ஹபீபி - வென்று காட்டினாரா மீரா கதிரவன்?
ஹபீபி திரைப்படத்தின் விமர்சனம்...
தமிழ்ச்சூழலில் அத்தி பூத்தாற்போல சில படங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. அந்த வரிசையில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது ஹபீபி.
அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களுக்குப் பிறகு மீராகதிரவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க மகேஷ் சுவாமி கேமரா இயக்கியுள்ளார். கதை வி எஸ் முகமது அமீன் எழுதியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் நேசம் என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
கடையநல்லூர் பகுதியில் மூன்றாம் தலைமுறையாக நெசவுத் தொழில் மேற்கொண்டு வரும் யூசுப் (கஸ்தூரி ராஜா) மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே ஹபீபி திரைப்படம். தறி சத்தத்திற்கு மத்தியில் பிறந்து வளர்ந்த கஸ்தூரி ராஜாவிற்கு அந்தத் தொழிலை தன்னுடன் முடித்துக் கொள்ள விருப்பமில்லை. அதே சமயம் கூட்டுக்குடும்பமாக வாழும் அவரின் குடும்பத்திற்கான பொருளாதாரத் தேவை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இயந்திரங்களின் வருகையால் மெல்ல மெல்ல மறைந்துபோகும் நெசவுத்தொழிலை தான் வணங்கும் இறைவனின் ஆணையாக தொடர்ந்து வருகிறார் அவர். இதை புரிந்துகொள்ளும் அவரது தம்பி தனது திருமணத்திற்குப் பிறகு வேலைக்காக அரபு நாடு செல்கிறார். தனது கணவன் வருகைக்காக காத்திருக்கிறார் அவரது மனைவி. இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத 80களில் இருந்த கடிதப்போக்குவரத்தும், ஆடியோ கேசட் பரிமாற்றங்களும் எந்தளவு உறவுகளுக்குள் இருந்த உணர்வுப் பரிமாற்றங்களுக்கு பிணைப்புக் கயிறாக இருந்தது என்பதை ஹபீபி திரைப்படத்தின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். கணவனின் பேச்சுக்களை கேசட்டுகளில் சேர்ந்து வைத்திருக்கும் மனைவியின் அன்பை இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு அழகாகவும், அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியிருக்காது. நாயகர்கள் ஈசா, மாளவிகா ஆகியோரின் காதலையும் தூக்கி சாப்பிடும் நடிப்பைக் கொடுத்துள்ளது இந்த ஜோடி. தமிழ் இலக்கியங்கள் பேசும் காதலன் வருகைக்காக காத்திருக்கும் காதலியின் உணர்வுகளின் 21ஆம் நூற்றாண்டின் பதிப்பு ஹபீபி.
Advertisement
Advertisement
இதற்கு மத்தியில் வாலிப உணர்வுடன் மாளவிகாவின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும் ஈசாவின் காதல் மற்றொரு காதல் காவியம். ஒரு கட்டத்தில் தனது காதலால் பிரச்னையை எதிர்கொள்ளும் ஈசா அதன்பின் என்ன ஆனார்? அவரது காதல் கைகூடியதா? கஸ்தூரி ராஜா தனது தொழிலை மீட்டாரா? இல்லையா? என்பதே ஹபீபி திரைப்படத்தின் கதை.
கடையநல்லூர் பகுதியைச் சுற்றி 4 காலகட்டங்களில் நடக்கும் கதையை திரைக்கு கடத்துவதில் நேரும் சவால்களை இலாவகமாக வென்றிருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் சாலைகள், வீடுகள், கடைகள் என சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு பலம். நெசவுத் தொழிலை இஸ்லாமிய மக்கள் மேற்கொள்வது நமக்கு புதிய செய்தியாக இருந்தாலும் அதில் அம்மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்கொண்டு வருவதாகட்டும், பொருளாதார மாற்றம் எப்படி குடும்பத்தை மாற்றுகிறது என்பதை எடுத்துரைப்பதாகட்டும் திரைக்கதை உருவாக்கம் நம்மை அக்குடும்பத்தில் ஒருவராக கொண்டு நிறுத்தி விடுவதை மறுக்க முடியாது. கதை நடைபெறும் நிலத்தின் மொழி உச்சரிப்பு தொடங்கி அம்மண்ணின் வாழ்வாதார போக்குகள் வரை கூடுமானவரை சரியாக திரையில் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறது படக்குழு.
குடும்பத்தலைவாக பொறுப்புணர்ந்து வாழும் இடங்களாகட்டும், தனது முடிவு குடும்பத்தை திருப்திப்படுத்தவில்லை என சங்கடப்படும் இடங்களாகட்டும், தன் பிறப்புடனே இருந்த தறி சத்தத்தை இழந்து இருக்கும் பகுதிகளாகட்டும் கஸ்தூரி ராஜா ஒப்புக்கொடுத்துள்ள நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது. சிறுவனாக இருந்து திருமணத்திற்காக ஏங்கும் இடம் வரை ஈசாவின் தவிப்பு கலந்து நடிப்பு திரைக்கு வலுசேர்க்கிறது. கதாநாயகி மாளவிகாவை கொஞ்சம் பேச வைத்திருக்கலாம் என்பதை தவிர்த்து அந்தக் கதாபாத்திரத்தின் மீது குறை ஒன்றுமில்லை. அதிகப்படியான கதாபாத்திரங்களைக் கையாளும்போது அவற்றை சரியாக திரையில் கடத்துவது சவாலானது. அதை திறம்பட செய்திருக்கிறார் இயக்குநர்.
வழக்கமான திரைப்படங்களில் கூட இஸ்லாமியர்கள் ஒன்றிரண்டு கதாபாத்திரங்களாக இதுவரை காட்டப்பட்டிருந்தாலும் அவர்களது வாழ்க்கை, குடும்பசூழல், திருவிழாக்கள், சடங்குகள் என நமது கண்ணில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த அம்சங்கள் அநேகம். இஸ்லாமிய கதாநாயகனை மாப்பிள்ளை என அழைக்கும் இந்துவாகட்டும், தனது மாற்று மத நண்பனுக்காக தவறாமல் கொண்டு செல்லப்படும் கஸ்தூரி ராஜாவின் பிரியாணியாகட்டும் மனிதமும், அன்பும் எவ்வளவு தூய்மையானது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அரசியல் காரணங்களுக்காக எதிரிகளாக முன்னிறுத்தப்படும் மக்களின் மனதில் நிஜமாகவே என்ன குடி கொண்டுள்ளது என்பதை ஹபீபி வெளிச்சமிட்டுக் காட்டும். பயங்கரவாதிகள் எனும் அடைமொழிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட மக்களின் மனங்கள் எந்தளவு அன்பு நிறைந்தது என்பதை பேச துணிந்திருப்பது இந்தப் படத்தை கொண்டாடப் போதுமான காரணம்.
90களில் நடந்த பொருளாதாரக் கொள்கை மாற்றம் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், அதையொட்டி எழுந்திருக்கும் மனித மனங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை ஹபீபி. கால மாற்றம் பெண்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திர வாய்ப்புகள் ஆகியவை கவனிக்கத்தக்கவை.
வல்லோனே பாடல் முதல் பின்னணி இசை வரை இஸ்லாமிய சூழலை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வலுவாக உதவியிருக்கின்றன. சாம் சி எஸ்ஸின் இசை படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் பலம்.
குடும்பக் கதையானலும் மாறி வரும் இன்றைய தலைமுறைக்கு இது மெதுவாக நகரும் திரைப்படமாக அமைந்திருப்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். எதிர்பாராத அதிர்ச்சியுடன் முடியும் முதல் பாதிக்குப் பின் எந்த ஏற்ற இறக்கமுமற்ற திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஒரே மாதிரியான நடிப்பு இரண்டாம் பாதியில் நாயகனின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. அவசியமற்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ட்ரோன் காட்சிகள், நீளும் திருமண சிக்கல் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.
எனினும் சொல்ல வேண்டிய காலத்தில் சொல்லப்பட வேண்டியவர்களின் கதையை திரைமொழி அனுபவத்தில் தைரியமாகக் கடத்தியதற்கு இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் பாராட்டுகளை தயக்கமின்றி சொல்லலாம்.