துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!
இந்தியாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது தொப்பியில் மற்றொரு இறகைச் சேர்த்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021இல் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது.
புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புஷ்பா - 2 திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
துபையில் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையின் மூலம், நடிகர் அல்லு அர்ஜுன் மெழுகு சிலையுடன் கௌரவிக்கப்படும் பல்வேறு நடிகர்களுடன் இணைந்துள்ளார். அந்தச் சிலையில் இருந்த அதே புஷ்பா பாணியில் தானும் மெழுகுச் சிலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2003ஆம் ஆண்டு கங்கோத்ரி எனும் படத்தின் மூலம் அறிமுகமான அல்லு அர்ஜுனின் நினைவாக அந்தப் படம் வெளியான நாளில் இந்த மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்லின் திரையிடலில் கலந்துக் கொண்ட அல்லு அர்ஜுன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான திட்டம் இருக்கிறது. இதை மிகப்பெரிய யுனிவர்ஸாக மாற்றவிருக்கிறோம்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.