் தூண்டக்கூடும் என்றாலும், எளிமையான, சத்தான அடிப்படை உணவுகளை மட்டுமே உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உள்ளூர் சார்ந்த எளிய உணவுகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்வதோடு, தேவையற்ற உணவு விருப்பங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இரண்டாம் வீட்டு ராகுவின் ஆற்றலைச் சீராக்க, துரித உணவுகள் (குறிப்பாக எண்ணெய்யில் பொரித்த உணவுகள்) மற்றும் மது அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் வீட்டில் உள்ள ராகு,

உணவு உண்ணும் பழக்கத்தையே ஒரு சக்திவாய்ந்த ஆன்மிகப் பயிற்சியாக மாற்ற உங்களுக்கு உதவும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவசரப்படாமல் உணவின் மீது முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் சாப்பிடுவது மட்டுமே.

ராகுவைப் போலவே, கேதுவும் இரண்டாம் வீட்டில் அமரும்போது வெளிநாட்டு மற்றும் வித்தியாசமான உணவுகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது (குறிப்பாக மீனம், தனுசு, சிம்மம் அல்லது விருச்சிக ராசிகளில் அமரும்போது).

செவ்வாய் அல்லது சனி போன்ற தீய கிரகங்களின் தாக்கத்திற்கு உள்ளாகும்போதோ அல்லது கன்னி, மிதுனம் அல்லது கும்ப ராசிகளில் அமரும்போதோ, இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களையும் அடிமைப்படுத்தும் வகையிலான உணவுப் போக்குகளையும் உருவாக்கக்கூடும்.

உங்கள் ஜாதகத்தில் கேது இரண்டாம் வீட்டிலிருந்தால்,

உணவின் மீது கவனம் செலுத்தாமல் அல்லது உணர்வுப்பூர்வமான விழிப்புணர்வு இன்றி உண்ணும் பழக்கம் காணப்படலாம். மேலும், குடும்பச் சூழலில் நிலவும் உணர்வுப்பூர்வமான வெறுமை அல்லது குறைபாடுகள் காரணமாக உணவு தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

பரிகாரங்கள் - இரண்டாம் வீட்டில் உள்ள கேது உங்கள் உணவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இதைச் சரிசெய்ய, உண்ணும்போதே உணவில் உள்ள சத்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கேதுவின் ஆற்றலை மேம்படுத்த, உணவை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் உண்பது மிக முக்கியம்.

இரண்டாம் வீட்டில் உள்ள கேதுவின் நற்பலன்களை உறுதிப்படுத்த, சமச்சீரான உணவுடன் முறையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள்.

இரண்டாம் வீடும் பரிகாரங்களின் முக்கியத்துவமும்

இரண்டாம் வீடு நாம் உட்கொள்ளும் உணவு, உணவுப் பழக்கவழக்கங்கள், வாய், பற்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இந்த வீட்டின் மூலமாகவே நாம் பௌதீக உலகிலும் (அதே சமயம் உடல் வழியாக) ஆன்மிக உலகிலும் செயல்பட முடிகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் இந்த வீட்டில் அமைந்துள்ள கிரகங்களும், அவை மற்ற கிரகங்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளும் (பார்வைகளும்), ஊட்டச்சத்து, உடல் வளர்ச்சி மற்றும் உணவுடனான உங்கள் உறவுமுறை குறித்த உங்கள் கண்ணோட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் உள்ள கிரகங்களை ஆராய்வதன் மூலம், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொண்டு, அவற்றில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும். வியட்நாமியத் துறவியான திக் நாட் ஹான் தனது ‘How to Eat’ (எப்படி உண்பது) என்ற நூலில், உணவருந்துதலை ஒரு தியான முறையாக எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

உங்கள் இரண்டாம் வீட்டில் உள்ள கிரகங்களுக்கு ஏற்ற எளிய உணவு சார்ந்த பரிகாரங்களை அறிந்து, அவற்றை ஒவ்வொன்றாகப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மனம் மற்றும் உடலுக்கு இடையே ஒரு நேர்மறையான பிணைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.

தொடர்புக்கு : WA 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments