FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

இறுதியில் அன்புக்காகவே எல்லாம்! பிதாமகனின் பிதா யார்?

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவரது 3 ஆவது படமான பிதாமகன் குறித்து...

Updated On : 11 ஜூலை 2026, 7:10 pm IST
பிதாமகன் விக்ரம், சூர்யா
பகிர்:

அது 2003 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர். சிறந்த இயக்குனரான பாலு மகேந்திராவின் பட்டறையில் தீட்டப்பட்ட கூர்மையானவர்களில் முத்தவரான பாலா அதுவரை நடிகர் விக்ரமுடன் சேது மற்றும் நடிகர் சூர்யாவுடன் நந்தா ஆகிய 2 திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட படங்களில் ஒன்றாக அமைந்திருந்தன. 

ஆனால் இதன் பின்னரே, சூர்யா மற்றும் விக்ரமுடன் இணைந்து “பிதாமகன்” எனும் புதியதொரு படைப்பை அவர் உருவாக்கி வெளியிட்டார்.

இப்படம் துவங்குவதோ தமிழகத்தின் எழில்கொஞ்சும் மாவட்டங்களில் ஒன்றான தேனியின் போடிநாயக்கனூரில். ஆனால், உங்களால் அந்த எழிலைக் கொஞ்சமும் உணர முடியாதபடி இப்படத்தின் முதல் காட்சி முழுவதும் பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டப்படுகிறது. ஆடி ஓய்ந்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட அனைவரும் கொண்டுச் செல்லப்படும் மயானத்தை நோக்கி நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் தள்ளாடியபடி நடந்து வருகிறாள். திடீரென அவளுக்குப் பிரசவ வலி அதிகரிக்க அங்குப் பணிபுரியும் வெட்டியானின் உதவியுடன் ஒரு குழந்தையை அவள் பெற்றெடுக்கிறாள். ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே தனது தாயை அக்குழந்தை இழக்கிறது. அந்தக் குழந்தைதான் இக்கதையின் பிதாமகன். 

Advertisement

Advertisement

இயக்குநர் பாலாவின் படங்களில் வரும் முதல் கதாபாத்திரங்கள் யாவரும் ஒரு வித முரட்டுத்தனத்தையே தங்களின் வெளிப்பாடாகக் கொண்டிருப்பார்கள். மேற்கத்திய சிந்தனையின் படி “message is an extension of a man” என்பதுபோல் இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் இயக்குநர் பாலா அவருடைய சொந்த குணங்களையே குணாதிசியமாக வைத்திருப்பதாகவே தோன்றுகிறது. அப்படியானால், நம் அனைவரின் கண்களுக்கும் மிகவும் கடினமானவராகவும், முரட்டுத்தனமாகக் காட்சி அளித்தவருமான பாலா இயல்பில் மிகவும் அன்பானவர். என்னவொன்று, தனது அன்பையே முரட்டுத்தனமாக வெளிக்காட்டத் தெரிந்தவர் அவ்வளவுதான். ஏனெனில், பாலாவின் கதாபாத்திரங்களும் அதனையே தங்களின் குணமாகக் கொண்டிருப்பவை. பிதாமகனோ, நான் கடவுளோ, வணங்கானோ அனைவருமே முரட்டுத்தனமான வழியில் தங்களின் அன்பை வெளிக்காட்டுபவர்கள்.  

சரி! பிதாமகனின் கதைக்கு வருவோம். மனிதர்கள் வாழ்க்கையை முடிந்தபின்பு கொண்டுச் செல்லப்படும் மயானத்தில் பிறக்கிறான் இக்கதையின் நாயகன். “சிவன் இருக்குற எடம்.. நீயாருனு தெரியுமா அந்த சிவனோட மகன்” எனும் வசனத்தைக் கூறும் வெட்டியான் அந்தக் குழந்தைக்குத் தந்தையாகவே உருவாகிறார். இடுகாட்டிலேயே குழந்தையாகத் தவழ்ந்து, சிறுவனாக வளர்ந்து, நாயகனாக உருவாகியிருக்கும் பிதாமகன் (விக்ரம்) கதாபாத்திரத்தின் பெயர் சித்தான். உண்மையில் இந்த பிதாமகனின் பிதா யார்? 

இடுகாட்டிலேயே தன்னை வளர்த்து உருவங்கொடுத்த பெயரறியாத அந்த வெட்டியான் இறந்த பின்னரே சித்தான் கதாபாத்திரம் மனிதர்கள் வாழும் நகரத்திற்கு வேலைத் தேடி வருகின்றான். போடிநாயக்கனூரில் கஞ்சா விற்று வாழ்க்கையை நடத்தினாலும் படிக்கிற பிள்ளைகளுக்கு கஞ்சா விற்க மாட்டேன் எனும் கோட்பாடு உடன் வாழ்கிறவள் கோமதி. கோமதியாக நடித்த நடிகை சங்கீதாவின் நடிப்பிலுள்ள அடாவடியும் கடினமும் கம்பீரமும் உண்மையிலேயே அவர் ஒரு கஞ்சா விற்கும் பெண்தான் என நம்பவைத்துவிடுகிறது. ஆனால், அந்த நடிப்பை வெளியே கொண்டுவருவதற்கு பாலாவிடம் இருந்து எத்தகைய இன்னல்களை அவர் கடந்து வந்தார் என்பது அவர்கள் இருவருக்குமே வெளிச்சம்! 

