கடின உழைப்பு மட்டும் போதாது: இயக்குநர் பி. எஸ். மித்ரன்
இயக்குநர் பி. எஸ். மித்ரன் சர்தார் - 2 குறித்து பேச்சு....
இயக்குநர் பிஎஸ் மித்ரன் தன் இயக்கத்தில் உருவான சர்தார் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த சர்தார் 2 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. உளவுக்கதையாகவே எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் பி. எஸ். மித்ரன், ” இரும்புத்திரை வெற்றிக்குப் பின் இனி என்ன செய்தாலும் வெற்றிதான் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஹீரோ' படம் கொடுத்த அடி சாதாரண அடி கிடையாது. ஒரு திரைப்படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது மட்டுமே வெற்றியைத் தீர்மானித்துவிடாது. பார்வையாளர்கள் எந்த மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஹீரோ’ படத்தின் தோல்வி எனக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. சினிமாவில் ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வியடையுமா என்பதை முன்கூட்டியே நம்மால் கணிக்கவே முடியாது.
‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்தை உருவாக்கும்போது, இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. ஆனால் ‘சர்தார்’ தோற்றத்தில் முதல் முதலாக அந்த சிறைக் காட்சியில் சண்டைக் காட்சியைப் படமாக்கி முடித்தபோது, இந்த கதாபாத்திரத்துக்குள் ஏராளமான உணர்வுகளும், நாடகமும் இருப்பதை உணர்ந்தேன். இவரை வைத்துக்கொண்டு இன்னும் பல கதைகளைச் சொல்லலாம், இந்த கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாகப் பயணிக்க வைக்கலாம் என்று தோன்றியது.
அதன் விளைவுதான் ‘சர்தார் 2’. இதில் கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீதம் வரை கார்த்தி நடித்த இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒன்றாகப் பயணித்து, இணைந்து சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவார்கள். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும், ஒரு கூடுதல் கொண்டாட்டமாகவும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Director PS Mithran has spoken about the movie Sardar 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.