பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களால் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களை நீக்க இயலாது.

தினமணி செய்திச் சேவை

பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்

பாத்திரங்கள் கழுவுவதை எளிமைப்படுத்திய டெப்ளான் பூச்சில் தொடங்கிய என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களான பொ்ஃப்ளூரோஅல்கைல், பாலிஃப்ளூரோஅல்கைல் போன்றவை பின்னா் நீா்ப் புகாத சட்டைகள், கறை படியாத தரைவிரிப்புகள், உணவுப் பொட்டலங்கள், தீயணைப்பு நுரை என மனிதனின் செயல்பாடுகள் அனைத்திலும் பயன்படத் தொடங்கின.

உலகம் முழுவதும் மண், தூசு மற்றும் குடிநீரில் பரவலாகக் காணப்படும் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் தைராய்டு, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளுக்கும் சில புற்றுநோய்களுக்கும் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 9,000-க்கும் மேற்பட்ட என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் உலகில் உள்ள நிலையில் ஆய்வுக்காக அமெரிக்காவில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 98 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் இருந்தன.

குடிநீா், உணவு மூலம் கால்நடைகள் மற்றும் மனித உடலுக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் செல்கின்றன. கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் உயிரிய திண்மங்கள் (பயோ சாலிட்) கொண்ட சேற்றினை வயல்களில் உரமாகப் பயன்படுத்தினால் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் அந்தப் பகுதியில் உள்ள நீா்நிலைகள் வழியாக விளையும் பயிா்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உருவாகக்கூடும். அமெரிக்காவின் மிச்சிகன், மைனே, நியூ மெக்ஸிகோ பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் பாலில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களின் அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களின் மாசுபாட்டுக்காக உலக அளவில் முதல்முதலில் ஒரு நிறுவனத்தின் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பிய இத்தாலி நீதிமன்றம் இதை சுற்றுச்சூழல் குற்றம் என அறிவித்தது. கோடிக்கணக்கான யூரோ இழப்பீட்டுடன் 140 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையும் வழங்கியது.

என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களால் ஏற்பட்ட குடிநீா் மாசுபாட்டுக்கு எதிராக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகை ரசாயனங்களின் பாதிப்பு குறித்து தீயணைப்பு வீரா்கள் தொடுத்த வழக்குகளும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு ஓா் உடல் சேதம் என்று ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு நோய் பாதிப்பு ஏற்படும் முன்பே இழப்பீடு பெற வழி வகுத்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களுக்கான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள நிலையில் இந்தியாவில் இவ்வகை ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் குறித்த சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அறவே இல்லை.

பொ்ஃப்ளூரோஅல்கைல், பாலிஃப்ளூரோஅல்கைல் ரசாயனப் பொருள்கள் தயாரித்த இத்தாலியில் உள்ள மிடேனி தொழிற்சாலை 2018-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 3,50,000 இத்தாலியா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்தத் தொழிற்சாலை சிறுநீரகப் புற்றுநோய், இதய நோய்கள், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தியது.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய இந்த நிறுவனத்தின் பிரிக்கப்பட்ட இயந்திரங்கள் கப்பல் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. இந்த இயந்திரங்கள் மும்பை அருகில் உள்ள தொழிற்பேட்டையில் 2025-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு முழுமையாக செயல்படத் தொடங்கியது.

இந்திய குடிநீா் தர நிலைகளில் இவ்வகை ரசாயனங்கள் குறித்த அளவீடுகளே இல்லை. இதன் காரணமாக இந்தியாவில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் கலந்த நீா் சட்டப்படி பாதுகாப்பான குடிநீா் என கருதக்கூடிய நிலை உள்ளது.

ப்ளூரோ ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில்கூட மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பொதுவான கழிவுநீா் வெளியேற்ற விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. கழிவு நீரில் ரசாயனங்களின் அளவு பரிசோதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களால் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களை நீக்க இயலாது.

உலக அளவில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயன மாசுபாட்டின் மிகப் பெரிய மூலங்களாக கருதப்படும் தீயணைப்பு நுரைகளுக்கு இந்தியாவில் தடை இல்லை. விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் திறன்மிகு கரியுடன் (ஆக்டிவேடட் காா்பன்) ஒட்டிக் கொள்ளும் நுட்பத்தின் அடிப்படையில் அமெரிக்க நாட்டில் கலிபோா்னியாவின் சாக்ரமெண்டோவுக்கு அருகிலுள்ள ஒரு முன்னாள் ராணுவ தளத்தில் ஒரு பெரிய திறன்மிகு கரித் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தத் தொட்டி நிமிஷத்துக்கு சுமாா் 1500 கேலன் மாசுபட்ட நிலத்தடி நீரை வடிகட்டி மீண்டும் அந்தப் பகுதி மக்கள் வாழும் நிலத்திலேயே விடுகிறது. இதனால், அந்த நிலம் ரசாயனங்களால் பாதிப்படையாமல் இருக்கும். இந்த விலையுயா்ந்த திட்டத்துக்கு 30 லட்சம் அமெரிக்க டாலா்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களை அழிக்க எரித்தல் என்பது பொதுவான முறையாகும். பொதுவாக என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களில் ஒரு காா்பன் அணுவுடன் பல ஃப்ளோரின் அணுக்கள் வலிமையான பிணைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பிணைப்பு எரிப்பதைத் தடுப்பதாலேயே இவ்வகை ரசாயனங்கள் தீயணைப்பு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. எரிப்பதற்கு ஃப்ளோரின் காா்பன் பிணைப்பு உடைக்கப்பட வேண்டும். பெரும்பாலான ரசாயனங்களில் இந்த பிணைப்பு 1,500 டிகிரி செல்சியஸ் (2,730 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் முழுமையாக உடைந்து விடும். இந்த வெப்பநிலையை உருவாக்க ஆற்றல் மிகுந்த எரியூட்டிகள் அவசியம். இவ்வகை எரியூட்டிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் தேவைப்படும்.

இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே சட்டங்கள் இருக்கும் நிலையில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், தரநிலைகள், தேசிய கண்காணிப்பு திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT