FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

தோள் சாய ஓர் உறவு - இயக்குநர் பாலாவின் நந்தா!

இயக்குநர் பாலாவின் பிறந்த நாளில் அவரது நந்தா திரைப்படம் குறித்து...

Updated On : 11 ஜூலை 2026, 4:00 pm IST
நந்தா பட போஸ்டர் - படம்: சன் நெக்ஸ்ட்
பகிர்:

சுவாமிநாதன்

பாலா என்றவுடன் எல்லோரது மனதிலும் வருவது அவர் கலைப் படங்களை எடுப்பவர்.. அவர் படங்களைப் பார்க்க பொறுமை அவசியம்.. படம் பார்க்க வருபவர்களை சோகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு சேடிஸ்ட் (Sadist) மனநிலை உடையவர் போன்ற எண்ணங்கள்தான் மேலோங்கும். நம் பார்வையில் பாலா அப்படிதான்.

ஆரம்பக் காலங்களிலேயே இந்த விமர்சனங்கள் ஒன்றும் பாலாவுக்குப் புதிதல்ல. அவருடைய ஆசான் பாலு மகேந்திராவே, சேது படத்தின் கதையைக் கேட்டு இப்படியான கேள்வியை அவரிடம் முன்வைத்திருக்கிறார். உங்களைப் போல படம் எடுக்க நான் எதற்கு என்று பாலு மகேந்திராவைப் பார்த்து பதில் கேள்வியைக் கேட்டு திகைக்க வைத்திருக்கிறார் பாலா.

Advertisement

Advertisement

ஆனால், பாலாவின் படங்கள் என்பது வெறுமன சோகங்களை மட்டும் வெளிப்படுத்தக் கூடியவை அல்ல. தன் கதாபாத்திரங்களுக்கான நியாய தர்மங்களைப் பேசக் கூடியவை. இந்தப் புள்ளியிலிருந்து சற்று விலகி எடுக்கப்படும் படங்களைக் கலைப் படங்களாகக் கருதாமல், கமர்ஷியல் படங்களாகக் கருதுகிறார். அப்படியாக அவர் எடுத்த ஒரு கமர்ஷியல் படம்தான் நந்தா.

மலையாளத்தில் மம்மூட்டியின் நடிப்பில் திரைப்படமாக்கப்பட்ட எம்.டி. வாசுதேவன் நாயரின் ஒரு நாவலின் முடிவிலிருந்து தொடங்கிய புள்ளிதான் நந்தா. "ஒரு பைத்தியக்கார மகனைக் கொன்ற தாய்" என்ற முடிவிலிருந்து ஈர்க்கப்பட்ட பாலா, அதை, "ஒரு கொலைகார மகனைக் கொன்ற தாய்" என்ற முடிவாக மாற்றுகிறார். அவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அவர் கிளைமாக்ஸிலிருந்து பின்னோக்கி பயணப்பட்டிருக்கிறார்.

கதாநாயகனாக இருக்கும் மகனைத் தாய் கொலை செய்கிறாள் என்றால் தமிழ் சினிமாவில் அது வியாபாரம் ஆகாது. இலக்கியத்துக்குச் சரி. சினிமாவுக்குத் தவறு. இந்தச் சவாலை ஏற்று, கமர்ஷியல் படமாக அதைச் சாத்தியப்படுத்தியிருப்பார்.

நந்தாவுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா, தங்கையுடன் கோயிலில் வழிபாடு செய்வதுதான் கதையின் தொடக்கம். நந்தாவுக்கு அம்மாதான் உலகம். அம்மாவுக்கு அந்தக் கோயில்தான் உலகம். ஆனால், தந்தை சரியில்லை. தாயைத் துன்புறுத்தக்கூடிய, துரோகம் இழைக்கக்கூடிய கொடூரமானவர். தாயின் அழுகையும் தங்கையும் அழுகையும் அவனை உணர்ச்சிவயப்படவைக்க, ஒரு கட்டத்தில் தந்தையை அடித்துக்கொன்றுவிடுகிறான். அடித்தால் செத்துவிடுவார் என்று தெரியாத அளவுக்கு அப்பாவிதான் நந்தா.

இந்த நிகழ்விலிருந்து நந்தாவின் அம்மாவுக்கோ மகனைப் பார்த்தாலே முரடன் என்ற எண்ணம். சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அம்மா சந்திக்க விரக்தியில் சண்டையில் ஈடுபட, அந்த நேரம் பார்த்து நந்தாவைப் பார்க்க அம்மா வருகிறார். படம் முழுக்க இப்படிதான். நந்தாவின் அம்மா பார்வையில் அவன் எப்போதும் முரடன். எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கக் கூடியவன். வன்முறையாளன்.

இயல்பில் சமூகத்தின் பார்வையில்தான் ஒருவன் வன்முறையாளனாக இருக்க முடியும். சமூகம்தான் அவனை முரடன் என்று அடையாளப்படுத்தும். அம்மாவுக்குப் பிள்ளையாகவே இருப்பான். ஆனால், நந்தாவில் இது நேர்மாறானது. இந்த முரண்தான் நந்தாவின் சோகம்.

வளர்ந்த பிறகும் தாயின் அரவணைப்பை ஏங்கிய ஒருவனுக்குத் தந்தை ஸ்தானத்தில் கிடைப்பவர்தான் ராஜ்கிரண். இவருடைய வருகைதான் இந்தப் படத்தைக் கலைப் படம் எனும் தளத்திலிருந்து கமர்ஷியல் சினிமாவின் பரப்புக்கு எடுத்துச் செல்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர் ராஜ்கிரண் - பெரியவர். தமிழ் உணர்வு மிக்கவர். இலங்கைத் தமிழர்களுக்கு நேசக் கரம் நீட்டுபவர். அரசியல் கட்சிகள் மீது துவேசம் கொண்டவர். இந்த ஊருக்கு எல்லாம் நாம் தாரை வார்த்துக் கொடுத்தது என்கிற மனோபவம் கொண்டவர்.

தான் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் பெரியவருக்கு உண்டு. இந்த ஏக்கமே நந்தாவைத் தன் வாரிசாக ஏற்கும் புள்ளிக்கு அவரை நகர்த்துகிறது. தாயின் அன்பை நுகராமல் வளர்ந்தவனுக்கு இந்த அரவணைப்பு சொர்க்க நிலை.

இவர்கள் இருவருக்குமான கதையாக மாறுவதைத்தான் கமர்ஷியல் படம் என்கிறார் பாலா. நான் கடவுள், பரதேசி படங்களில் எல்லாக் கதாபாத்திரங்களுக்கான களமாக திரைக்கதை இருப்பதால், தான் எடுத்த படங்களில் இவ்விரு படங்கள் தமக்கு நெருக்கமானதாக இருப்பதாகக் கூறுகிறார். நந்தாவில் நந்தாவையும் பெரியவரையும் உயர்த்த வேண்டும் என்பதே மேலோங்கி இருக்கிறது.

அதற்கான நியாய தர்மங்களே அதர்மத்தை ஒழிக்கும் அவதாரம். பெரியவர் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கருதுவார். பூமியில் அதர்மங்கள் தலைதூக்கும்போது, அதை அழித்தொழிக்க மேலிருந்து கடவுள் இறங்கி வர மாட்டார். நாமே கடவுள். நாமே அதர்மங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று வேதங்கள் மூலமாக நந்தாவினுள் தன் சிந்தனையைப் புகுத்தித் தன் வாரிசாக்குகிறார்.

பெரியவர் மீதான நந்தாவின் பித்துநிலையை பாலா விவரித்த விதம் ஆழமானது. கிளைமாக்ஸுக்கு முன் காதலியின் கழுத்தை நெரித்தபடி தாயின் வாசமும் தெரியாது, உன்னைத் தொட்டதில்லை என்பதால் உன் வாசமும் தெரியாது என்பார் நந்தா. அடுத்த காட்சியில் பெரியவர் பிடித்த சுருட்டின் வாசனையை நுகர்ந்துகொண்டிருப்பார். அன்புக்காக ஏங்கியவனின் வெற்றிடத்தில் காதலியைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் பெரியவர்.

பெரியவரின் மறைவுக்காக தனக்குத் தெரிந்த மொழியில், தான் நம்பும் தர்மத்தின் வழியில் நந்தா நீதியைத் தேட, அம்மாவின் பார்வையில் அவன் மீண்டும் முரடன் ஆகிறான், வன்முறையாளனாகிறான், கொலைகாரனாகிறான். அம்மாவும் மகனைக் கொன்ற கொலையாளி ஆகிறாள்.

நம் பார்வையில் பெரியவர் மறைந்துவிட்டார். அதற்கு நீதி கிடைத்துவிட்டது. அம்மா ஏற்றுக்கொள்ள முன் வருகிறாள். கரம் பிடிக்கக் காதலி தயாராகிறாள். புதிய அத்தியாயத்தைத் தொடங்கி நேர்மறையான வாழ்க்கையை வாழத் தொடங்கலாம். நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நந்தாவின் முடிவை இப்படிக் காட்ட பாலா தயாரில்லை.

நந்தாவின் அம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்த கோணத்திலிருந்து பார்க்கும்போது, அவள் தன் மகனைக் கொலை செய்வதே அவளுடைய நியாயம். நந்தாவின் இந்த நிலைக்கு அன்பை நுகர தான் அனுமதிக்காத சூழலும் ஒரு காரணம் என்ற உணர்வே, அவளையும் மரணிக்க வைக்கிறது.

படத்தில் நிறைய இடங்களில் வேதங்களை முழங்கியிருப்பார் பாலா. எல்லாவற்றையும் தாண்டி நந்தாவிடம் இருந்ததோ ஒரேயொரு தேடல்தான் - தாயின் அன்பு. உயிருள்ள வரை தாயிடமிருந்து அது கிடைக்கவில்லை. இறுதியாக, தாயின் மடியில் கிடைத்த முதல் அரவணைப்பே தன் வாழ்நாளில் நந்தா பெற்ற முதல் வரம். பாலாவின் படைப்புகளில் கிடைத்த சாகாவரம்!

[ஜூலை 11 - இயக்குநர் பாலா பிறந்த நாள்]

summary

A bond to lean on – Director Bala’s Nandha film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments