FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநில உரிமைகளில் சமரசம் இல்லை என முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருப்பது குறித்து...

மாநில உரிமைகளில் சமரசம் இல்லை என முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

26 ஆகஸ்ட் 2026, 5:27 am IST
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - Youtube
பகிர்:

ராஜதந்திரம் வேண்டும்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பு வெறும் அரசியல் அறிவிப்பாக இல்லாமல், நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டிய உறுதிமொழியாக அமைய வேண்டும். மாநிலங்களின் உரிமை என்று வரும்போது, குறிப்பாக நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழ்நாடு நீண்ட காலமாகப் போராடி வருகிறது. எனவே, அரசியல் அணுகுமுறையை விடுத்து தேவையான இடங்களில் உரிமைக்காக உறுதியாகப் போராடுவதுடன், ராஜதந்திரத்துடனும் அணுக வேண்டும்.

சோம.இளங்கோவன், தென்காசி.

Advertisement

Advertisement

சரியான அணுகுமுறை

மத்தியில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் மாநில அரசுகளுக்கான உரிமைகளைப் பறிப்பதில் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்கிறது. அதிலும் பொதுப் பிரிவில் அல்லது மாநில உரிமைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. எந்த ஒரு மாற்றத்துக்கும் தனது சம்மதத்தை மாநில அரசு பெறவே மத்திய அரசு மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறது. இதை மனத்தில் கொண்டுதான் முதல்வர் ஜோசப் விஜய் மாநில உரிமைகளில் சமரசம் கிடையாது என்று கூறியுள்ளார். இந்தச் சூழலில் முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதும் சிறந்த அணுகுமுறையும்கூட.

இரவிக்குமார், சென்னை.

தெளிவுபடுத்த வேண்டும்

மாநில உரிமைகளில் சமரசம் கிடையாது என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறுவது வேடிக்கையானது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக உறுதியாக முடிவெடுக்காத நிலையில் முதல்வர் உள்ளார். மக்களுக்காக எந்த ஒரு போராட்டமும் முன்னெடுக்காமல், திடீரென முதல்வர் பதவியில் அவர் அமர்ந்து விட்ட நிலையில், மாநில உரிமைக்காக திராவிட கட்சிகள் நடத்திய போராட்டங்கள், தியாகங்கள் குறித்து தெரிந்துகொண்டு எவை மாநில உரிமைகள்?, இவற்றில் எதில் சமரசம் கிடையாது? என்று அறிவிக்க வேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

அறிக்கையாக மட்டுமே...

முதல்வரின் இந்தக் கூற்று அறிக்கையாகக் கூறப்பட்டதுதான். பிரச்னைகள் ஏற்பட்டபோது கூறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இது உண்மையானால் இன்று காவிரி நதிநீர் பிரச்னையிலும், அண்மையில் நடைபெற்ற தென்மண்டல மாநாட்டில் நீட் தேர்வு உள்பட மாநிலப் பிரச்னைகளிலும் முதல்வர் சமாதானமானது எப்படி? சட்டப்பேரவையில் முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி, பின்பு பின்வாங்கும் அறிவிப்பாக இதைக் கருதலாமே தவிர, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டியதில்லை.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

பாராட்டத்தக்கது

திராவிடக் கட்சிகளின் முழக்கத்தை முதல்வர் ஜோசப் விஜய்யும் தொடர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக உரிமைக்கு எதிரான முடிவுகளை தவெக அரசு எப்போதும் எதிர்க்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம்; ஆனால், மாநில உரிமைகள் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியிருப்பது பாராட்டத்தக்கது. நீட் உள்ளிட்ட விஷயங்கள் இனி கவனம் பெறும்.

க. அருச்சுனன், செங்கல்பட்டு.

ஒன்றிணைந்து செயல்பட...

அந்தந்த மாநில மக்களின் தேவைகளுக்கேற்ப முடிவு எடுக்கும் உரிமை மிகவும் முக்கியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது நாடு வளர்ச்சியடைகிறது. கல்வி, சுகாதாரம், தொழில் துறை, விவசாயம்,போக்குவரத்து, குடிநீர் மற்றும் நீர்வள மேலாண்மை போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடர்புடைய விஷயங்களில் மாநிலத்தின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. மாநில உரிமைகள் மற்றும் அங்கீகாரங்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அன்பரசி சக்திவேல், விழுப்புரம்.

முன்னுதாரணம்

மத்திய, மாநில அரசுகள் இரட்டைக் காளை வண்டியைப் போன்றவை. ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்பட்டால் இலக்கை அடைய முடியாது."மத்திய அரசுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; மாநில உரிமைகளுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் மத்திய அரசு முடிவுகளை எடுத்தால் அதை உறுதியாக எதிர்ப்போம்' என்ற முதல்வரின் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதற்கு முன்னுதாரணம். மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பது ஏற்புடையதல்ல.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

சட்டம் தேவை

மாநில உரிமைகள் எவை என்பதை எவ்வாறு பிரித்து அறிவது என்பதே குழப்பமாக இருக்கிறது. மொழி, கல்வி, பண்பாடு, மருத்துவம், விளையாட்டு போன்றவற்றில் எது மாநில உரிமை என்று நாம் சொல்கிறோமோ, அதில் மத்திய அரசும் உரிமை கொண்டாடி முதன்மை பெறுகிறது. நமது அரசியல் சட்டம் தனித்தனியாக மத்திய - மாநில உரிமைகளை வகுத்திருந்தாலும், மத்திய அரசின் தலையீடுகளால் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு சரியான தீர்வு, மத்திய அரசு மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து, தெளிவான, இறுதியான சட்டத்தை இயற்ற வேண்டும். அதன் பிறகுதான் சமரசம் பற்றிப் பேச முடியும்.

மகிழ்நன், கடலூர்.

செயல்பாட்டில் தெரியும்

மாநில உரிமை என்பது மத்திய,மாநில அதிகாரப் பகிர்வுடன் தொடர்புடையது. கல்வி, நிதி, மொழி, நிர்வாக அதிகாரம், இயற்கை வளங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களின் அதிகாரம் குறையக் கூடாது என்பதே மாநில உரிமை வாதத்தின் அடிப்படை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததும் இதே மாநில உரிமை விவாதத்தின் ஒரு பகுதியாகும். அவர் மாநில உரிமைகளை உண்மையில் எவ்வாறு பாதுகாப்பார் என்பது செயல்பாட்டின் மூலமே மதிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

மல்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

முதல்வரின் அக்கறை

அடிப்படை உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது ஒவ்வொருவருடைய கொள்கை. மாநில உரிமைகளை சமரசம் செய்து கொள்வதால் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சில அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தினால்தான் முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருக்கிறார். முதல்வரின் கருத்து தமிழ்நாட்டின்மீது அவருக்கு இருக்கும் அக்கறை, ஆர்வம், முன்னேற்றம் எல்லாவற்றையும் காட்டுகிறது.

உஷா முத்துராமன், மதுரை.

எதார்த்தமானது

ஜாதி}மதம்}மொழி கடந்த பொதுவான தேசியம் என்றால் "வந்தே மாதரம்' பாடல் உள்ளிட்ட சர்ச்சைகள் நிகழாது. மாநில நிதி உரிமையும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுடன் மட்டுமே பிணைந்திருக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் "உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற முழக்கம் முன்னணி வகுத்தது. இன்றைய முதல்வர் எதார்த்தமான அணுகுமுறையுடன் மாநில உரிமைகளில் சமரசம் இல்லை என்று கூறியிருப்பது இதயபூர்வமானது என்பதுடன், நம்பிக்கை அளிப்பதாகும்.

என். ஜானகிராமன், திசையன்விளை.

கூட்டாட்சித் தத்துவம்

மாநில உரிமைகளில் சமரசம் இல்லை என்ற கருத்து, கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மாநிலங்களின் நிதி, மொழி, நிர்வாகம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல விவசாயிகளின் வாழ்வாதாரம், நீர் உரிமை, இயற்கை வளங்கள், வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நில உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்கால வளர்ச்சியை முன்வைத்து மாநில உரிமைகளையும், இயற்கை மற்றும் மக்கள் உரிமைகளையும் பாதுகாத்து, நிலையான வளர்ச்சியை உருவாக்குவதே உண்மையான முன்னேற்றமாகும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

ஒரே குடும்பமாக...

முன்னாள் முதல்வர் அண்ணா "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுய ஆட்சி' என்றார். எந்த மாநில முதல்வரும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள். மத்திய}மாநில அரசு என்பது கணவன்}மனைவிபோல. அவர்களிடம் கருத்து மோதல்கள் இருக்கலாம்; அது, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் நலனுக்காக கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதுபோல மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு முன்வைக்கும் சில திட்டங்களை சமரசத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது ஆரோக்கியமான மக்கள் நலன் சார்ந்த அரசியல்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

வரவேற்கலாம்

மாநில உரிமைகளில் சமரசம் இல்லை என முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருப்பது சரியானதே. இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டே கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரும் கர்நாடக அரசு நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என்கிறார். மதம் - இனம் - மொழி விவகாரத்தால் பிற்காலத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதி தென்மண்டலம் (கர்நாடகம், கேரளம், தமிழகம்) அமைக்க பண்டித நேரு முயன்றபோது காமராஜர் அதை ஏற்க மறுத்தார். இந்தியாவின் தற்போதைய சூழலில் தமிழக முதல்வரின் கருத்தை வரவேற்கலாம்.

பி. சுந்தரம், வெண்ணந்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments