முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

மூத்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்துவிட்ட பேரோசை நம் காதுகளில் கேட்டுக்கொண்டிருப்பதைப் பற்றி...

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:10 AM
தோழர் ஆர். நல்லகண்ணு!
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:55 AM

மரணம் தரும் வலி தாங்கிக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஒரு பெரும் புயலைப் போல வேகம் கொண்டு நம்மைச் செயலிழக்க வைத்துவிடுகிறது. நம் நேசத்துக்குரிய மூத்த தோழர் ஆர். நல்லகண்ணு நம்மைச் விட்டு பிரிந்து மறைந்து விட்டார். மூத்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்துவிட்ட பேரோசை நம் காதுகளில் கேட்கிறது. அவர் வாழ்க்கை மிகுந்த வினோதங்களைக் கொண்டிருந்தது. நெல்லை கம்யூனிஸ்ட்கள் சதி வழக்கில் 23 வயதில் தூக்கு தண்டனையைப் பெற்றிருக்க வேண்டியவர். எஞ்சிய வாழ்க்கை, அவருக்கு காலம் அளித்த சன்மானமா என்பது தெரியவில்லை; கடந்த 42 ஆண்டுகள் அவரோடு அரசியலில் உடன் பயணம் செய்திருக்கிறேன்.

அவர் செயலாளர் பொறுப்பிலிருந்த முழுக் காலத்திலும், துணைச் செயலராக உடன் இருந்திருக்கிறேன். இன்று உயிரற்ற உடலைப் பார்க்கிறேன்; ஓய்வறியாது ஓடித் திரிந்த கால்கள் ஒடுங்கிக் கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட குரல் தமிழ்நாட்டின் எந்த மூலையில் கேட்டாலும் அதனால் இனிமேல் ஓடிச் செல்ல முடியாது. சிரிப்பைத் தவிர வேறு எதையுமே அறிந்திராத அந்த முகம் வாடி சுருங்கிப் போய் இருக்கிறது.

அந்த முகத்தின் புன்னகை பரவசத்தை இந்த மண்ணில் யாராலும் இனிமேல் பகிர்ந்து கொள்ள முடியாது. மரணத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. என்ன செய்ய முடியும்; மரணம் தூக்கிவைத்த சுமையை நாம் சுமந்துதான் ஆக வேண்டும். ஆனாலும், துயரத்திலும் ஆழ்மனம் அவரிடம் அமைந்த வாழ்வின் ஆழ்ந்த பொருளைத் தேடிப் பார்க்கிறது.

Advertisement

அது கும்மிருட்டில் தோன்றிய திடீர் வெளிச்சம் போன்றது. எனக்கும் இவருக்கும் இடையில் அமைந்த உறவு இதிலிருந்து தோன்றியதாக இந்த மரணத்தில் உணர்கிறேன்.

இன்றைய அரசியல் உலகம் ஏதோ ஒரு திக்கற்ற திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மை தேவையில்லை; கடந்த காலத்தின் அர்ப்பணிப்பு அரசியலும் தேவை இல்லை; குறுகிய ஆதாயங்கள் மட்டுமே இதற்குப் போதுமானது. தோழர் நல்லகண்ணு வாழ்ந்த வாழ்க்கையை இந்த இடத்திலிருந்து ஆராய்ந்துப் பார்க்க மனம் விரும்புகிறது.

இவர் வாழ்க்கை ஒரு தூய தத்துவ வாழ்க்கை. எளிமை என்பது அரசியலில் பெரிதாக இன்று பேசப்படுகிறது. அரசியலில் தங்களை எளியவர்களாகக் காட்டிக் கொள்ள எத்தனையோ நடிப்பு பாவனைகள் வந்து விட்டன. தோழரின் எளிமை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பதிவு செய்துள்ளார். '1981-ஆம் ஆண்டில் உடுமலைப்பேட்டையில் ஒரு பொதுக்கூட்டம் பேசிவிட்டு, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அப்போது, இரவு 12 மணி; ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு, வழியனுப்ப வந்தவர்களுடன் சப்தம் போட்டு அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்து பெஞ்சில் ஒரு பையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஒருவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

அவரை எங்கள் சப்தத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை. மதுரைக்குச் செல்லும் முதல் பேருந்து வந்து நின்றது. எல்லோரும் பரபரப்படைந்தார்கள்; பக்கத்து பெஞ்சின் பெரியவரும் எழுந்து விட்டார். அவர் எனக்குத் தெரிந்தவர் மட்டுமல்ல, தமிழகம் நன்கறிந்த அரசியல் தலைவர் நல்லகண்ணுதான் அவர். விவசாய மாநாட்டுக்கு வந்திருந்தேன் என்று பதிலளித்தார். இனிமேல் பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்டவரை எங்கே பார்க்கப் போகிறோம்' எனப் பதிவு செய்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ். இதை மனம் இப்போது யோசித்துப் பார்க்கிறது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:03 AM

மிக மிக எளிமையானவர் என்று அறியப்பட்ட தோழர் நல்லகண்ணு, வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள். அவரது தந்தை ராமசாமி தேவர் பிரிட்டிஷ் ஆட்சியில் நீதிமன்ற ஜூரியாகப் பணியாற்றினார். அவருக்குப் பாதுகாவலாக ஒரு காவலர் சைக்கிளில் முன்செல்ல பின்னால் ஓர் அலங்கார மாட்டு வண்டியில் அவர் நீதிமன்றத்துக்குச் சென்று வருவார் என்று கூறப்படுகிறது. இவரது மூத்த சகோதரர் முத்துராமலிங்கம் சுங்கத் துறை துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். இந்த விவரங்கள் நல்லகண்ணுவுடன் பல ஆண்டுகள் மிக நெருங்கிப் பழகியவர்களுக்குக்கூட தெரிந்திருக்கவில்லை.

பணக்காரத்தனத்தைக் காட்டிக் கொள்வது ஒருவிதமான நோய். இந்த நோய் வந்தவர்கள் படும்பாட்டை நான் கவனித்திருக்கிறேன். இதற்காக பொய்களை சிலர் மனம் துணிந்து சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை இயக்கத்தின் பொதுப் பண்புகளில் ஒன்று தனது குடும்ப செல்வப் பின்னணியை கூறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது.

தோழரிடம் அமைந்த இந்த உயர் பண்பு, பல காலம் என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறது. இந்த ஆளுமையை வேறு யாரிடமும் இவ்வளவு ஆழமாக நான் பார்த்ததில்லை. மரணத் தில் இதை நினைத்துப் பார்க்கிறபோது கண்களில் கண்ணீர் ததும்புகிறது. இதைப் போன்ற மற்றொரு சம்பவம்-புலியூர்குறிச்சியில் நான்கு வெடிகுண்டுகளுடன் தோழர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டு காலம் விசாரணைக் கைதியாக சித்திரவதை செய்யப்பட்டார்; 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

மகன் சிறைக்குச் சென்ற பெரும் துயரில் இவரது தந்தை கோயிலுக்கு குடியேறி, அங்கிருந்து திரும்பி வராமலேயே இறந்து போனார். மிகப் பெரிய குடும்பம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கிறது. இது எத்தகைய இழப்பு என்பதை உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எத்தனையோ பேர் சிறிதாக இழந்ததைப் பெரிதாக இழந்து விட்டதாக காலமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன்.

இவர் தனது இழப்பு குறித்து யாரிடமும் பேசியதை நான் அறியேன். என் வாழ்நாளில் இவ்வாறானப் பண்பை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அடக்குமுறை காலத்தில், விசாரணையில் தோழரிடம் எந்தத் தகவல்களையும் பெற முடியவில்லை. தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ரகசியம் உயிர் போன்றது.

ஓர் இடத்தில் தகவல் கசிந்தால் பல தலைவர்களின் மரணத்துக்கு அதுவே காரணமாக அமைந்து விடும். இந்திய அளவில் கொடிய சித்திரவதைக்குப் பின்னரும் ரகசியத்தை வெளியிடாதவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர். ரகசியத்தைப் பாதுகாப்பதன் மூலம் பலரின் உயிரை அன்று காப்பாற்றிய இவர், கட்சித் தோழர்களின் மீது இதே அக்கறையை வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:03 AM

அவரது அந்தத் தோழமையை எவ்வாறு மறக்க முடியும்? போராட்டக் களத்தில் வெடிகுண்டு ஏந்தி களத்தின் முதல் வரிசையில் நின்றவர் தோழர் நல்லகண்ணு. இவரிடம் இத்தகைய பொறுமை எங்கிருந்து வந்தது? அந்தப் பொறுமையில் அமைந்திருந்த சமூகப் பொறுப்புணர்வை இந்தத் தருணத்தில் ஆராய்ந்து பார்க்கிறேன்.

1995-ஆம் ஆண்டு தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறின. அந்தக் காலம் தமிழ்ச் சமூகத்தின் நல்லிணக்கத்துக்கு ஒரு சோதனைக் காலம். அந்தச் சோதனைக் காலத்தை தனிப்பட்ட முறையில் நேருக்குநேர் சந்தித்தவர் தோழர் நல்லகண்ணு. அவரது மாமனார் அன்னச்சாமி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தோழர். மருதன்வாழ்வு தலித் மக்கள் நிறைந்த கிராமம்; அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். தேநீர்க் கடைகளில் தலித் மக்களுக்கு தனி டம்ளர் வைத்த காலம். இதைத் தடுக்க தேநீர்க் கடையைத் தொடங்கியவர் அன்னச்சாமி.

ஜாதி கலவரம் தொடங்கி விட்டது; ஜாதிவாரியாக கொலை செய்து கொள்வதில் போட்டி வந்து விட்டது. கணக்குக் காட்டுவதற்காக 82 வயது தோழர் அன்னச்சாமி குரூரமாக கொலை செய்யப்பட்டார். இது எத்தகைய மோசமான ஜாதி மோதலை உருவாக்கும் என்பதை உணர்ந்த தோழர் நல்லகண்ணு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார். ஜாதி கொடுமைகளை அகற்றப் பாடுபடுவோர் இதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. கைது செய்யப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்த தோழர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஒரு காகிதத்தை எடுத்து கண்டன அறிக்கை வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரம்ப போராட்டக் காலம். தோழர் தொல்.திருமாவளவனை 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்ய அப்போதைய அரசு முடிவெடுத்திருந்தது.

'பொடா' தடுப்பு முன்னணிக்கு தோழர் நல்லகண்ணு தலைமையேற்று, அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்துக்கு எதிராக அவரிடம் வீசிய கோபக் கனலை நான் அறிவேன்.

அரிய நிகழ்வாக தோழர் ஆர்.நல்லகண்ணுவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவும் ஒரே நாளில் (26.12.2025) அமைந்தது சிறப்பானது. இந்த மாபெரும் மனிதர் குறித்த இவ்வாறான நினைவுகள் ஒருபுறம் கரை புரண்டு ஓடினாலும் மறுபுறம் எழுந்து நிற்கும் மனக்குமுறல் அமைதி கொள்ள மறுக்கிறது.

கட்டுரையாளர்: மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.