பசியில் அலைந்து சண்டையில் சிக்கும் சித்தானை உடனே புரிந்துக்கொண்டவளாக அவனுக்கு அவள் உணவு வழங்குகின்றாள். ஒருவேளை கோமதிதான் பிதாமகனின் பிதாவா? 

இவர்களுக்கு அடுத்தபடியான நடிகர் சூர்யா நடித்த சக்தி மற்றும் நடிகை லைலா நடித்த மஞ்சு கதாபாத்திரங்கள், இயக்குநர் பாலா எவ்வளவு காதலும், நகைச்சுவை உணர்வும், வெகுளித்தனமும் கொண்டவர் என்பதை வெளிக்காட்டுகின்றனர்.  

எல்லா கதாபாத்திரங்களும் அறிமுகமாகி விட்டனரா? இல்லை! தேனியின் காட்டுக்குள்ளே நூற்றுக்கணக்கான ஏக்கர் கஞ்சாத் தோட்டத்திற்கு அதிபதியாக, பலம் வாய்ந்த அடியாட்களை வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார் முதலாளி சேகர். காட்டுக்குள்ளே பல்லாக்கில் தூக்கிச் செல்லப்படும் சேகரிடம் வேலையாளாக வந்துச் சேரும் சித்தானின் விசுவாசத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். மேலும், சித்தான் போன்ற ஒரு விசுவாசி தனக்கு மீண்டும் கிடைக்கமாட்டான் என்பதை உணர்ந்த அவர் இப்படத்தில் முதல்முறையாக ஒரு மனிதனை மரியாதையோடு அழைத்தது என்றால் அது சித்தானைதான்.

அவர் மீது இருக்கும் விசுவாசத்தினால் சிறைக்குச் செல்லும் சித்தானை பல்வேறு மோசடி வேலைகளைச் செய்து பிழைத்து வந்த சக்தி அங்குதான் முதல்முறையாகச் சந்திக்கின்றான். ஒருவேளை கஞ்சா முதலாளி சேகர்தான் சித்தானின் பிதாவா?

சித்தானின் கதாபாத்திரத்தை இயக்குநர் பாலா ஒரு நாயோடு ஒப்பிட்டு படைத்திருக்கக் கூடும். உணவு தேடி வருவதும் தனக்கு ஏதேனும் உதவியோ அல்லது அடைக்கலமோ வழங்கியவர்களின் மீது மிகுந்த விசுவாசம் மற்றும் அன்புடன் இருப்பதும், ஆபத்தில் தன்னைத் தற்கார்த்துக் கொள்வதற்கு முறையற்ற முறையில் அடித்துத் தள்ளும் மிருகத்தனமும் சித்தானின் இயல்பாகவே இக்கதையில் அமைந்துள்ளன. 

இயக்குநர் பாலா தனக்கென்று உரிய எளிய மக்களின் நகைச்சுவையைச் சூர்யாவின் (சக்தி) கதாபாத்திரம் கொல்லப்படும் வரையில் அங்கங்கு நன்றாகவே வடிவமைத்திருக்கிறார். சிறையில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் சித்தான் மீது சக்தி காட்டிய அன்பும், சக்தியைப் புரிந்துகொண்ட சித்தான் அதற்குத் தனது அன்பால் பதிலுரைக்கும் காட்சிகள் ஒரு நட்பின் ஆழத்தை நன்றாகவே உணர்த்துகின்றன. சித்தானைக் காப்பாற்ற வந்து சிறையில் அதிகாரிகளிடம் சிக்கி கடும் காயங்களுடன் திரும்பி வரும் சக்தியைப் பார்க்கையில் முதல்முறையாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கினான் சித்தான். அப்போது, இசைக்கிறார் இசைஞானி இளையராஜா “யாரது யாரது” எனும் பாடலை. அந்தப் பாடலும், பாலா இயக்கிய காட்சியும் சக்தியுடன் நம்மையும் ஒரு சித்தானாக அமர்ந்து இப்படத்தைக் காணச் செய்கின்றன.

சேகரை மிரட்டி சிறையில் இருந்து சித்தானை வெளியே கொண்டு வரவைக்கிறான் சக்தி. அதன்பின்னர், ஆதரவற்ற ஜீவன்களாகவே வாழ்ந்து வந்த சித்தான், சக்தி, கோமதி மற்றும் சக்தியைக் காதலித்த மஞ்சுவும், சக்தியின் நண்பர்களான கருணாஸ் மற்றும் மனோ பாலா அனைவரும் இசைஞானியின் இளங்காத்து வீச ஒரே குடும்பமாகவே வாழ்கின்றனர். சக்தியும் அந்த குடும்பமும்தான் பிதாமகனின் பிதாவா?

அந்தக் காட்சிகளைக் காணும்போது ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் அவர்களின் குடும்பத்தில் நாமும் இடம்பெற வேண்டுமெனும் ஒரு எண்ணத்தைக் கொடுக்கிறார் இயக்குநர் பாலா! ஆனால், சித்தானின் விசுவாசத்தை அண்ணாச்சி தனது ஆதாயத்திற்காக தவறான வழியில் நடத்துவதை விரும்பாத சக்தி அதை எதிர்க்கிறான். அதற்காக சித்தானின் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் சக்தி கொல்லப்படுகிறான். 

சிரித்த முகமாகவே காட்சி தந்த சக்தி கொல்லப்பட்டு அவலப்பார்வையுடன் கோணிப்பையில் கட்டப்பட்டு வீசப்படும் காட்சியில் அவ்வளவு நேரம் நம்மைச் சிரிக்க வைத்த பாலா மொத்த சிரிப்பையும் பறித்துக்கொள்கிறார். சக்தி கொல்லப்பட்டதும் ஒன்றும் புரியாமல் நிற்கும் சித்தானை அவனது குடும்பத்தினரே அடித்து விரட்டுகின்றனர். முதல்முறையாகத் திருப்பி அடிக்காமல் நண்பன், குடும்பம் என அவன் கொண்டிருந்த இரண்டையுமே இழந்து நிற்கதியாகும் சித்தான் முதல்முறையாக துக்கத்தையும், துரோகத்தையும், வலியையும், வேதனையையும் உணருகிறான். 

அவன் வெளியேறி வந்த மயானத்திற்கே சக்தியுடன் திரும்பிச் செல்கிறான். எரிமேடையிலேயே வளர்ந்த அவன் முதல்முறையாக அங்கு எரியூட்டப்பட்டிருப்பது வெறும் சிதையல்ல உயிரற்ற தனது நண்பன் என்பதை உணருகின்றான்.

இந்தக் காட்சியில் நடிகர் விக்ரம் வெளிக்காட்டிய நடிப்பிற்காக மட்டுமே அவருக்குத் தனியாக ஒரு தேசிய விருதைக் கொடுத்திருக்கலாம். மனிதர்கள், விலங்குகள் என அனைத்து ஜீவன்களும் ஓரளவிற்கு மட்டுமே வலியைத்தாங்கும் சக்திக்கொண்டுள்ளன. இங்கு விலங்கைப்போலவே வளர்ந்த மனிதனான சித்தான் தனது சக்தியை மொத்தமுமாக இழந்ததும் அதற்குப் பழித் தீர்க்க விரும்புகிறான். 

சித்தானின் வலியும் அவனுக்குள் கொளுந்துவிட்டெரிந்த வேதனைத் தீயும் சேகரின் முழு கஞ்சா சாம்ராஜ்ஜியத்தையும் எரித்து சாம்பலாக ஆக்குகின்றது. அதன்பின்னர், சக்தி உணர்ந்த வலியை உணர்த்த ராஜாவாக சேகர் வாழ்ந்த அதே ஊரில் அவரை விரட்டி அடித்து இழுத்து வருகிறான் சித்தான். வெட்டியானாக வளர்ந்ததினாலோ என்னவோ எந்த எழும்பு எப்படி வலிக்கும் என்பதை உணர்ந்தவனாக ஒவ்வொன்றாக அடித்து உடைக்கின்றான். தன்னை மனிதனாக மாற்றிய சக்தியை இழந்து மீண்டும் மிருகமான சித்தான் சேகரின் குரல்வளையைக் கடித்தே அவரைக் கொல்கின்றான். அதனோடு, தன்னை விரட்டிய குடும்பத்தின் மீது மண்ணை அள்ளிப்போட்டு அங்கிருந்து செல்கின்றான்.

வழக்கமாக இயக்குநர் பாலா காண்போரைக் கலக்கமடையச் செய்யும் படங்களையே எடுப்பதாகக் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அவர்மீது முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவர் படங்கள் அனைத்தும் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருப்பதாலோ என்னவோ எளிய மக்களின் வாழ்க்கையைப் போல இக்கதைகளும் சிரிப்பும், சந்தோஷமும், துக்கமும், தியாகமும், இழப்பும் நிறைந்தவையாக இருக்கின்றன. ஆனால், இக்கதையில் வரும் முரட்டுத்தனங்கள் அனைத்தும் அதனடியில் அன்பையே கொண்டிருக்கின்றன.

இப்படத்திற்காக, நடிகர் விக்ரமுக்கு இந்திய அரசு தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது. இக்காலத்தில், இப்படத்தை பார்த்ததாலோ என்னவோ மனதுக்குள் “ஆஸ்கர் அவார்ட் குட்றா டிரம்பே” எனும் வசனம்தான் ஓடியது. இவ்வளவு நேரம் சிரிப்பேற்றி, சுவாரசியம் கூட்டி, இறுதியில் நம்மைக் கலக்கமடைய வைத்து படத்தை நிறைவுச் செய்யும் இயக்குநர் பாலாதான் நாம் தேடிய பிதாமகனின் பிதா! 

Regarding Pithamagan, the third film directed by Bala...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments