பாடகியாக அறிமுகமானது குறித்து அனுபவம் பகிர்ந்த அமலா பால்!
நடிகை அமலா பால் மலையாளப் படத்தில் பாடகியாகவும் முதல்முறையாக அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
பின்னர், நண்பர் கேரள ஜகத் தேசாய் உடன் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான தி டீச்சர், போலா, ஆடு ஜீவிதம் படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் லெவல் கிராஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இயக்கியுள்ளார்.
Advertisement
இந்தப் படத்தில்தான் அமலா பால் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இது குறித்து ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் அமலா பால் பேசியதாவது:
நாங்கள் துனிசியா பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அப்போது ஒரு மாலைப் பொழுதில் எதுவும் செய்யாதபோது நான் பாடிக்கொண்டிருந்தேன். நான் கேட்பதெல்லாம் புதிய பாடல்கள் ஆனால் பாடுவதோ பழைய பாடல்கள்; அதனால் என்னை இயக்குநர் கிண்டல் செய்துகொண்டிருப்பார். அவர்தான் என்னை படத்தில் பாடுமாறு கேட்டுக்கொண்டே இருப்பார்.
அப்போதுதான் எனது திருமணம் வேலைகள் போய்கொண்டிருந்தன. உடனே கர்ப்பமும் ஆனதால் என்னால் இதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.
படம் வெளியீட்டுக்குத் தயாராகும் வேளையில் இயக்குநர் எனக்கு பாடலின் வரிகளை அனுப்பினார். அப்போது எனக்கு 9 மாதங்கள். ஆனால் எனக்குப் பாட வேண்டுமெனத் தோன்றியது. இதற்காக நான் எனது குழந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இதற்குமுன் இல்லாத அளவு நம்பிக்கையை கொடுத்தது எனது கருவில் இருக்கும் குழந்தைதான்.
நான்காம் வகுப்பு வரை இசை பயின்றிருக்கிறேன். ஆனால் பிறகு அதைத் தொடர முடியவில்லை.
கர்ப்பமாக இருப்பதால் எனக்கு உடல்நிலை குறித்து சிறிது பயமாக இருந்தது. கர்ப்பமாக இருப்பதால் அடிக்கடி பேசும்போதே மூச்சு வாங்கும். இதையெல்லாம் தாண்டி எனது 100 சதவிகித உழைப்பினைக் கொடுத்தேன். இசையமைப்பாளரும் பிடித்திருக்கிறது என்றார். ரசிகர்கள்தான் இனிமேல் சொல்ல வேண்டும் என்றார்.