FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நிகழாண்டு அந்த எண்ணிக்கை 40 லட்சமாகக் குறைந்துள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 4:55 am IST
தொடக்கப் பள்ளி. - கோப்புப் படம்
பகிர்:

லோகநாதன் பழனிசாமி

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நிகழாண்டு அந்த எண்ணிக்கை 40 லட்சமாகக் குறைந்துள்ளது.

இதன் விளைவாக, சில இடங்களில் நான்கைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உருவாகியுள்ளது. எமிஸ் தரவுகளின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 5,800 தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக மட்டுமே பயின்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

இது கல்வி வளங்களையும் அரசின் நிதியையும் திறமையாகப் பயன்படுத்தாத நிலையை உருவாக்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 155 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 927 மாணவர்களுக்காக 310 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது, சராசரியாக ஓர் ஆசிரியருக்கு மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், இரண்டு பகுதிநேர மதிய உணவுத் திட்டப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். ஓர் ஆசிரியரின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சம் என்றும், ஒரு பகுதிநேரப் பணியாளரின் ஆண்டு ஊதியம் ரூ. 75 ஆயிரம் என்றும் எடுத்துக்கொண்டால், ஒரு தொடக்கப் பள்ளியை நடத்த ஆண்டுக்கு சுமார் ரூ. 11.5 லட்சம் செலவாகிறது.

ஒரு மாணவருக்கான ஆண்டு அரசுச் செலவு ரூ. 1 லட்சம் எனக் கணக்கிட்டால்கூட, ஒரு தொடக்கப் பள்ளியில் குறைந்தபட்சம் 11 மாணவர்கள் இருக்க வேண்டும். எனவே, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இணைக்கப்படும் பள்ளி சற்று தொலைவில் இருந்தால், 10 மாணவர்கள் பயணிக்கக் கூடிய மினி வேனை ஓட்டுநருடன் ஒரு கல்வியாண்டுக்கு வாடகையில் இயக்க சுமார் ரூ. 5 லட்சம் செலவாகும். அனைத்து குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தகைய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 295 கோடி மட்டுமே செலவாகும்.

தற்போது, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 5,800-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை இயக்குவதற்கு, பள்ளி ஒன்றுக்கு சராசரியாக ரூ. 11.5 லட்சம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் ரூ. 670 கோடி செலவாகிறது. ஆனால், மேலே சொன்னதுபோல இந்த மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.295 கோடி மட்டுமே போதுமானது.

இந்த ஒருங்கிணைப்பின்மூலம் மாணவர்கள் அதிகமான சக மாணவர்களுடன் சேர்ந்து கற்கவும், குழு நடவடிக்கைகளில் பங்கேற்கவும், விளையாடவும், சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்பதைப் போலவே, சக மாணவர்களின் கேள்விகள், பதில்களின் மூலமும் பலவற்றைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆசிரியர்களும் தங்கள் கல்வித் திறமையையும் நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி அதிக மாணவர்களுக்கு பலனளிக்க முடியும். ஆசிரியர்களும் ஓரிரு மாணவர்களிடமே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பல மாணவர்களை வகுப்பில் ஈடுபடுத்த முடியும்.

கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற கட்டமைப்புகளையும் மேம்படுத்துவது எளிதாகும். காலை உணவுத் திட்டம் போன்ற நலத் திட்டங்களை பெரிய, ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்துவதும் எளிதாகும்.

ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றையும் சிறப்பான முறையில் நடத்த முடியும். கலைத் திருவிழாக்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க முடியும்.

மேலும், ஒருங்கிணைக்கப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிப் பணியமர்த்தலாம். தமிழகம் முழுவதும் சுமார் 11,800 ஆசிரியர்களை (ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்) தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையையும் கணிசமாகக் குறைக்கலாம். ஓராசியர் பள்ளிகள் என்பதே இருக்காது.

பயன்படுத்தப்படாமல் இருக்கும் பள்ளிக் கட்டடங்களை சமூகக் கூடங்கள், பொது நூலகங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் அல்லது பிற பொதுப் பயன்பாட்டு மையங்களாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

இந்தத் திட்டத்தை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து ஓராண்டு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தலாம். அதன் முடிவுகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்து, மாணவர் நலன், கல்வித் தரம், நிதிச் சிக்கனம் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டில் கிடைக்கும் முன்னேற்றங்களை ஆய்வு செய்த பிறகு, படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தலாம்.

இந்த முன்னோடித் திட்டத்தின்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் முதலியவை மேம்படுவதால், சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் அடுத்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை குறையாது என்றும் நம்பலாம்.

ஒருவேளை, இந்தத் திட்டத்தின் பலன்கள் என்ன என்பதை ஓராண்டுக்குள் தீர்க்கமான முடிவை எட்ட முடியவில்லை என்றால், இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு செய்வதைத் தாமதப்படுத்தலாம்.

மாணவர் நலன், ஆசிரியர் வளத்தின் சிறந்த பயன்பாடு, அரசின் நிதிச் சிக்கனம் மற்றும் கல்வித் தர மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைய, மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் செயல்படும் தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைத்து, முதல்கட்டமாக 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தில் இந்த முயற்சியைத் தொடங்குவது காலத்தின் தேவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments