முகப்பு
செய்திகள்

'அப்படி போடு முதல் அரபிக் குத்து வரை' - குட்டி நண்பா நண்பீஸை ஈர்த்த விஜய்யின் அட்டகாச நடனங்கள்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... அட்டகாசமான நடனத்தால் குட்டி நண்பா நண்பீஸை ஈர்த்த விஜய்....

Updated On : 20 ஜூன் 2026, 4:40 pm IST
அப்படி போடு மற்றும் அரபிக்குத்து பாடல்களில் விஜய்
பகிர்:

நடிகராக இருந்தபோது முதல்வர் விஜய்யின் நடனத் திறன் பலரைக் கவர்ந்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள லட்சோப லட்சம் குழந்தைப் பட்டாளத்திடம் நடிகரும் தமிழக முதல்வருமான, விஜய்யைக் கொண்டு சேர்த்தது அவருடைய நடனம்தான். இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் வாய்த்திடாத அந்த நடன அஸ்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டு வாகை சூடியவர் விஜய்.

இந்திய மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் நிலைகளில் கொண்டாட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. திரைப்படங்களில் வரும் பாடலும் நடனமும், மக்களுக்கும் அவர்களது கொண்டாட்டங்களுக்குமான இணைப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

திருவிழாக்கள், திருமணங்கள், பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்கள் என கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு எப்போதும் பஞ்சம் இருப்பதில்லை. அதிலும் விஜய் பாடலுக்கான நடனம் இல்லாமல் எந்தவொரு விழாவும் முற்றுப் பெருவதுமில்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் விஜய்யின் பாடலுக்கு நடனம் ஆடுவதைப் பெருமைக்குரிய விஷயமாக கருதுகின்றனர். அதற்கு அவர் மீதான ஈர்ப்பு மட்டுமே காரணமல்ல, குறிப்பிட்ட அந்த பாடலுக்கு விஜய் நடனம் ஆட எடுத்துக்கொண்ட சிரத்தையும், அதை அவர் ஆடி காட்டிய விதமும்தான். இவையெல்லாம் ஒரே நாளில் வந்ததும் அல்ல, அவர் ஒருவர் மட்டுமே இதற்கு காரணமும் அல்ல.

நடிகர் விஜய்யின் மிகச் சிறந்த நடனத் திறமைக்குப் பின்னால் பலரது கூட்டுமுயற்சி மறைந்திருக்கிறது. 1992-ல் 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிதாக கவனம் பெறவில்லை. 1993- ல் 'செந்தூரப்பாண்டி' திரைப்படம் வெளியாகிறது. அதில் வரும் 'சின்ன சின்ன சேதி சொல்லி' என்றொரு பாடல் வரும், விஜய்யின் நடனத் திறமை பட்டித் தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது இந்தப் பாடலில் இருந்துதான்.

1994-ல் வெளிவந்த 'ரசிகன்', 'தேவா' படங்களில் நடிகர் விஜய், 'பம்பாய் சிட்டி' , 'அய்யய்யோ அலமேலு' ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடியதோடு, சொந்தக் குரலில் இந்த இரு பாடல்களையும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். அதே ஆண்டில் வெளிவந்த 'விஷ்ணு' படத்தில் வரும் 'சிங்கார கண்ணுக்கு', 'தொட்டபெட்டா ரோட்டு மேல' ஆகிய பாடல்களிலும் தனது நடனத்தால் அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் விஜய்.

தொடர்ந்து 1995-ல் வெளிவந்த 'கோயம்புத்தூர் மாப்ளே' படத்தில் வரும், 'கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு' பாடல், 'பூவே உனக்காக' படத்தில் வரும், 'சிக்லெட்டு சிக்லெட்டு', 'ஓ பியாரி பானி பூரி' பாடல் வரை விஜய் பல பாடல்களில் தனது நடனத் திறனை வெளிப்படுத்தியிருப்பார்.

இதில் பல படங்கள் காதலை மையப்படுத்தியே வந்திருந்ததால், அப்போதைய யுவன் யுவதிகள் பலரும் விஜய்யின் விசிறிகளாக மாறியிருந்தனர். இருப்பினும் அப்போதைய பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், இரு கைகளையும் அகல விரித்து, தலையை அசைத்துக் கொண்டே நடந்து சிரிக்கும் வின்டேஜ் விஜய்யின் சிக்னேச்சர் ஸ்டெப் மிகவும் பிரபலமானது. நடிகர் விஜய்யைச் சுலபமாக அடையாளம் காட்டுவதற்கான குறியீடாகவே அந்த ஸ்டெப் மாறியிருந்தது.

விஜய்யின் நடனத் திறன் மேம்பட்டது 1997-க்குப் பிறகுதான் என்றால் மிகையல்ல. அதுவரை திரைப்பட பாடல்களில் குழு நடனம் ஆடுபவர்கள் நாயகன், நாயகியை விட்டு தூரமாக ஆடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான ஆடைகள் தொடங்கி, ஒப்பனை உள்பட அனைத்திலும் ஒருவித பாகுபாடு பல்லிளிக்கும். ஆனால், ராஜூ சுந்தரம் போன்ற நடன இயக்குநர்களின் வருகை இந்த நடனக் குழுவினரின் திரை வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. குறிப்பாக விஜய் போன்ற ஆகச்சிறந்த நடனத் திறமை கொண்டோருக்கான பெருந்தீனி கிடைத்தது இந்த காலக்கட்டத்தில்தான்.

1997-ல், 'லவ் டுடே', 'ஒன்ஸ் மோர்', 'நேருக்கு நேர்', 'காதலுக்கு மரியாதை' , 1998-ல், 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமுடன்', 'நிலாவே வா' , 1999-ல், 'துள்ளாத மனமும் துள்ளும்', 'என்றென்றும் காதல்', 'நெஞ்சினிலே' ,'மின்சார கண்ணா' என ஒவ்வொரு படத்திலும் வந்த பாடல்களை கவனித்துப் பார்த்தால் விஜய்யின் நடனம் மேம்பட்டிருப்பதை உணர முடியும். குறிப்பாக, 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் வரும் 'இருபது கோடி நிலவுகள்' என்ற மெலோடி பாடலுக்கு விஜய் ரொம்ப இலகுவான அசைவுகளை ஆடி வெகுவாக கவர்ந்திருப்பார். அதேபோல், 'நெஞ்சினிலே' படத்தில் வரும் 'தங்க நிறத்துக்குத்தான்' பாடலில் மிகச்சிறந்த நடனத் திறமை கொண்ட நடிகை ரோஜாவுடன் விஜய் ஆடி கலக்கியிருப்பார்.

2000-லிருந்து தான் திரையுலகின் நடனப் புயலாக விஜய் உருவெடுத்தார். மாஸ்டர் ராஜூ சுந்தரத்தின் குழுவைச் சேர்ந்த ஸ்ரீதர், தினேஷ், கிரி, மிராஸ், ஜானி, நோபுள், ஷோபி, ஜப்பான் குமார், நாகேந்திர பிரசாத், பாலாஜி, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் மற்றும் பெண் நடனக் கலைஞர்கள் விஜய் உடன் இணைந்து ஆடி மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தனர். இவர்களில் பலரும் நடன இயக்குநர்களாகி விஜய்யின் பல வெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர். இவர்கள் அனைவருமே விஜய்க்கான நடனத்தை உருவாக்கும்போது, அவருடைய ரசிகர்கள், குழந்தைகளை மனதில் வைத்தே உருவாக்கியிருப்பார்.

'குஷி' , 'பிரியமானவளே', 'ப்ரண்ட்ஸ்', 'பத்ரி', 'ஷாஜகான்', 'தமிழன்', 'யூத்', 'பகவதி', 'வசீகரா', 'திருமலை', 'கில்லி', 'மதுர', 'திருப்பாச்சி', 'சச்சின்', 'சிவகாசி', 'போக்கிரி', 'குருவி', 'அழகிய தமிழ்மகன்', 'வில்லு', 'வேட்டைக்காரன்' என இறுதியாக வந்த 'கோட்' வரை விஜய்யின் நடன அசைவுகளுக்காக கால் பதிக்கப்படாத கோலிவுட் அரங்கமே இல்லை எனும் அளவுக்கு நடனத்தால் வியக்க வைத்தவர் விஜய்.

'குஷி' படத்தின் 'மெக்கோரீனா' மற்றும் 'ஒரு பொன்னு ஒன்னு நான்' பாடல்கள், 'கில்லி' படத்தில் வரும் 'கொக்கர கொக்கரக்கோ' , 'ஷாஜகான்' படத்தில் வரும் 'அச்சச்சோ புன்னகை' 'திருப்பாச்சி' படத்தில் வரும் 'கட்டுக் கட்டு கீரக்கட்டு', திருமலை படத்தில் வரும் 'திம்ஸு கட்ட', 'குருவி' படத்தில் வரும் 'தேன் தேன் ' ஆகிய பாடல்களில் விஜய்யின் அதிஅற்புதமான நடனத் திறனை ரசிக்க முடியும். டூயட் பாடல்களான இவைகளில் தன்னுடன் இணைந்து ஆடும் நடிகை மற்றும் குழுவினருக்கான ஸ்பேஸையும் கொடுத்து ஆட வேண்டியிருக்கும். விஜய் ஒரு தேர்ந்த நடனக் கலைஞர் என்பதால் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை திறமையாளர்களையும் தாண்டி அவரைக் கவனித்து ரசிக்க வைத்திருப்பார். அதே போல் 'யூத்' படத்தில் வரும் 'சர்க்கரை நிலவே' பாடல் ஒரு சோகப் பாடல். அந்தப் பாடலின் இடையிசைக்கு ஒரு மூவ்மென்ட் போட்டிருப்பார். இன்ஸ்டா மட்டும் அப்போது இருந்திருந்தால் அந்த நடன அசைவுகளை ஆடாத கால்களே இருந்திருக்காது எனும் அளவுக்கு ஆடி அசத்தியிருப்பார் விஜய்.

வெறுமனே 4 கவுன்ட் என்றளவில் இருந்த டான்ஸ் ஸ்டெப்களுக்கான டெம்ப்ளேட்களை 8,16,32 வரை நீட்டித்தவர் விஜய்தான். மேலே சொன்ன பாடல்களில் மூச்சிறைக்க தாவிக் குதித்து ஆடியிருக்க மாட்டார். ஆனால், அந்த பாடல்களைப் பார்க்கும்போதே, அந்த ஸ்டெப்ஸ் எல்லாம் பாட்டுடன் சேர்ந்து வாய்பாடு போல எளிதாக பதிந்துவிடும். அது ஒருவிதமான பாணி என்றால் வெறித்தனமாக ஆடி திரையைத் தீப்பிடிக்கவும் செய்யும் திறமை பெற்றவர் விஜய். 'சூரத் தேங்கா அட்றா', 'அப்படி போடு', 'ஆல்தோட்ட பூபதி', 'சரக்கு வச்சிருக்கேன்', 'கோக கோலா பிரவுன்', 'தாம் தக்க தய்ய தக்க', 'கும்பிட போன தெய்வம்', 'அப்பன் பண்ண தப்புல', 'போக்கிரி பொங்கல்', 'மாம்பழமா மாம்பழம்', 'என்னாத்த சொல்வேணுங்கோ', 'டாடி மம்மி வீட்டில் இல்ல', 'வளையபட்டி தவிலே' , 'என் உச்சி மண்டையில', 'வாடி வாடி கைப்படாத சிடி', 'அரபிக் குத்து', 'ஜித்து ஜில்லா நீ', 'ஆளப்போறான் தமிழன்', 'ரஞ்சிதமே ரஞ்சிதமே', 'நான் வரவா', 'விசில் போடு' ,'தளபதி கச்சேரி' உள்ளிட்ட பாடல்கள் வரை, தனது தனித்துவமான நடனத்தால் ரசிகர்களின் மனதில் தடம் பதிருப்பார் விஜய்.

குறிப்பாக பிரபல நடன இயக்குநர்களான பிரபு தேவா, லாரன்ஸ் ஆகியோருடன் சேர்ந்து ஆடி அசந்துபோகச் செய்திருப்பார். அதேபோல் நடனத்தில் சிறந்து விளங்கும் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, மீனா, சிம்ரன், சாயா சிங், ஜோதிகா, நயன்தாரா என விஜய் போட்டிப் போட்டு ஆட்டம் போட்டவர்கள் ஏராளம். பொதுவாக திரைப்படங்களில் ஒரு நடன இயக்குநர் பணியாற்றுவார். சிறப்பு பாடல்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக ஒருவர் பணியாற்றுவதுதான் வழக்கம். ஆனால், விஜய்யின் வருகைக்குப் பின்னர் படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நடன இயக்குநர் பணியாற்றும் சூழல் உருவானது.

திரைத்துறையில் கோலோச்சுபவர்களால் அவ்வளவு எளிதாக குட்டீஸ்களைக் கவர்ந்திழுக்க முடியாது. திரைப்பட பாடல்களும் அந்த பாடலுக்கான நடனமும் அவர்களை விரைவாக வசீகரித்துக் கொள்கிறது. அந்தவகையில் 2000-லிருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கோலிவுட்டின் நடன அரசராக வலம் வந்தவர் விஜய்தான். தமிழ் மண்ணிலிருந்து வந்ததால், அவரது தோற்றம் குடும்பத்தில் ஒருவராக அனைவரையும் பார்க்க வைக்கிறது. இதனால் விஜய்யோடும் அவரது படங்களில் வந்த பாடல்கள் மற்றும் நடனங்களோடும் குழந்தைகளுக்கும் ஒருவித பிணைப்பை ஏற்படுத்துகிறது.

திரைப்படங்களில் வரும் சிறந்த நடனங்கள் அனைத்துமே குழந்தைகளிடம் சென்றடைகிறது. ஆனால், விஜய் ஆடும்போது அப்பாடல் குழந்தைகளின் மனதுக்கு நெருக்கமானதாகிறது. இந்த இணக்கமே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குட்டி நண்பா நண்பீஸின் மனங்களிலும் நடிகர் விஜய்யைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

From 'Appadi Podu' to 'Arabic Kuthu' – Vijay captivated young fans with his spectacular dance moves!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments