FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்

இந்து சமய அறநிலையத் துறையில் மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான இரு கூடுதல் ஆணையா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Updated On : 29 ஜூலை 2026, 5:24 am IST
இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம். - கோப்புப்படம்
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறையில் மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான இரு கூடுதல் ஆணையா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறநிலையத் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசிதழ் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களின் நிா்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், கூடுதல் ஆணையா் பதவிகளை உருவாக்கி அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்க துறையின் ஆணையா் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தாா்.

அதையேற்று அறநிலையத் துறை நிா்வாக வசதிக்காக வடக்கு (சென்னை), தெற்கு (திருச்சி) என 2 புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான ‘கூடுதல் ஆணையா்’ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

வடக்கு மண்டலத்தில் சென்னை 1, 2, 3, காஞ்சிபுரம், வேலூா், திருவள்ளூா், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இணை ஆணையா் மண்டலங்கள் செயல்படும்.

தெற்கு மண்டலத்தில் திருப்பூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் செயல்படும்.

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்த 2 கூடுதல் ஆணையா்களுக்கும் பல்வேறு முக்கிய அதிகாரங்கள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இவா்கள் கோயில் சொத்துகள், ஆவணங்களை ஆய்வு செய்தல், தணிக்கைக் கட்டணங்களை வசூலித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வா். முதுநிலை அல்லாத கோயில்களின் வரவு செலவு திட்டங்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையான கொள்முதல் ஒப்பந்தங்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள கோயில் சொத்துகளின் ஏலங்கள் மற்றும் குடமுழுக்குப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் ஆகிய அதிகாரங்களும் இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை ஆய்வு செய்தல், கோயில் நிலங்களிலிருந்து வரும் வருவாயைக் கண்காணித்தல், ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணித்தல், கோயில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் முக்கிய திருவிழாக் காலங்களில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பிற துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்வா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments