FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விவாதமேடை

கோல்களில் கைப்பேசிக்கு தடை குறித்து...

கோல்களில் கைப்பேசிக்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
- பிரதிப் படம்
பகிர்:

புனிதம் காக்கப்படும்

நிற்க நேரமில்லாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடப்பவர்களையும், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்களையும் பார்த்தால் மனம் வேதனை அடைகிறது. இந்தச் சூழலில் கைப்பேசிக்குக் கோயில்களில் தடை விதித்திருப்பது சரியான நடவடிக்கை. கோயிலில்கூட கைப்பேசியின் ஓசை ஒலிப்பது, அதில் சப்தமாகப் பேசுவது என்பது பிற பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும். நாகரிகம் கருதி தாமாக முன்வந்து கைப்பேசியைத் தவிர்க்க இயலாத நபர்களுக்கு இதுபோன்ற உத்தரவின்மூலம்தான் கோயில்களின் புனிதத்தைக் காக்க முடியும்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

Advertisement

Advertisement

பாதுகாக்கவும் வசதி

மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கைப்பேசியின் பயன்பாடு கோயிலையும் ஆக்கிரமித்துள்ளது என்பதே உண்மை. நவீன தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் விதமாகவும், சக வழிபாட்டாளர்களுக்கு இடையூறு ஏற்படாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடனும் கோயில்களில் கைப்பேசிக்குத் தடை என்பது வரவேற்கத்தக்கது. கோயில் நுழைவாயில்களிலேயே மிகவும் கண்டிப்புடன் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். பக்தர்களின் கைப்பேசிகளைப் பாதுகாக்க தேவையான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

சீனி. மணி, பூந்தோட்டம்.

மறுபரிசீலனை தேவை

கோயிலுக்குள் நுழையும்போது கைப்பேசியை எடுத்துச் செல்ல விதித்துள்ள தடை உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கைப்பேசியை "ஸ்விட்ச் ஆஃப்' செய்துவிட்டு உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கலாம். கைப்பேசியைப் பாதுகாக்க ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அப்படி செய்தால் அது எந்நேரமும் பாதுகாப்பாக இருக்குமா? செருப்பை விட்டுப் போனாலே, பலருக்கும் மனது முழுவதும் சுவாமி தரிசனம் செய்வதில் இருப்பதில்லை; அதுபோல, கைப்பேசியை வெளியே விட்டுச் சென்றால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

எஸ். மோகன், கோவில்பட்டி.

வருவாய் உயரும்

கோயில்கள் இறைவன் வாழும் இல்லங்கள்; இங்கு கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்பட்டு சக பக்தர்களின் இறைச் சிந்தனைக்கு இடையூறாக அமையும். அதிக ஓசையுடன் பாடல்களைக் கேட்பது, திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே தரிசன வரிசையில் செல்லும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. இது மட்டுமல்லாமல் கோயில் வளாகத்துக்குள்ளும், இறைவன் சந்நிதியிலும் "ரீல்ஸ்' எடுப்பது பக்தர்களை முகம் சுழிக்க வைக்கும். கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைக்க கட்டணம் வசூலிக்கப்பட்டால், கோயிலின் வருவாய் உயர வாய்ப்புள்ளது. எனவே, அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வரவேற்கத்தக்கது

தமிழக கோயில்களில் கைப்பேசியைக் கொண்டுசெல்ல அரசு தடை விதிக்கத் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பக்தர்கள் கைப்பேசிகளைக் கோயிலுக்குள் கொண்டு செல்லும்போது அழைப்புகளை எடுத்துப் பேசுகின்றனர்; மேலும், பலர் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சிலைகளை புகைப்படம் எடுப்பது, தற்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்களும் சரியாக சுவாமி தரிசனம் செய்யாமல் மற்றவர்களையும் இன்னல்களுக்கு உள்ளாக்குகின்றனர். எனவே, கைப்பேசிக்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கதே.

ராம், ஈரோடு.

நல்ல விஷயமே...

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையான கோயில்களில் மட்டும்தான் பக்தர்கள் கைப்பேசியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிப்பதற்கு முன்பாக, கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் உள்ளிட்ட வசதிகளை கோயில் வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். கோயில்களின் புனிதத் தன்மை, அமைதியைப் பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். படைத்தவனை வணங்குவதற்குச் செல்லும்போது படைப்பினங்களுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லதுதானே!.

மவ்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

நல்ல முன்னெடுப்பு

கோயில் என்பது புனிதமான இடம்; அதில் கைப்பேசியை உபயோகிப்பது தவறு என்ற எண்ணத்தினால்தான், இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. பெரும்பாலும் கோயில்களில் இருக்கும் அந்த நேரத்தில் நமக்குக் கைப்பேசி வேண்டாம். மேலும், கைப்பேசியில் பேசுவது மட்டுமல்லாமல், அதில் புகைப்படம் எடுப்பது, "ரீல்ஸ்' எடுப்பது என்று மக்களின் சில வரம்பு மீறிய செயல்களால், இதைக் கட்டுப்படுத்தவே கைப்பேசியை கோயில்களுக்கு எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளது அரசு. இது மிகவும் நல்ல முன்னெடுப்பு.

பிரகதாம்பாள், கடலூர்.

வரலாறு அறிவோம்

கோயிலுக்குள் கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்கது. கோயில் கோபுரம், சுவர்களிலும் மற்றும் தூண்களிலும் உள்ள சிற்பங்கள் வெறும் அலங்காரம் அல்ல; அவை நம் முன்னோரின் இயற்கையுடன் இணைந்த வாழ்வு, தொழில், கலை, பண்பாடு, அறம் மற்றும் சமூக ஒழுக்கம் போன்றவற்றைத் தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் வரலாற்றுப் பதிவுகள். எனவே, கைப்பேசியை விட்டு கண்களால் சிற்பங்களையும், மனதால் இறைவனையும், சிந்தனையால் முன்னோர் அறிவையும் அனுபவிப்போம். கோயில் என்பது வழிபாட்டுக்கானது மட்டுமல்ல, அறிவுக்கூடமுமாகும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

நிறையும், குறையும்...

கைப்பேசிக்குத் தடை விதித்து என்பது பல சந்தேகங்களை பக்தர்களிடம் ஏற்படுத்தும். சாதாரணமாகச் சொல்வதுபோல் கைப்பேசியின் வசதியைப் பொருத்து பொருள்படும். சாதாரண கைப்பேசியை முதியவர்கள் கையாள்கிறார்கள்; தொடுதிரை கைப்பேசியை பலரும் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான முக்கியக் கோயில்களில் பல மணிநேரம் காத்திருந்துதான் தரிசனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் தங்களது பணியை, அறிதிறன்பேசி வாயிலாகவும் செயல்படுத்துவதால் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகுதான் அதிலுள்ள நிறை}குறைகள் தெரிய வரும்.

பழகுபலகை, உடுமலைப்பேட்டை.

தவிர்த்தல் நலம்

இறை நம்பிக்கையுடன் இதயம் பேசுவதுதான் வழிபாடு. மனம் ஒன்றி பிரார்த்தித்து நிம்மதி அடைய வேண்டிய கோயிலில் கவனச்சிதறல் ஏற்படுவது சரியல்ல. கோயில்களில் கைப்பேசிக்குத் தடை என்பதையும், பாதுகாப்பு கவுன்ட்டர்கள் குறித்த கட்டண விவரங்களையும் மக்களுக்குப் புரிய வைப்பது இந்தத் திட்டத்துக்கு கூடுதல் வலு சேர்க்கும். இன்றைய இந்து சமய அறநிலையத் துறை காலத்துக்கேற்ப சிந்தனை செய்து கைப்பேசிக்குத் தடை ஏற்படுத்துவது வந்தனை விஷயங்களில் நிந்தனை நிகழாதவாறு அமையும். இதயத்துக்கு அமைதியும், நிம்மதியும் தேடும்போது, அதற்குப் பாதிப்பு தரும் கைக்கருவியை தவிர்த்தலே நல்லது.

ஆர். விநாயகராமன், திசையன்விளை.

முற்றிலும் சரி

கோயிலில் சாதாரண உரையாடல்கூட மற்றவர்களின் பிரார்த்தனைக்கு இடையூறாகவே உள்ளது. அதுபோல கர்ப்பக் கிரகத்தில் இருக்கும் கடவுளை மற்றவர்கள் அறியாமல் புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக நவீன வசதிகள் கொண்ட கைப்பேசிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சூழலில் கோயில்களில் கைப்பேசிக்கு தடை விதித்தது முற்றிலும் சரியே. அவசர அவசியங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கைப்பேசி தற்போது "ரீல்ஸ்', "மீம்ஸ்' போன்ற விஷயங்களுக்கும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

வழிபாட்டு உரிமையைக் காக்க...

தமிழகக் கோயில்களின் ஆன்மிகச் சூழலைப் பேணவும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைக் காக்கவும், தற்படம் (செல்ஃபி) மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும், கோயில் நிர்வாக அனுமதியின்றி கருவறையில் சுவாமி சிலைகளை புகைப்படம் எடுப்பதைத் தடுக்கவும் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, இந்து சமய அறநிலையத் துறை செப்டம்பர் 1 முதல் கைப்பேசிக்குத் தடை அறிவிப்பு செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறையை கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கே.ஆர். ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

தாமதமான முடிவு

இந்த உத்தரவை எந்தத் தலையீடுமின்றி உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். காலப்போக்கில் இந்தத் தடையை விலக்கிக் கொள்ளாமல் அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அமைதியையும், நிம்மதியையும் தேடித்தான் மக்கள் கோயில்களுக்கு வருகிறார்கள். வழிபாட்டின்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களுக்கும் கவனச் சிதறல் ஏற்படும். கோயிலுக்கு வருவதன் நோக்கத்தையே சிதைக்கும் போக்குக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை மிகவும் தாமதமாக விதிக்கப்பட்ட தடையாகும்.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

புனிதம் காக்க...

கோயில்கள் ஆகம விதிகளின்படியே உருவாக்கப்பட்டுள்ளன; அவை பொழுதுபோக்கும் இடமல்ல. கோயில்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிகளின்படியே நடைபெறுகின்றன. அதேபோல கோயில்களில் இறைவனை வணங்குவதிலும் ஆகம விதிகள் உள்ளன. கோயில்களில் மூலவரை கைப்பேசியின் மூலம் புகைப்படம் எடுப்பது ஏற்புடையதல்ல. இந்தச் செய்கைகளால் கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும். ஆகம விதிகளைப் பாதுகாத்து, கோயில்களின் புனிதத் தன்மையைக் காக்க விரைவில் அமலுக்கு வர இருக்கும் இது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

கே. ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments