திருப்பதிக்குச் செல்லக்கூடாத ராசிகள் எவை? ஜோதிட சூட்சுமம் சொல்லும் உண்மை!
திருமலை தரிசனம் எல்லா ராசிகளுக்கும் ஏற்றதா? ஜோதிட ரகசியம் பற்றி இக்கட்டுரையில்...
ஒவ்வொருவருக்கும் அவரவர் குலதெய்வம் மற்றும் உபாசனை தெய்வங்கள் இருப்பார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, ஸ்ரீ ரங்கம், திருச்செந்தூர், சமயபுரம், திருவேற்காடு, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி சபரிமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய திருத்தலங்களுக்கு வருடத்திற்கு ஓரிரு முறை தவறாமல் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது அவரவர் நம்பிக்கையாகும்.
இவற்றில் பலரும் திருமலைக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை முக்கியமான வழிபாடாகக் கொண்டுள்ளனர். "திருப்பதி சென்றால் திருப்பம் உண்டாகும்" என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே பரவலாக உள்ளது. திருமணம், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடக்கம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ திருப்பதி சென்று வழிபடுவதையும் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தொழிலதிபர்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற நன்கொடைகளைச் செய்து, பெருமாளின் அருளால் தங்கள் வாழ்க்கையும் செல்வமும் மேலும் சிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
Advertisement
Advertisement
சமீப நாள்களாக ஒரு சில ராசிக்காரர்கள் திருப்பதிக்குச் செல்லக்கூடாது என்று சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதன் உண்மை என்ன? அதற்கான காரணங்களை ஜோதிட ரீதியாக இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.
திருப்பதிக்குப் போகக்கூடாது என்று எந்தவித ஜோதிட நூல்களிலும் சொல்லவில்லை. ஜோதிடக் கண்ணோட்டத்தில், சந்திரனுடன் தொடர்புடைய ராசிகள் மற்றும் சந்திரன் நட்சத்திர அதிபதி சுபத்துவம் பெற்றவர்களுக்குத் திருப்பதி தரிசனம் சிறப்பான ஆன்மிக அனுபவத்தையும் மனநிறைவையும் அளிக்கும். அதுமட்டுமின்றி, ஜாதகத்தில் புதன் சுபத்தன்மை பெற்றிருப்பதும், புதனின் சார பலம் இருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது. புதனின் அதிதேவதையாகத் திருமால் குறிப்பிடப்படுவதால், புதனின் அருளைப் பெறவும், அறிவு, உயர்கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் திருமாலை புதன் கிழமைகளில் வழிபடுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது.
திருப்பதி - சந்திர ஸ்தலத்தின் ஜோதிட சூட்சுமம்
திருப்பதி சந்திர ஸ்தலமாகச் சொல்லப்படுகிறது. சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பது கடகம். சந்திரனால் ஏற்படும் மனக்குழப்பம், சிந்தனைத் தடுமாற்றம் போன்றவற்றிலிருந்து தெளிவு பெறவும், மன அமைதி மற்றும் இறை நம்பிக்கையைப் பெறவும் திருப்பதி சென்று பெருமாளைத் தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. மேலும், சில ராசி மற்றும் லக்னங்களுக்கு சந்திரன் யோகாதிபதியாகவோ அல்லது நற்பலன் அளிக்கும் கிரகமாகவோ செயல்படலாம். அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்வது, மனநிறைவு மற்றும் நல்ல மாற்றங்களைத் தரும்.
அதே நேரத்தில், ஒருசிலர் திருப்பதி தரிசனத்திற்குப் பிறகு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், கடன், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் போன்ற சோதனைகள் ஏற்பட்டதாக அவர்களுடைய அனுபவங்களில் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் ஒரே விதமான திருத்தல வழிபாட்டு முறையைப் பின்பற்றாமல், அவரவர் ஜாதக அமைப்பிற்கு ஏற்ற வகையில் திருத்தல வழிபாட்டை அமைத்துக் கொள்கிறார்கள். இதற்கிடையிலும் ஆழ்ந்த திருமால் பக்தர்கள் பலர் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் இருந்தாலும், தங்களுடைய இறைபக்தியை விடாமல் தொடர்ந்து திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டு வருகின்றனர்.
