முகப்பு
கட்டுரைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

அறிஞர் அண்ணா நினைவாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடத்தை மருத்துவமனையாக, ஜெயலலிதா தலைமையிலான அரசு மாற்றியமைக்க முற்பட்டால், அதைக் கண்டிக்கும்வகையில் தன் உடலுக்குத் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவு

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:19 AM
பகிர்:

அறிஞர் அண்ணா நினைவாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடத்தை மருத்துவமனையாக, ஜெயலலிதா தலைமையிலான அரசு மாற்றியமைக்க முற்பட்டால், அதைக் கண்டிக்கும்வகையில் தன் உடலுக்குத் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக, சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியதாக ஏடுகளில் வந்துள்ளது. அதையும் அண்ணாவுக்குச் செய்யும் கடமையாகக் கருதிச் செய்யப் போவதாகக் கூறியதாகவும் செய்தியில் உள்ளது.

 இது சரியா, தவறா என்ற வாதத்தில் இறங்குவதற்கு முன்பே, தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான, பன்முகத் திறன்களையும் கொண்ட கருணாநிதி, தீயிட்டுத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பதை, உடனே கைவிடுமாறும், எந்தக் கோரிக்கைக்காகவும், எவரும் தன்னுயிரையே தீயிட்டுக் கொளுத்தி மாய்த்துக்கொள்ளும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத நடைமுறையைப் பின்பற்றக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.

 கடந்த காலங்களில் மத நம்பிக்கைக்காகப் பலர் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட வரலாறு உண்டு. வியட்நாமிலும், தொடக்கத்தில் புத்த பிக்குகள் தங்களுக்குத் தீயிட்டு மாண்டதன் மூலம், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்ற சம்பவங்கள் நடந்தது உண்டு. அத்தகைய தியாகத்தை மதித்து இரங்கல் உரை நிகழ்த்திய ஹோசிமின், தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முறையைப் பின்பற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதையும் நினைவுபடுத்துகிறேன்.

Advertisement

 நம் தமிழ்நாட்டில், நம் வாழ்நாளில், நம் கண்முன்னால், இந்தி மொழியை ஒரே ஒரு ஆட்சி மொழியாகத் திணிக்க முயன்றதைக் கண்டித்து தமிழார்வம் உள்ள இளைஞர்கள் தீக்குளித்து மாண்ட சோக வரலாற்றையும், இலங்கைத் தமிழர்களின் உயிர்களையும் உரிமைகளையும் காத்திடக் கோரி தன்னுடலுக்கே தீயிட்டுக்கொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட மேலும் பலர் தொடர்ந்து உயிர்ப்பலி கொடுத்த தியாகச் செயல்களை, அற்பமாகக் கருதி, கண்டிக்கிறேன் என அவசர முடிவுக்கு வர வேண்டாம்.

 முத்துக்குமார் இறந்த செய்தியைக் கேட்டபோதும் அவரது உடலுக்கு மாலையிட்டு மரியாதை தெரிவித்த பிறகு, இந்தத் தற்கொலை முறையை யாரும் பின்பற்ற வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்தேன்.

 அதே உணர்வோடுதான் கருணாநிதி தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவைக் கைவிட வேண்டுவதோடு, தற்கொலை முறைப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என இளைஞர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் பணிவுடன் வேண்டுகிறேன்.

 கருணாநிதி ஒரு தனி மனிதர் மட்டும் அல்ல.

 அவர் ஓர் இயக்கத்தின் தலைவராக அறுபது ஆண்டுகளாக மக்களிடம் அறிமுகமானவர். எழுத்தாளர். 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்காத ஒரே அரசியல்வாதியும் ஆவார். இப்போதைய மத்திய ஆட்சியில் முக்கிய பங்கேற்றிருப்பவர். அத்தகைய பெருமை படைத்த ஒருவர், பல லட்சம் உடன்பிறப்புகளின் அன்பையும், போற்றுதலையும் பெற்றிருப்பவர். அவர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக அறிவித்தால், அவரைப் பின்பற்றி நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் அந்தத் தவறான வழியைக் கடைப்பிடிக்க பலர் முன்வரக் கூடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

 தன்னுயிரை, மாய்த்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையாகும். பகுத்தறிவு இந்த வகைப்போர் முறையை முற்றாக நிராகரிக்கிறது. பெரியார் இந்த முறையை ஏற்றுக்கொண்டதே இல்லை. உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட பெரியார் ஏற்க மறுத்தார். அவருக்கே உள்ள பாணியில், ஏற்கெனவே பல கோடிப் பேர் சோற்றுக்கு வழியின்றி பட்டினி கிடக்கிறபோது, சாப்பிட்டுவிட்டு வந்து சாப்பிடாமல் இருப்பேன் என்கிற கிறுக்குத்தனம் என்றார்.

 மனித குலத்தின் பாவத்தைப் போக்க என்று உபதேசித்த இயேசுநாதரும், தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியதே இல்லை. சித்திரவதை செய்து, சிலுவையில் ஆணிகளால் அறைந்து தொங்க விடப்படுவதற்கே தன் உடலை ஒப்படைத்தார். அதனால்தான் அவரது தியாகமும், போதனையும் உலகு தழுவிய மதமாக வளர்ந்தது.

 சாக்ரடீஸýம், நஞ்சைக் குடித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆட்சியாளர்களின் தவறான உத்தரவை ஏற்று குடிமகன் என்ற முறையில், நஞ்சைக் குடித்து மாண்டார். அதுவும் தற்கொலை அல்ல. நீதி காக்கத் தரப்பட்ட உயிர்ப்பலி.

 பாண்டியன் நெடுஞ்செழியனும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. "தென்புலம் காவல், என் முதற் பிழைத்தது, கெடுக என் ஆயுள்' என நீதியை அறிவித்து, அதை நிலைநாட்டிவிட்டு மாண்டார்.

 கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதியும், "புகழ் எனின் உயிரையும் கொடுப்பர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்று கூறியது, தற்கொலை முறை அல்ல.

 புகழ் காக்கப் போராடுவதில் உயிரைக் கொடுக்கலாம் என்பதுதானே பொருள். இவையனைத்தும் கற்றறிந்துள்ள கருணாநிதி, தீக்கொளுத்திக் கொண்டு மாய்வேன் எனக்கூறியிருப்பது, சரியல்ல.

 நம் நாட்டில், கணவனை இழந்த பெண், இறந்து போன கணவனின் உடல் எரிக்கப்படுகிறபோது, அத்துடன் தானும் உடன்கட்டை ஏறி விடுவது கற்புக்கு அடையாளம் எனக் கூறிக் கடைப்பிடித்து வந்ததை அறிவோம். இதுவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல், எனவேதான் பேரியக்கம் நடத்தி அதைச் சட்டப்படி தடைசெய்ய வேண்டினார்கள்.

 எனவே, பகுத்தறிவுப் பாசறையில் பயின்று வளர்ந்த அரசியல் தலைவர் ஒருவர், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கவே கூடாது. இப்போதாவது அம்முடிவைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.

 இந்தியச் சட்டப்படி பார்த்தால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது குற்றம் எனக் கூறி கைது செய்யலாம் அல்லது வழக்குத் தொடரலாம். காவல்துறையும், அரசும் அவசரப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை என்று பாய்ந்துவிட வேண்டாம். அது இந்த அறிவிப்பைவிட பெரிய தவறு ஆகிவிடும்.

 கலைஞர்கள், கவிஞர்கள் சட்ட வாக்கியங்கள் எழுதுபவர்கள் அல்ல. "கொலை வாளினை எடடாமிகு கொடியோர் செயலறவே' என பாரதிதாசன் எழுதியதற்காக கொலை செய்யத் தூண்டுகிறார் என வழக்குத் தொடரலாமா? "அணி செய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்த கவியுளம் காண்கிலாதார்' என்ற கதை ஆகிவிடக் கூடாதல்லவா? இது சட்டப்பிரச்னையோ அதன் நுட்பங்களைப்பற்றி விவாதிக்கிற வழக்கோ அல்ல. இது நாடும், மக்களும் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்னை.

 தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வது என்ற முடிவை எடுப்பது, எளிதான காரியமல்ல. இதற்கும் அசாத்திய துணிச்சல் வேண்டும். இனி வாழ்வதில் பயன் இல்லை என்ற இறுதி முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய ஒருநிலை கருணாநிதிக்கு வந்துவிட்டதா என்ன?

 இதைவிட, உலகம் முழுமையிலும் பரவிக்கிடக்கும் செம்மொழி பேசும் செந்தமிழ் மக்கள் அனைவரையும், ஆறுதல்படுத்தக்கூடிய ஊக்கப்படுத்தக்கூடிய, பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் மக்களின் உயிர், உரிமைகளைக் காத்துக் கொடுக்கக்கூடிய, ஒரு சீரிய அரசியல் முடிவை எடுக்க அரிய வாய்ப்பு வந்துள்ளது.

 இலங்கையில், இன்றும் முள்வேலிக் கம்பிகளிட்ட சித்திரவதை முகாம்களில் சிக்கியுள்ள தமிழ் மக்களை ஒருவார காலத்துக்குள் விடுவித்து, அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பாவிட்டால், நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படும் இனப்போரின் இறுதிக் கட்டத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றியும், போர்க்குற்றங்கள் குறித்தும், நடுநிலை நீதிமன்றம் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு, அத்தகைய தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்றும், தவறினால் அல்லது தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க முற்பட்டால், அந்த நொடிப்பொழுதில் திமுக, மத்திய அரசை ஆண்டு வரும் கூட்டணியிலிருந்து விலகி விடும். தமிழக மக்களோடு சேர்ந்து தமிழக மக்களின் உரிமைகளைக் காக்கப் போராடப் போகிறேன் என அறிவித்தால், அதுதான் உண்மையான தமிழ்ப் போராளிக்குப் பெருமை சேர்க்கும் முடிவாக இருக்கும்.

 "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்பது சொற்களுக்கு மட்டும் அன்று. செயல்களுக்கும்தான். "நோற்றதவம் இழக்கின்றாய் என நொந்தனன் ஆதலின் நுவல்வதுஆயினேன்' என வேண்டுகிறேன்.

 தன்னுயிரை மாய்க்கும் முடிவைக் கைவிட்டு, முடிவெடுக்க முடியாது திணறும் மத்திய அரசை முடிவு எடுக்க வைக்கும் முடிவை எடுத்திட முன்னாள் முதல்வர் கருணாநிதி வற்புறுத்துவதுதான் அவருக்கும் பெருமை, அவர் வணங்கும் தமிழுக்கும் பெருமை!

 (கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.