வெற்றி விழாவில் நன்றி சொல்கிறேன்... உதயநிதி கைதானதைக் குறிப்பிட்டு பேசிய மாதவன்!
நடிகர் மாதவன் ஜிடிஎன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...
நடிகர் மாதவன் ஜிடிஎன் திரைப்படம் மற்றும் ஜிடி நாயுடு குறித்து பேசியுள்ளார்.
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்த இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். டீசர், டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற இப்படம் வருகிற ஆக. 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதில் நடிகர்கள் துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், வினய் உள்பட பிரபலங்களும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மாதவன், “நிறைய நாடகங்கள் (எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது) நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வுக்கு வந்ததற்கு நன்றி. ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கலாம் என திட்டமிட்ட போது, என் தயாரிப்பாளர்களிடம் உறுதியாகக் கேட்டுக்கொண்டேன்; கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டுமா என. காரணம், நான் ஒரு வேலையைச் செய்ய முடிவு செய்துவிட்டால், மிக ஆழமாக செய்வேன். இப்படம் எங்கும் நின்றுவிடக்கூடாது என்கிற எண்ணம் இருந்தது. ஆனால், என்னைவிட என்மீது அதிக நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இதனைச் செய்யலாம் என உத்வேகம் அளித்தார்.
இப்படத்தின் மூலம் ஜிடி நாயுடுவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பை அவர்களின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அதனால், பொறுப்பாகவும் கடமையாகவும் இந்தப் படத்திற்காக வேலை செய்திருக்கிறோம். வெறும் ஒரு கண்டுபிடிப்பாளராக மட்டுமல்லாது அசாதாரண மனிதனின் கதையாக, மிகவும் முக்கியமான படமாக இது இருக்கும் என நம்பினேன். ஜிடி நாயுடுவை நம்மில்கூட பலருக்கும் தெரியாதது வேதனையானது. ஏன் இந்த மேதையை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தக் கூடாது என்றே எண்ணினேன்.
இன்றைய பல கண்டுபிடிப்புகளுக்கு முன்பே ஜிடி நாயுடு பல விஷயங்களைச் செய்துவிட்டார். பில் கேட்ஸ்கூட இவரிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது. விவசாயம், கல்வி, பெண்கள் முன்னேற்றம் என பல துறைகளிலும் ஜிடி நாயுடு கவனம் செலுத்தினார். தொழில்முனைவோர் என்பதற்கே அவர்தான் பெரிய முன்னோடியாக இருந்துள்ளார். நாம் அன்றே இவரைக் கொண்டாடியிருந்தால், உலகின் மிகப்பெரிய தொழில் நகரமாக கோயம்புத்தூர் மாறியிருக்கும். அதன் இன்றைய வரலாறே வேறொன்றாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட மனிதர் ஜிடி நாயுடு. இப்படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய மனிதருக்கு நியாயம் சேர்த்திருப்பதாகவே உணர்கிறேன். வெற்றி விழாவில் இன்னும் அதிக நன்றிகளைச் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Madhavan has spoken about the film GDN and G.D. Naidu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.