பம்பாய் சிட்டி முதல் தளபதி கச்சேரி வரை... விஜய்யின் வசீகர குரலில் ஒலித்த பாடல்கள்!
முதல்வர் விஜய் பிறந்தை நாளையொட்டி... திரைப்படங்களில் விஜய் குரலில் ஒலித்த பாடல்கள் பற்றி...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த விஜய், தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தன் வசீகர குரலால் பாடகராகவும் ரசிகர்கள் நெஞ்சில் குடியேறினார். அவரின் தனித்துவமான உற்சாகம் ததும்ப பாடும் திறனாலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி பாடகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
விஜய் நடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே பாடவும் தொடங்கினார், இசையமைப்பாளர் தேவாதான் 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தின் மூலம் விஜய்யைப் பாட வைத்தார். பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல் மூலம் பாடகர் அவதாரம் எடுத்தார்.
விஜய்யின் 90களில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்த தேவா, அவரின் குரலுக்கு ஏற்றார்போல பல பாடல்களைப் பாட வைத்துப் பாடகராகவும் தனி முத்திரை பதிக்கவைத்தார். விஜய்யின் குரலும், தேவாவின் துள்ளலான இசையும் இணைய இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன.
Advertisement
Advertisement
ரசிகன் படத்தைத் தொடர்ந்து தேவா படத்தில் அய்யய்யோ அலமேலும், ஆவின் பசும்பாலு, கோத்தர குப்பம்மா என இரு பாடல்களையும் பாடியிருப்பார். இரு பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. இவரின் ஆரம்ப கால பாடல்களில் ரசிகர்களைக் கவர்வதற்காக பாடலின்போது, ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்’ என கார்டு போடப்பட்டிருக்கும்.
தொடர்ந்து, விஷ்ணு படத்தில் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா பாடலைத் தாய் ஷோபா சந்திரசேகருடன் பாடியிருப்பார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் பாம்பே பார்ட்டி ஹில்பா ஷெட்டி, மாண்புமிகு மாணவன் படத்தில் திருப்பதி போன மொட்டை போன்ற பாடல்கள் அந்தக் காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.
தற்போது பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தாலும், விஜய்யின் பாடகர் பயணத்துக்கு அடித்தளம் இட்டது தேவாதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. காலமெல்லாமல் காத்திருப்பேன் படத்தில் அஞ்சா நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தான குயிலே பாடலைக் கல்லூரி மாணவர்கள் டவுன் பஸ்ஸில் பாடிக்கொண்டே செல்வார்கள். இந்தப் பாடலுக்கும் தேவாதான் இசையமைத்து இருப்பார்.
இதனைத் தொடர்ந்து, ஒன்ஸ்மோர் படத்தில் மீண்டும் தாய் ஷோபாவுடன் ஊர்மிளா ஊர்மிளா பாடலைப் பாடினார். இந்தப் பாடலும் விஜய்யின் பாடகர் பயணத்தில் அவரின் குரலை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.
துள்ளலான பாடல்களை பாடிவந்த விஜய், காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற ஓ பேபி ஓ பேபி என்ற மெலடி பாடலைப் பாடியிருப்பார். ப்ரியமுடன் படத்தில் மெளரியா மெளரியா, நிலாவே வா படத்தில் நிலவே நிலவே, சந்திர மண்டலத்தில் பாடல்களைப் பாடினார், தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலையாவது அவர் பாடுவார் என்று ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.
தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பெரியண்ணா படத்தில் விஜய் பாடிய நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து பாடல் அவரின் வெற்றிப் பாடல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நெஞ்சினிலே படத்தில் இடம் பெற்ற தங்க நிறத்துக்குத் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா பாடலைப் பாடி நடிகை ரோஜாவுடன் நடனமும் ஆடியிருப்பார். காதலியின் குணங்களைப் புகழ்ந்து நாட்டின் உள்ள மாநிலங்களை பரிசளிப்பதாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலும் விஜய்யின் பாடகர் பயணத்தில் தனித்துவம் பெற்றது.
பிரியமானவளே படத்தில் மிசிசிபி நதி குலுங்க, பத்ரி படத்தில் என்னோட லைலா வராலே மைலா பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் பாடல்களாக இருந்தன. தமிழன் படத்தில் உள்ளத்தைக் கிள்ளாதே பாடல் மென்மையான பாடலையும் தன்னால் பாட முடியும் என்று காட்டினார். இதனைத் தொடர்ந்து சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கைப்படாத சீடி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதன் பின்னர், 7 ஆண்டுகள் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி பாடல்கள் பாடாமல் இருந்த விஜய், துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் பாடலைப் பாடி மீண்டும் பாடகர் பயணத்தைத் தொடங்கினார். அப்போதே இந்தப் பாடல் யூடியூபில் பல லட்சம் பாரவைகளைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லா படத்தில் ஸ்ரேயா கோஷலுடன் பாடிய கண்டாங்கி கண்டாங்கி கட்டிவைத்த பொண்ணு பாடல்கள் மெகா ஹிட் அடித்தன.
கத்தி படத்தில் பாடிய செல்ஃபி புள்ள பாடல் உலகளவில் பிரபலமடைந்தது. பிகில் படத்தில் வெறித்தனம், பைரவா படத்தில் பாபா பாபா பாடல்களும் வெற்றி வாகை சூடின. மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட் படத்தில் ஜாலி ஓ ஜிம்கானா பாடல்களில் ஆங்கில வரிகளை அசாத்தியமாக பாடியிருப்பார்.
தொடர்ந்து, வாரிசு படத்தில் பாடிய ரஞ்சிதமே பாடல் அவரின் சிறந்த நடனப் பாடல்களின் வரிசையில் இணைந்தது. லியோ படத்தில்தான் அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருப்பதை குறிப்பிடும் வகையில் அண்ணா நான் ரெடிதான் வரவா பாடலைப் பாடி இருப்பார்.
கடந்த 2024 ஆம் வெளியான கோட் படத்தில் விசில் போடு, சின்ன சின்ன கண்கள் பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. நிறைவாக, திரையில் இன்னமும் வெளிவராத திரைப்படமான ஜனநாயகனில் தளபதி கச்சேரி, செல்ல மகளே ஆகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்.
விஜய் தொழில்முறைப் பாடகராக இல்லாமல் இருந்தாலும், தனித்துவமான் குரலால், வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார். ஆனால், தான் பாட வந்தது ஒரு விபத்து என்று விஜய் கூறியிருந்தாலும் அவரின் இசைப் பயணம் ரசிக்கும்படி இருந்துள்ளது.
இனி நடிப்பதில்லை என்று கூறி அரசியலில் இருக்கும் முதல்வர், விஜய் மீண்டும் பாடுவரா என்பது காலத்தில் கையில்தான் இருக்கிறது.
On the occasion of Chief Minister Vijay birthday. regarding songs released featuring Vijay's voice.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.