FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

குளிர் அதிகமானால் உடல் எதனால் நடுங்குகிறது? 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும்,

Updated On : 14 செப்டம்பர் 2017, 5:54 pm IST
பகிர்:

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், சில நேரங்களில் மழையும் பெய்து சூட்டினை தணிக்கவும் செய்கிறது. இனி மழை நாட்கள்,  பிறகு அதைத் தொடர்ந்து குளிர் நாட்கள் என சீசன் மாறப்போகிறது. 

மழையோ, குளிரோ எதுவாக இருந்தாலும் நம் உடல் ஓரளவுதான் தாங்கிக் கொள்கிறது. அதிகமானால் நம்மையும் மீறி உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும்,   குழந்தைகள், முதியவர்கள்,  உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு போர்வை போதாமல், இரண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு அடக்கமாகப் படுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 

இந்த நடுக்கம் எப்படி, எதனால் ஏற்படுகிறது? பார்ப்போம். 

Advertisement

Advertisement

நம் உடலில்,  மூளையின்,  ஒரு அங்மான 'ஹைப்போதலாமஸ்' ஆனது, மூளையின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ளது. இந்த ஹைப்போதலாமஸ் - இல் உள்ள உஷ்ண  சீரமைப்பு  மையம் தான்,  நம் உடலின் உஷ்ண நிலையைக் கண்காணிக்கிறது. நம் உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் தண்டுவடமும், சருமமும்தான் உடலின் வெப்ப நிலையைப் பற்றி ஹைப்போதலாமஸுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களுக்கு, உஷணமானியை, அக்குளில் வைத்தால்,  36.5 டிகிரி செல்சியஸ் என்றும், நாவின் கீழ் வைத்தால் 36.7 டிகிரி செல்சியஸ் என்றும், ஆசன வாயில் பொருத்திப் பார்த்தால்,  37 டிகிரி செல்சியஸ் என்றும் காட்டும். இவைதான் நம் உடலின் சராசரி வெப்ப நிலை. 

நம் உடலில் வெப்பம் அதிகமாகி விட்டாலோ, குளிர் அதிகமாகி விட்டாலோ, ஹைப்போதலாமஸிற்குத் தகவல் சென்றடைந்தவுடன், சம்பந்தப்பட்ட  வெப்ப நரம்பணுக்கள் அல்லது தட்ப நரம்பணுக்கள் துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றன. இந்த மாற்றத்தினை அறிந்து கொண்ட உஷ்ண சீரமைப்பு மையமானது, தன் சேவையை உடனே தொடங்கி விடுகிறது. உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கவும், உஷ்ணம் குறைந்தால் அதை அதிகப்படுத்தவும் செய்கிறது. 

சூடு அதிகமாக இருக்கும்பொழுது , ஹைப்போதலாமஸ் ஆனது நம் தசைகளை இறுக்கவும், விரிவடையவும் ஆணை இடுகிறது. அதனால்,  தசை நார்கள் சுருங்கி விரிவடைந்து, அதிகப்படியான வெப்பத்தை, வியர்வையாக வெளியேற்றி விடுகிறது. 

உடலின் வெப்பநிலை  மிகவும்  குறைந்து விட்டால்,  ஹைப்போதலாமஸ் ஆனது  நடுக்கம் கொடுக்கும்படி,  தசைகளுக்கு ஆணையிடுகிறது.  உடனே உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கி விடுகிறது. இந்த நடுக்கத்தின் பொழுது, சருமத்தின் துளைகள் சுருங்கவும் ஆணையைப் பெறுவதால்,  குளிர் நேரத்தில் உஷ்ணத்தினை  வெளியே விடாமல் பாதுகாக்கிறது. 

உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்த நடுக்கம் உண்டாகிறதல்லவா? அப்பொழுது ஸ்வெட்டரும்,  போர்வையும் தரும் வெப்பத்தை நம்மால் பெற முடிகிறது. நமக்கு அதிக உஷ்ணத்தினால் வியர்வை உண்டாவதும், அதிக குளிரினால் நடுக்கம் உண்டாவதும், நம் உடலை சீரான வெப்ப நிலையில் வைப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்களால், நம் அவய அங்கங்களான,  மூளை,  தண்டுவடம்,  இதயம், கல்லீரல்,  கணையம்,  சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் யாவையுமே சீரான வெப்ப நிலையில் ஒழுங்காகச் செயல்படுகின்றன. 

உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் பாலூட்டிகள் , பறவைகள், வெப்ப ரத்தப் பிராணிகள் எனவும், அப்படி வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாத முதலை, ஆமை,  தவளை போன்றவை குளிர் ரத்தப் பிராணிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 

நம் மூளையானது, ஒரு வினாடிக்கு பல மில்லியன் ஆணைகளை நம் அங்கங்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு அருமையான, அற்புதமான ஒரு அங்கத்தை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறார். வியக்கத்தக்க செயல்களைச் செய்து நம் உடலை எத்தனை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது? யோசித்துப் பாருங்கள். இவ்வளவு மேன்மையான பொக்கிஷத்தை நாம் நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும் என்பதை விரதமாகவே எடுத்துக்கொண்டால், வீட்டிற்கும்,  நாட்டிற்கும் ஏற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments