முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தத்தமது ஊரையும், அதிலுள்ள தமது இல்லத்தையும் விட்டு வேறோரிடத்துக்குச் செல்பவர்களின் மனங்கள் அனுபவிக்கும் ஒவ்வாமையை ஆங்கிலத்தில் "ஹோம் ஸிக்' என்று கூறுவர்.

Updated On : 23 ஜூன் 2026, 2:28 am IST
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் - X | Vaibhav Sooryavanshi
பகிர்:

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

மறைந்த நாடகக் கலைஞரும் வசனகர்த்தாவுமாகிய கிரேஸி மோகன் சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், அந்நகரின் மற்றொரு பகுதியாகிய மாம்பலத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றால்கூட தம்மால் அதைத் தாங்க முடியாது என்றும், அன்றைய இரவுக்குள் மயிலாப்பூர் வீட்டுக்குத் திரும்பி வந்தால்தான் தமக்கு நிம்மதி என்றும் தமது நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

தத்தமது ஊரையும், அதிலுள்ள தமது இல்லத்தையும் விட்டு வேறோரிடத்துக்குச் செல்பவர்களின் மனங்கள் அனுபவிக்கும் ஒவ்வாமையை ஆங்கிலத்தில் "ஹோம் ஸிக்' என்று கூறுவர்.

Advertisement

Advertisement

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொற்றொடர் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், தத்தம் குடும்பத்தினரை விட்டு வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கியிருந்து பணிபுரிபவர்களின் மனது தாம் பிறந்த மண்ணையும், தாம் வசிக்கும் இல்லத்தையும் ஒவ்வொரு நொடியிலும் நினைத்துக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை.

இவ்வளவு ஏன்? நமது நாட்டின் ராணுவம், துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவற்றில் சேர்ந்து கடுங்குளிர், வெயில், மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகிய நம் ராணுவ வீரர்கள் அல்லும் பகலும் தங்கள் குடும்பத்தினரின் நினைவாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.

இவர்களைப் போன்றே உள்ளூர் முதல் சர்வதேசக்களம் வரையில் பல்வேறு நிலைகளிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களும் "ஹோம் ஸிக்' எனப்படும் ஒவ்வாமையை அனுபவிப்பவர்களே ஆவர்.

பொதுவாக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் விளையாட்டு வீரர்களுடன் அணியின் நிர்வாகி, பயிற்சியாளர், மருத்துவர், உடற்பயிற்சி நிபுணர் உள்ளிட்டோர் மட்டுமே பயணிப்பது வழக்கம்.

அணியின் தலைவர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் தங்களின் சொந்தச் செலவில் தங்கள் இணையரை அழைத்துச் செல்வது சில சமயங்களில் அனுமதிக்கப்படுவதுண்டு. அதே நேரத்தில், மிகவும் சவாலாக அமையக்கூடிய போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள் கவனச் சிதறலுக்கு உள்ளாகக் கூடாதென்பதால் அச்சமயங்களில் வீரர்கள் தங்கள் இணையரை உடன் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

நமது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களையே எடுத்துக் கொண்டால், அவர்கள் தங்களின் பிறந்த நாள்களை மட்டுமில்லாமல் தீபாவளி, சங்கராந்தி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பண்டிகைகளைக்கூடத் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட இயலாமல் நம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து படைத்துக்கொண்டிருப்பர்.

அனுபவமுள்ள மூத்த வீரர்களைப் பொருத்தவரையில், சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற பெருமையுடன் ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் வரும் பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்.

ஆனால், வளரிளம் பருவத்திலேயே தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் நாட்டின் அணியில் பிடிக்கும் இளம் வீரர்கள் ஏறக்குறைய குழந்தைகளுக்குரிய மனநிலையில் இருப்பர் என்பதே நிஜம்.

1978-ஆம் ஆண்டு தமது 20-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல், இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் கவுண்ட்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் கடுமையான "ஹோம் ஸிக்' காரணமாக பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மால்கம் மார்ஷல் விடுபட நீண்ட காலம் ஆயிற்று.

இந்திய டி-20 அணிக்கு மிகவும் இளம் வயது பேட்டராகிய வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமது கவனத்தை ஈர்க்கிறது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவராகிய வைபவ் சூர்யவன்ஷி ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் தமது சொந்த மாநிலத்துக்காக விளையாடி வருகிறார். அவர் தமது 14-ஆவது வயதில் (2025-இல்) ஐ.பி.எல். போட்டி அணிகளில் ஒன்றாகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

நிகழாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் மிக அதிக ரன்களைக் குவித்துள்ள வைபவ் இந்திய அணித் தேர்வாளர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார். பதினைந்து வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டித் தொடர்களிலும், அவற்றைத் தொடர்ந்து வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் நமது இந்திய அணியின் சார்பாக விளையாடத் தேர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேற்கண்ட சுற்றுப்பயணங்களில், வளரிளம் பருவத்தினராகிய வைபவ் சூர்யவன்ஷியுடன் அவருடைய பெற்றோரும் பயணிப்பதற்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் போன்றே இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளால் நம் நாட்டின் பல்வேறு விளையாட்டு அணிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் பதின்ம வயது வீரர், வீராங்கனைகளுடன் அவர்களுடைய பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களையும் பயணிக்க வைப்பதற்கான நிரந்தரமான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இதன் மூலம் திறமை மிகுந்த இளம் வீரர்கள் "ஹோம் ஸிக்' பாதிப்பு எதுவும் இன்றி முழுமையான உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனைகளைப் படைக்க வழி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments