2032-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை 12 மடங்கு அதிகரித்து 30 மில்லியனாக உயரும்!
2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை 30 மில்லியனாக உயரும் என்ற ஆய்வறிக்கை குறித்து...
புது தில்லி: 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை 30 மில்லியனாக உயரும் என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலக வெப்பமயமாதல், அதிகரித்து வரும் பல்வேறு இயற்கை பேரிடர்கள், மேற்காசிய போர் காரணமாக எரிபொருள், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு அந்நியச் செலவானி மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால் வரும்காலங்களில் எரிப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். இதனால் மின்சார வானங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. 20230-க்குள் மின்சார வாகனங்களின் பயன்பாடு 12 மடங்கு அதிகரித்து 30 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் கச்சா எண்ணெய் இற்குமதி செலவில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது மின்சார வாகனச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது நாட்டின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய திருப்பமுனையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களை நம்பியிருந்த நிலை மாறி மின்சார வாகனங்களை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, அரசின் ஊக்கத் திட்டங்கள், பெருகிவரும் சார்ஜிங் நிலையங்களுமே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணங்கள். மின்சார வாகனங்கள் சந்தையில் இருசக்கர வாகனங்கள் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
2032-க்குள் 12 மடங்கு அதிகரிக்கும் மின்சார வாகனங்கள் விற்பனை
இந்திய எரிசக்தி சேமிப்புக் கூட்டமைப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட எரிசக்தி தீர்வுகள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தேசிய மின்சார வாகன இலக்கு திட்டத்தின் கீழ் அதிக வளர்ச்சி காணும் சூழலில், 2030-க்குள் இந்தியாவின் மின்சார வாகன சந்தை 12 மடங்கு அதிகரித்து, சுமார் 30.4 மில்லியன் வாகனங்கள் என்ற இலக்கை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை வலுவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது; 2024-ல் 2.0 மில்லியனாக இருந்த மின்சார வாகனங்களில் இருந்து 2025-ல் 2.6 மில்லியன் வாகனங்களாக உயர்ந்துள்ளது, இது சுமார் 26 சதவீத விற்பனை வளர்ச்சியைக் குறிக்கிறது.
எரிபொருள் விலையேற்றம் மின்சார வாகனங்களின் செலவு சார்ந்த சிக்கனம் மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறது; அதே வேளையில், மின்சார ரக வாகனங்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் புதிய தயாரிப்புகளின் அறிமுகம் ஆகியவை நுகர்வோரிடையே ஈர்ப்பையும் சந்தைக்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்கின்றன. இது இந்திய பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 2024-ல் 8.1 சதவீதமாக இருந்த நிலையில், அது 2025-ல் சுமார் 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றம், மின்மயமாக்கலை நோக்கிய சந்தையின் தொடர்ச்சியான கட்டமைப்பு மாற்றத்தையே காட்டுகிறது. உலகளாவிய போர், அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றங்கள் காரணமாக நுகர்வோரின் கவனம் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
2025-ல், மின்சார இருசக்கர வாகனங்கள் 60.1 சதவீத விற்பனையுடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன்; மூன்று சக்கர மின்சார வாகனங்கள் பயங்களிப்பு 31.6 சதவீதமாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து, விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் மொத்தம் சுமார் 2.5 மில்லியன் மின்சார வாகனங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருந்தன.
அறிக்கையின்படி, நான்கு சக்கர மின்சார வாகனங்களின் பங்கு 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பொது கொள்முதல் திட்டங்கள் மற்றும் வாகனத் தொகுப்பு இயக்குநர்களின் உறுதிப்பாடுகளின் ஆதரவுடன், மொத்த விற்பனையில் பேருந்துகள் 0.2 சதவீதமும், லாரிகள் 0.4 சதவீதமும் பங்கைக் கொண்டிருந்தன.
இதற்கு இணையாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பேட்டரி பேக் அளவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் பேட்டரிக்கான தேவையும் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இந்த காலகட்டத்தில் மொத்தத் தேவை 19 ஜிகாவாட்டில் இருந்து 362 ஜிகாவாட் ஆக உயரும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
2029-க்குப் பிந்தைய காலத்தில் தற்போதைய நடைமுறை மற்றும் புதிய மின்சார வாகன சூழல்களுக்கு இடையே விரிவடையும் இடைவெளி, இந்தியாவின் மின்சார வாகனப் பயணப்பாதை என்பது கொள்கை ஆதரவின் வலிமை, உள்கட்டமைப்பு உருவாக்கத்தின் வேகம் மற்றும் உள்ளூர் உற்பத்தியின் வேகம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
அறிக்கையின்படி, 2025-ல் மொத்த பேட்டரி தேவை சுமார் 19 ஜிகாவாட்-ஐ எட்டியது; இது 2024-ல் இருந்த 13 ஜிகாவாட் அளவிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வாகும். இது பல்வேறு வாகனப் பிரிவுகளிலும் விற்பனை அளவு அதிகரிப்பு மற்றும் சராசரி பேட்டரி பேக் அளவுகள் அதிகரிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது.
கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாக, பேட்டரி நுகர்வில் நான்கு சக்கர வாகனங்கள் 40 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளன; அதைத் தொடர்ந்து மூன்று சக்கர வாகனங்கள் 27 சதவீதத்துடனும், இரு சக்கர வாகனங்கள் 23 சதவீதத்துடனும் உள்ளன. மொத்த பேட்டரி தேவையில் பேருந்துகளின் பங்கு 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது; மின்சாரப் பேருந்துத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரி பேக்குகள் காரணமாக, அவற்றின் வாகன விற்பனைப் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் இந்த பேட்டரி தேவை விகிதம் மிக அதிகமாக உள்ளது. இலகுரக, நடுத்தர மற்றும் கனரக மின்சார சரக்கு வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருவதால், லாரிகள் 1.9 சதவீத பேட்டரி தேவையைப் பதிவு செய்துள்ளன.
உதிரிபாகங்கள் சந்தை ரூ.3.55 லட்சம் கோடியை எட்டும்
இந்தியாவின் மின்சார வாகன உதிரிபாகங்கள் சந்தையின் மதிப்பு 2025-ல் ரூ. 41,000 கோடியாக இருந்தது. தற்போதைய நடைமுறை சூழலின் கீழ், இது 2032-க்குள் ரூ. 3,02,000 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இது சுமார் 38 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பிரதிபலிக்கிறது.
2025-ஆம் ஆண்டின் சந்தைக் கலவையில் பேட்டரி பேக்குகள் 52 சதவீதத்துடன் ஆதிக்கம் செலுத்துகின்றன; அதைத் தொடர்ந்து மோட்டார்கள் 22 சதவீதமும், இன்வெர்ட்டர்கள் 12 சதவீதமும், பேட்டரி மேலாண்மை அமைப்புகள் 11 சதவீதமும், டிசி-டிசி கன்வெர்ட்டர்கள் 3 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
சார்ஜிங் கட்டமைப்பு 21 மில்லயனாக உயர்வு
இந்தியாவில் மின்சார வாகனங்களின் சார்ஜிங் நிலையங்கள் தற்போதைய தேவையில் இருந்து 12 முதல் 17 மடங்குகளாக அதிகரித்து 2.1 மில்லியனாக உயர வேண்டியுள்ளது.
இந்தியாவில் மோட்டார் மற்றும் கன்ட்ரோலர் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தி 30-40 சதவீத அளவிலேயே உள்ளது, இன்வெர்ட்டர் விநியோகம் இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கின்றன, மேலும் உள்நாட்டுமயமாக்கலில் மென்பொருள் திறனைவிட வன்பொருள் உற்பத்தி பின்தங்கியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 மற்றும் 2032-க்கு இடைப்பட்ட காலத்தில் உருவாகும் ரூ. 2,61,000 கோடி மதிப்பிலான கூடுதல் சந்தையானது, தேவை பெருமளவில் அதிகரிக்கும் நிலையை எட்டுவதற்கு முன்பாகவே பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ட்ரெய்ன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் வலுவான உள்நாட்டு உற்பத்தித் திறனை நிறுவும் நிறுவனங்களுக்கு அதிகப் பலனை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு
நாட்டின் மிக முக்கிய மின்சார வாகனங்கள் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. சென்னையில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள், இலகுரக கார்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளன.
நடப்பு ஆண்டு தரவுகளின்படி, தமிழ்நாட்டில் புதிய மின்சார வாகனங்களின் பதிவுகளில் இருசக்கர வாகனங்களின் பங்கு 12.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால் நாட்டின் கச்சா எண்எய் இறக்குமதி செலவு ஆண்தோறும் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை குறைய வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
India's electric vehicles (EV) market is projected to surge 12x to 30.4 million units by 2032 under the high-growth NEV (National EV Target) scenario...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.