உன்னுடைய மிகச்சிறந்த நடிப்பு! கண்ணீருடன் பதிவிட்ட ஸ்வாசிகா கணவர்!
கவனம் பெறும் ஸ்வாசிகா கணவர் பதிவு...
நடிகை ஸ்வாசிகாவின் கணவர் நூறு சாமி திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நடிகை ஸ்வாசிகா நடிப்பில் உருவான நூறு சாமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வாசிகா வழங்கியிருந்ததாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ஸ்வாசிகாவின் கணவர் பிரேம் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், ”சசி சார் உனக்கு முதன்முறையாக இந்தக் கதையைச் சொன்னபோது, எவ்வளவு உற்சாகமாக எனக்கு போன் செய்து பேசினாய் என்பதும், "செல்வி" கதாபாத்திரத்தை முற்றிலும் புதிதாக உயிர்ப்பிக்க வேண்டும் என எவ்வளவு ஆசைப்பட்டாய் என்பதும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
அந்தக் கதாபாத்திரத்திற்காக நீ எவ்வளவு கடினமாக உழைத்தாய் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். புதிய புதிய நுணுக்கங்களையும் உடல் மொழிகளையும் முயற்சித்தாய், மக்களை உன்னிப்பாகக் கவனித்தாய், அந்தக் கதாபாத்திரம் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக உன் அன்றாட பழக்கங்களில்கூட சிறு சிறு மாற்றங்களைச் செய்தாய். நான் உன்னுடன் இருந்தபோதுகூட, சேலை அணிந்து, இயல்பாகவே செல்வியாக மாறிப்போன அந்த தருணங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. ஆனால், இவ்வளவு உழைத்த பிறகும், அது போதாது என்று நினைத்து, இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று உன்னை நீயே தொடர்ந்து உந்திக்கொண்டே இருந்தாய்.
இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சியில் இருந்து நீ என்னை செல்போனில் அழைத்து, உன் நடிப்பு குறித்து இன்னும் திருப்தியில்லை என்றும், அந்தக் கதாபாத்திரத்தின் மிகச் சிறந்த வடிவமாக மாற வேண்டும் என்றும் சொன்ன தருணங்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன. உன்னிடம் இருக்கும் அந்த அர்ப்பணிப்பும், இன்னும் சிறப்பாக வளர வேண்டும் என்ற அந்தத் தாகமும் நான் எப்போதும் வியந்து ரசிக்கும் விஷயங்கள்.
என் அன்பே, உன்னுடைய மிகச் சிறந்த நடிப்புகளில் ஒன்றை இந்தப் படத்தில் நான் பார்த்தேன். பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தாய், அழ வைத்தாய், புன்னகைக்க வைத்தாய், ஒவ்வொரு உணர்வையும் அவர்கள் மனதில் ஆழமாகக் கடத்தினாய். அந்தப் பயணத்தைப் பார்ப்பதே மிகவும் அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
இது உன் திரைப் பயணத்தின் மிகச் சிறந்த மற்றும் மறக்க முடியாத நடிப்புகளில் ஒன்றாக எப்போதும் இருக்கும். ஆனால், இது உன் உச்சம் அல்ல என்பதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை இருக்கிறது. இன்னும் பெரிய சவால்களை உன்னிடம் கேட்கும் ஒரு கதாபாத்திரம் நிச்சயம் வரும். அது வரும்போது, அதையும் தாண்டி உன் திறமையை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வாய் என்று எனக்குத் தெரியும். கண்களில் ஒரு துளி கண்ணீருடனும், இதயத்தில் பெருமையுடனும், முகத்தில் ஒரு புன்னகையுடனும் இதை எழுதுகிறேன்.
என்றும் உன்னை நேசிக்கும்,
உன் கணவர்” எனத் தெரிவித்திருந்தார்.
இப்பதிவைக் கண்ட ஸ்வாசிகா, “என்னை எப்போதும் புரிந்துகொண்டு, எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருந்து வருவதற்கு மனமார்ந்த நன்றி. நீ என் வாழ்க்கைக்குள் வந்த நாளிலிருந்து, எல்லாமே இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறிவிட்டது. என் மகிழ்ச்சியிலும், என் போராட்டங்களிலும், என் கனவுகளிலும் என்னுடன் துணையாக நிற்கும் உன்னைப் பெற்றது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரம். நீ எனக்குக் கணவர் மட்டுமல்ல, என் பாதுகாப்பு, என் பலம், என் நம்பிக்கை, என் காவல் தேவதை. உன்னை என் வாழ்க்கைத்துணையாகப் பெற்றதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். உன்னை அளவில்லாமல் நேசிக்கிறேன், கணவா” எனக் கூறியுள்ளார். இப்பதிவு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஸ்வாசிகாவின் கணவரையும் பாராட்டி வருகின்றனர்.
Actress Swasika's husband has posted in praise of the movie Nooru Saami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.