வயதான ஏழைப் பாட்டி ஒருவர், தன்னால் இயன்ற பணத்தைச் சிறிது சிறிதாக உண்டியலில் சேமித்து, அது நிறைந்ததும் திருப்பதிக்கு எடுத்துச் சென்று பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவார். அவர் கும்பம் - சதய (ராகு) நட்சத்திரம். சந்திரன்–ராகு தொடர்புள்ள ஜாதகங்களில் நிலையற்ற மனம் மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் / தடைகள் இருந்தன. இருப்பினும், அவர்களுக்குப் பெருமாளை வழிபடுவதில் கிடைத்த மனநிறைவும் மகிழ்ச்சியும் அளவிட முடியாத பக்தி. சந்திரனுடன் சனி / ராகுவுடன் தொடர்புள்ள சில ஜாதக அமைப்புகளில் இருப்பவர்கள் மனக்குழப்பத்தால் - வாழ்க்கை மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். எனவே, இவர்கள் திருமலை அவ்வப்போது செல்வதைத் தவிர்க்கலாம்.
திருப்பதிக்குச் செல்லக்கூடாது என்று சொல்லப்படும் ராசிகள்
தனுசு ராசி
சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசியே ஒருவரின் ஜென்ம ராசி. திருப்பதிக்குச் செல்லக் கூடாது ராசிகளில் முதலில் பார்ப்பது தனுசு ராசி. தனுசு என்பது குருவின் ஆட்சி மற்றும் மூலதிரிகோண ராசியாகும். கடக சந்திரன் நிலையற்ற தன்மையும், தனுசு குரு என்பவர் தர்மம், உயர்ந்த நிலையான மன சிந்தனை கொண்டவராகக் கருதப்படுகிறார். ஒரு சில நேரங்களில் குருவும் சந்திரனும் தங்களுடைய தத்துவங்களில் ஒத்துப் போக மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் கடகத்திலிருந்து தனுசு 6ம் இடமாகவும், தனுசிலிருந்து கடகம் 8ம் இடமாகவும் அமைவதால், இவை ஒன்றுக்கொன்று சஷ்டாஷ்டக நிலையில் இருக்கிறது. திருப்பதி சந்திரனுடன் தொடர்புடைய ஸ்தலமாகக் கருதப்படுவதால், அங்குச் சென்று தரிசனம் செய்வதால் சந்திரனின் தாக்கம் அதிகரிக்கலாம். எனவே, தனுசு ராசியினர் திருப்பதிக்குச் செல்லக்கூடாத நிலை உள்ளது. இதை அனைவருக்கும் பொதுவான விதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஜாதகத்தில் தனுசு லக்கினகாரர்கள் 6, 8, 12ம் இடங்களில் மறைந்திருந்தால், இவர்களுக்குச் சந்திரன் பலம் தேவைப்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள், சந்திரன் ஒளி தன்மை பெற, திருப்பதிக்கு நடந்தே சென்று திருமாலை வழிபாடு செய்யலாம். சந்திரனின் பலம் பெறத் தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம். கடகத்தில் குரு உச்சம் பெற்றவர்களுக்கு, குருவின் மூலத்திரிகோண ராசியான தனுசு பாதிக்கப்படும். இங்கு குரு சந்திரன் ஆறாம் அதிபதி வேலை நன்கு செய்வார். குறிப்பாக, குரு உச்சமாக அமைந்தவர்களுக்குப் பொருளாதார ரீதியான பாதிப்புகள் இருக்காது. இந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள் செல்வத்தை அருளும் குபேரன் அல்லது திருமாலை தரிசிப்பதைவிட, இறைஞானம் மற்றும் முக்தியை அருளும் தெய்வங்களை வழிபடுவது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
கும்ப ராசி
கும்பத்தின் அதிபதி சனி. கடகத்திலிருந்து கும்பம் 8ம் இடமாகவும், கும்பத்திலிருந்து கடகம் 6ம் இடமாகவும் அமைவதால், இவையும் சஷ்டாஷ்டக நிலையில் இருக்கிறது. இவர்களும் தனுசு ராசியின் நிலையே ஒத்துப் போவார்கள். இதன் காரணமாக, கும்ப ராசியினரும் திருப்பதி தரிசனத்தை அடிக்கடி செய்யக்கூடாது. இதுவும் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். முக்கியமாக கும்ப ராசியினருக்கு திருப்பதி செல்ல பல்வேறு தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும்.
சிம்ம ராசி
அடுத்தது சூரியன் ஆட்சி புரியும் சிம்ம ராசி / சிம்ம லக்னக்காரர்களும் திருப்பதி செல்லக் கூடாது என்ற ஒரு கூற்று சொல்லப்படுகிறது. கடகத்திலிருந்து சிம்மம் 2ம் இடமாகவும், சிம்மத்திலிருந்து கடகம் 12ம் இடமாகவும் அமைகிறது. இதனால் இவர்கள் திருப்பதி சென்று வந்த பிறகு பல்வேறு செலவுகள் விரயங்கள் ஏற்படும், அது நல்ல விரயமாகவும் இருக்கும். குடும்ப உறவுகளைப் பிரிய நேரிடும், அதுவும் நல்ல நோக்கத்தோடு பார்த்தால் - குடும்ப உறவு பிரிவு என்பது வெளியூர் செல்வதைக் குறிப்பிடும். அதனால் பெரிதாகப் பயப்பட வேண்டாம்.
முக்கியமாக விருச்சிக ராசிக்காரர்கள் அவ்வப்பொழுது செல்லும் இடம் சித்தர், குரு மற்றும் அம்பாளாக இருந்தாலும் பெருமாளை ஒருமுறையாவது வழிபாடு செய்ய ஆசைப்படுவார்கள். சந்திரன் நீச்சம் பெரும்போது பலப்படுத்த அம்பாள் மற்றும் பெருமாள் கோயிலுக்குச் செல்வது நன்று. எனவே, "இந்த ராசியினர் திருப்பதிக்குச் செல்லவே கூடாது" என்று பொதுவாக முடிவு செய்வதைவிட, அவரவர் ஜாதகத்தில் சந்திரனின் நிலை மற்றும் கிரக பலத்தை ஆராய்ந்து, எந்த தெய்வ வழிபாட்டை அவ்வப்போது செய்யலாம் என்பதை ஜோதிட ரீதியாகச் செயல்படுத்தலாம். மேலும், சில ஜாதகங்களில் சந்திரன் யோகாதிபதியாகவோ அல்லது நற்பலன் தரும் கிரகமாகவோ செயல்பட்டால், அத்தகைய ஜாதகர் திருப்பதிக்குச் சென்று வெங்கடேசப் பெருமாளை வழிபடுவதன் மூலம், மனமகிழ்ச்சி, பொருளாதார நிலையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது ஒரு ஆன்மிக நம்பிக்கையாகக் கூறப்படுகிறது.
இஷ்ட தெய் வழிபாடு
திருப்பதி மட்டுமல்லாமல், அனைவரும் அனைத்து இந்து தெய்வங்களையும் சென்று தரிசிக்கலாம். இருப்பினும், சில திருத்தலங்களுக்கு அவ்வப்போது சென்று வந்த பிறகு அல்லது அங்குச் சென்ற காலகட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டால், அந்தத் திருத்தலங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, நமக்கு மனநிறைவும் நன்மையும் தரும் பிற திருத்தலங்களை வழிபடலாம். எந்தக் கோயிலும் ஒருவரின் உயிருக்கு ஆபத்தோ அல்லது மாரகத் தன்மையோ ஏற்படுத்தாது. நமக்கு ஏற்ற இஷ்ட/ உபாசனை தெய்வத்தைச் சரியாக உணர்ந்து, அந்தத் தெய்வத்தின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து வழிபடுவது சிறப்பானதாகும்.
இன்றும் பல்வேறு பழமையான கோயில்களில், அன்றாட பூஜைக்குத் தேவையான எண்ணெய் போன்ற அடிப்படைப் பொருள்களுக்குக்கூடப் பற்றாக்குறை நிலவுகிறது. பொருளாதார வசதி படைத்தவர்கள் தங்களுடைய செல்வத்தின் ஒரு பகுதியை இத்தகைய பழமையான கோயில்களின் புனரமைப்புக்கும், நித்திய பூஜைகள் மற்றும் கோயிலுக்குத் தேவையான பிற பணிகளுக்கும் வழங்குவது ஒரு சிறப்பான தர்மமாகும். இவ்வாறு கோயில் திருப்பணிகளுக்கும், இறைத் தொண்டுக்கும் தொடர்ந்து உதவி செய்வதன் மூலம், அவர்களுடைய குடும்பத்திற்கு இறையருளும், செல்வ வளமும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் என்பது குருமார்களின் கூற்று. இந்த இறைத் தொண்டு செய்யும் அனைவருக்கும் திருமாலின் ஆசிர்வாதம் கிட்டும்.
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.