FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடன் நெருக்கடியில் அமெரிக்கா!

பொருளாதாரப் பிரச்னைக்கு தீர்வு காண உலக அளவில் புவிசார் அரசியல் பொருளாதார சிக்கல்களை அமெரிக்கா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

23 அக்டோபர் 2026, 6:23 am
கோப்புப் படம்
பகிர்:

-முனைவர் அ.ஜ. ஹாஜா முகைதீன்

அமெரிக்க கருவூலத் துறை தரவுகளின்படி, அமெரிக்காவின் தேசிய கடன் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் அரசுகள், முதலீட்டாளர்கள் மற்றும் அமெரிக்காவின் அரசுத் துறை நிறுவனங்கள் கடன்களை வழங்கியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் கடன் இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. டிரம்ப் முதல்முறையாக அதிபரான போது அமெரிக்காவின் கடன் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. 2017-க்கு பிறகு வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு கரோனா பெருந்தொற்று காலத்தில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தால் வாங்கப்பட்ட அவசரகால கடன்களாகும்.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன் டாலரை தொடுவதற்கு 192 ஆண்டுகள் ஆகின. 1981-ஆம் ஆண்டு அக்டோபரில் கடன் முதன்முறையாக 1 டிரில்லியன் டாலரை எட்டியபோது இது கற்பனை செய்வதற்கு கடினமான அளவு என்று கூறிய அப்போதைய அதிபர் ரெனால்ட் ரீகன், இந்தக் கடன் தொகை முழுவதையும் ஆயிரம் டாலர் மதிப்பிலான பத்திரங்களால் அடுக்கி வைத்தால் அந்தப் பத்திரங்களின் உயரம் சுமார் 67 மைல்கள் இருக்கும் என்றார்.

இரண்டு உலகப் போர்கள், பல்வேறு பொருளாதார நிதி நெருக்கடிகளை கடந்த பிறகுதான் கடன் 1 டிரில்லியன் டாலரை எட்டியது. தற்போதைய 40 டிரில்லியன் டாலர் கடனில் கடைசியாக வாங்கப்பட்ட 1 டிரில்லியன் டாலர் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, வெறும் ஐந்து மாதங்களில் வாங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் மீதும் சராசரியாக 1,17,000 டாலர் மற்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3,00,000 டாலர் கடன் சுமை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடன் ஒவ்வொரு விநாடியும் சுமார் 91,549 டாலர் என்ற அளவில் அதிகரிக்கிறது. சராசரியாக ஓர் அமெரிக்க குடும்பம் ஓராண்டில் சம்பாதிக்கும் வருமானத்தைவிட இந்தக் கடன் அதிகம் என்பதன்மூலம் கடன் அதிகரிக்கும் வேகத்தை தெரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்காவின் கடன் அதன் ஜிடிபி யில் 125.8% என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது. சட்டபூர்வமாக கடன் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள வரம்பை அமெரிக்கா விரைவில் எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர் நடவடிக்கைகளால் 1.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ள பாதுகாப்புத் துறை பட்ஜெட், வரி குறைப்புகள், அதிகரிக்கும் வட்டி, சமூகப் பாதுகாப்பு திட்டச் செலவுகள் ஆகியவற்றின் காரணமாக பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் பட்ஜெட் பற்றாக்குறை அளவை இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களிலேயே எட்டியுள்ளதாக அமெரிக்கக் கருவூலத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பின் பிக் பியூட்டிஃபுல் சட்டத்தின் கீழ் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சுமார் 160 பில்லியன் டாலர் நீதிமன்றத் தீர்ப்புகளால் கிடைக்காமல் போய்விட்டதும் பற்றாக்குறை அதிகரித்ததற்கு ஒரு காரணமாகும்.

அமெரிக்காவின் நிதிச் சுமையில் கடனுக்கான வட்டியே முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த 9 மாதங்களில் செலுத்தப்பட்டுள்ள 857 பில்லியன் டாலர் வட்டித் தொகையானது, தேசிய பாதுகாப்புக்காகவும் மருத்துவக் காப்பீட்டுக்காகவும் அரசு செலவிட்ட தொகையை விட அதிகம்.

கருவூல பத்திரங்களை விற்று அமெரிக்கா கடன் வாங்குகிறது. அதிகரிக்கும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க புதிய கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. ஏற்கெனவே விற்கப்பட்ட பத்திரங்கள் முதிர்வடையும் நிலையில் கடனை திருப்பித் தர போதிய வருவாய் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் புதிய பத்திரங்களை வெளியிட்டு கடன் வாங்குகிறது.

சந்தையின் தேவையைக் காட்டிலும் அதிகமான பத்திரங்களை அமெரிக்கா விற்பதற்கு முன்வரும்போது முதலீட்டாளர்கள் அதிக வருவாயை பத்திரங்களிலிருந்து எதிர்பார்ப்பார்கள். ஆகவே, அதிக வட்டிக்குத்தான் புதிய பத்திரங்களை வெளியிட வேண்டி இருக்கும். புதிய கடன்கள் மற்றும் அதிகரிக்கும் வட்டியால் பட்ஜெட் பற்றாக்குறை உயர்ந்து மீண்டும் கடன், வட்டி என கடன் சுழல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

முதலீட்டாளர்கள் பத்திரங்களை வாங்க முன்வராத நிலையில் பெடரல் ரிசர்வ் வங்கி டாலரை அச்சடித்து பத்திரங்களை வாங்கலாம். அதிக டாலர் புழக்கம் பணவீக்கத்தை அதிகரிக்கும். அதிக வட்டி மற்றும் பணவீக்கத்தால் வளர்ச்சிக்கான செலவுகளைக் குறைக்கும் அபாயம் ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களும் அதிக வட்டியை எதிர்பார்க்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்தக் கடன் நெருக்கடி நீடித்தால், "பொருளாதார ரிசஷன்' ஏற்படும்.

சர்வதேச வர்த்தகம் 60% டாலரில் நடைபெறுகிறது. பெரும்பான்மையான நாடுகள் டாலரை அதிக அளவில் (57.13%) தங்களது அந்நியச் செலாவணி கையிருப்பாக வைத்துள்ளன. தேவைப்படும்போதெல்லாம் எவ்வளவு டாலரை வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளும் வலிமையுடன் இருப்பதால், கடன்களை திருப்பிச் செலுத்துவதில் அமெரிக்கா எப்போதும் தவறுவது கிடையாது.

திவால் ஆவதற்கும் வாய்ப்பு இல்லை என்கிற அசாத்தியமான நம்பிக்கையும், உலக நாடுகள் அமெரிக்க நிதி சொத்துகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அமெரிக்கா கடன் வாங்குவதற்கு உதவுகின்றன. கடனை திறம்பட நிர்வகிக்க அமெரிக்கா தவறும் என்கிற சந்தேகம் உலக நாடுகளுக்கு வந்தால் டாலர் தனது மதிப்பை இழக்கும். அமெரிக்க பத்திரங்களின் சந்தை, டாலரின் சர்வதேச பயன்பாடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் டாலருக்கு மாற்று நாணயம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

கடனின் அளவைவிட எத்தனை காலத்துக்கு இந்தக் கடன் அழுத்தம் நீடிக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வழக்கம்போல், தனது பொருளாதாரப் பிரச்னைக்கு தீர்வு காண உலக அளவில் புவிசார் அரசியல் பொருளாதார சிக்கல்களை அமெரிக்கா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments