கேள்விக்குறியாகும் தேசிய ஒருமைப்பாடு!
தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைக்கும் கர்நாடகத்தின் அடாவடிப் போக்கைத் திருத்தும் நெஞ்சுரம் அகில இந்திய கட்சித் தலைவர் ஒருவருக்குக்கூட இல்லை என்பதைப் பற்றி...
கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்ட கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றின் ஒப்புதல் தேவை என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லையென மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி தெரிவித்த கருத்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் ஒகேனக்கலுக்கு மேலாகச் சற்றுத் தொலைவில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. பெங்களூர் குடிநீருக்காக இந்தத் திட்டம் மிகவும் இன்றியமையாதது என கர்நாடகம் கூறுகிற காரணம் முற்றிலும் பொய்மையானது.
ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் 1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. இவ்வாறு அளிக்கப்படும் நீர் வாராந்திர அடிப்படையில் அமைய வேண்டும் என்று அதற்கான ஒரு திட்டத்தையும் நடுவர் மன்றம் வெளியிட்டது.
Advertisement
Advertisement
இறுதியாக கர்நாடகத்திலுள்ள காவிரிப் பாசன நிலத்தின் அளவான 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்குமேல் பாசன வசதிகளைப் பெருக்கக் கூடாது என்றும் நடுவர் மன்றம் திட்டவட்டமாகக் கூறியது. ஆனால், கர்நாடகம் இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என அறிவித்தது.
அதே ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை, சட்ட மேலவையும் கூடி தேசிய தண்ணீர் கொள்கைக்கான வழிகாட்டும் விதிமுறைகள் உருவாக்கப்படும் வரை நடுவர் மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறும், மாநிலங்களுக்கிடையேயுள்ள நீர்த் தாவா சட்டத்துக்கு சரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் வரை நடுவர் மன்றம் செயல்படக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.
அத்துடன் கர்நாடக அரசு நிற்கவில்லை. 1991-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி காவிரி பாசனப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் ஓர் அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பித்தது. மேலும், நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் நவம்பர் 22-ஆம் தேதி கீழ்க்கண்ட தீர்ப்பை அளித்தது.
கர்நாடக அரசு பிறப்பித்த காவிரிப் பாசனப் பாதுகாப்புச் சட்டம் அந்த மாநிலத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக் கண்டித்தது. மேலும், இடைக்கால தீர்ப்பு பிறப்பிக்க நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்பதையும் உச்சநீதிமன்றம் அழுத்தந்திருத்தமாகக் கூறியது. இந்திய அரசு நடுவர் மன்றத்தின் ஆணையை உடனடியாக கெஜட்டில் பிரசுரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடக்க காலத்திலிருந்து காவிரிப் பிரச்னையில் தான் மேற்கொள்ள வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்னையை அனுப்பி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தது, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழகம் வாதாடியபோது, பல ஆண்டுக்காலம் அதற்கு செவிசாய்க்காமலேயே இந்தப் பிரச்னையை ஆறப் போட்டது.
இறுதியில் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்த பிறகே நடுவர் மன்றத்தை அமைக்க இந்திய அரசு முன்வந்தது. நடுவர் மன்றம் இடைக்கால ஆணை வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்த வேண்டிய இந்திய அரசு மறுபடியும் உச்சநீதிமன்றத்துக்கே அதை அனுப்பியது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை கெஜட்டில் பிரசுரிக்காமல் இந்திய அரசு தாமதப்படுத்தியபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய அரசில் இணை அமைச்சர் பொறுப்பு வகித்த வாழப்பாடி கே. ராமமூர்த்தி தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.
1993-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நடுவர் மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பை மதிக்கவோ, அதன்படி தண்ணீர் தரவோ கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. தமிழகத்தின் சார்பில் பலமுறை இந்திய அரசை வற்புறுத்திய போதிலும், இந்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜூலை 18-ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜூலை 21-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் அவர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அரசு இவ்விதம் நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவாக அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் மத்திய பாசனத் துறை அமைச்சரான வி.சி. சுக்லாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். அவரும் சென்னைக்கு விரைந்து வந்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மீண்டும் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்தினார்.
பிறகு காவிரிப் பிரச்னை சம்பந்தமாக இரண்டு குழுக்களை அமைக்கப் போவதாக அவர் அறிவித்தார். காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவையும், அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று ஆராய மற்றொரு குழுவையும் நியமிக்கப் போவதாக அவர் அறிவித்தார். இந்த வாக்குறுதியை ஏற்று முதல்வர் ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஆனாலும், இந்த அறிவிப்பை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது. மீண்டும் நடுவர் மன்றத்தில் தமிழகம் முறையிட்டது. டிசம்பர் 19-ஆம் தேதி நடுவர் மன்றம் உடனடியாக தமிழ்நாட்டுக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்தப் பிரச்னையில் உடனடியாக ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு ஆணையிட்டது. ஆனால், பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் தமிழ்நாட்டுக்கு உடனடியாக 6 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு ஆணையிட்டார். மேலும், இரு மாநிலங்களிலும் நிலவும் நிலைமைகளை ஆராய நிபுணர் குழு ஒன்றையும் அமைத்தார்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீர்த்துப்போகும் வகையிலேயே பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நடந்துகொண்டாரே தவிர, 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஆணை பிறப்பிக்கவில்லை.
கர்நாடகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த தேவெ கெüடா, நெருக்கடியான நிலைமைக்கு உள்ளானார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நடுவர் மன்ற நீதிபதிகளுக்கெதிராக வழக்கு தொடுத்தார். நடுவர் மன்ற நீதிபதிகள் தமிழகக் காவிரிப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட வேளையில், சில கோயில்களுக்கு அவர்கள் வழிபடச் சென்றபோது, பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன.
இதை வேறுவிதமாகத் திரித்து தமிழ்நாட்டில் விலையுயர்ந்த பரிசுகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பெற்றிருப்பதால், அவர்கள் நடுநிலை தவறிவிட்டார்கள். எனவே, காவிரி வழக்கை அவர்கள் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார். அவர் முதல்வரான பிறகும், இந்த வழக்குத் திரும்பப்பெறப்படவில்லை. பிறகு, அவர் பிரதமராகவும் ஆகிவிட்டார். இந்திய அரசுத் துறைகளில் ஒன்றான நீர் ஆதாரங்களும் அவற்றின் நியாயமும் என்பதின் கீழ்தான் நடுவர் மன்றம் இயங்கி வருகிறது.
எனவே, நிர்வாகத் துறையின் தலைவராக உள்ள பிரதமர் நடுவர் மன்றத் தலைவரின் மீது தொடுத்துள்ள வழக்கு அவருக்கு தர்மசங்கடமான நிலையை தோற்றுவித்தது. இந்த வழக்கைத் தேவெ கெüடா திரும்பப் பெறுவதன்மூலம்தான் இந்த நிலையை மாற்ற முடியும். அதற்கான அறிகுறி தெரியாத காரணத்தால் நடுவர் மன்றத் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி தனது பதவியிலிருந்து விலகினார். காவிரி நடுவர் மன்ற விசாரணை சுமார்
75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, அவர் கடந்த ஐந்தாண்டு நடவடிக்கைகளை முழுவதுமாக புரிந்துகொண்டு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் பல ஆண்டுகளாகும். நடுவர் மன்றம் அமைப்பதையே கடுமையாக எதிர்த்து வந்த கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத்தையே சீர்குலைத்துவிட்டது.
கர்நாடகத்தின் இந்த அடாவடிப் போக்குக்கு காரணம் என்ன? என்பதை அறிய வேண்டுமானால் பழைய வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1890-ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தான அரசு காவிரியிலும் மற்றும் தங்கள் எல்லைக்குள் அமைந்த ஏனைய படுகைகளிலும் புதிய பாசன வசதிகளை விரிவாக்க முனைந்தது.
1892-ஆம் ஆண்டு வரை இது குறித்து இரு அரசுகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றின் விளைவாக சென்னை மாகாண அரசின் முன் அனுமதியின்றி தங்கள் பகுதியில் புதிய பாசன வசதி அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மைசூர் மேற்கொள்ளக் கூடாது என்பது பற்றிய விதிகள் வகுக்கப்பட்டு இரு அரசுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. இந்த விதிகளின் தொகுப்பே 1892-ஆம் ஆண்டு உடன்பாடாகும்.
1892-ஆம் ஆண்டு உடன்பாட்டின்படி மைசூர் அரசு காவிரியிலோ அல்லது அதில் வந்து கலக்கும் துணை நதிகளிலோ புதிய பாசன அணை கட்ட விரும்பினால், அந்தப் பணி தொடங்குவதற்கு முன்பாக முழு விவரங்களையும் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பிவைத்து அதன் முன்னிசைவினை பெற வேண்டும் என இந்த உடன்பாட்டில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு முன் இசைவு தருவது பற்றி இரு அரசுகளுக்கிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்தப் பிரச்னையில் இரு அரசுகளாலும் ஏற்கப்படும் நடுவர்கள் அல்லது இந்திய அரசின் தீர்வுக்குக் கட்டுப்படவேண்டும். 1924 பிப்ரவரி 18-ஆம் தேதி இரு அரசுகளுக்கிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, அ. சென்னை அரசு 95.50 டி.எம்.சி. கொள்ளளவுக்கு மேட்டூர் அணையைக் கட்டி புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் அளிக்கலாம்.
ஆ. மைசூர் அரசு 1892-ஆம் ஆண்டு உடன்பாட்டின் விவரனை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காவிரி மற்றும் அதன் கிளை நதிகளிலும் மொத்தத்தில் 45 டி.எம்.சி. கொள்ளளவுக்குப் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு புதிய அணைகளைக் கட்டி 1.10 லட்சம் ஏக்கர்களுக்குப் பாசனம் அளிக்கலாம்.
1. 1924 உடன்பாட்டில் இணைக்கப்பட்ட கிருஷ்ணராஜசாகரில் நீர் தேக்குவதற்கான விதிமுறைகளின்படி சென்னை மாகாணத்துக்குச் சேரவேண்டிய நீரின் அளவு குறைந்துவிடாதபடி இந்த அணைகளில் நீர் தேக்குவது அமைய வேண்டும்.
2. உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை சென்னை அரசு உறுதி செய்வதற்கு ஏதுவாக அத்தகைய நீர்த்தேக்க திட்டங்கள், அவற்றில் தேக்கி வைக்கும் நீரின் அளவு ஆகியவை குறித்த முழு விவரங்களையும் மைசூர் அரசு சென்னை அரசுக்கு அளிக்க வேண்டும்.
3. சென்னை அரசு தனது மாநில எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் புதிய பாசன அணைகளை அமைத்துக் கொள்ளலாம். அதன்படி பவானி, அமராவதி, நொய்யல் நதிகளில் அணைகள் அமைத்தால் அதற்கு ஈடாக அவற்றின் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கு மேற்படாதவாறு ஓர் அணையை தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகள் ஒன்றில் அமைத்துக் கொள்ள மைசூர் அரசுக்கு உரிமை உண்டு.
ஆனால், இந்தப் புதிய அணையில் நீர் தேக்குவது இந்த உடன்பாட்டின்படி சென்னை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் கிடைக்க வேண்டிய நீரின் அளவையோ அல்லது இந்த உடன்பாடு செய்துகொண்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு உடன்பாட்டின் சில பகுதிகள் மறுபரிசீலனைக்கு வரும்போது மேலும் பகிர்ந்துகொள்ள எதிர்பார்க்கப்படும் உபரி நீரின் பங்கீட்டை எந்த வகையிலும் குறைக்கவோ அல்லது பாதிக்கவோ கூடாது.
1924-ஆம் ஆண்டு உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகள் போக, இதர ஏற்பாடுகள் தொடர்பாக 1892-ஆம் ஆண்டு உடன்பாட்டின் விதிமுறைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உடன்பாடு வலியுறுத்துகிறது.
எனவே, 1924 உடன்பாட்டின் 10(1) (3) வரையிலான விதிகள் நிரந்தரமானவையாகும். அவை எக்காலத்திலும் மறு ஆய்வுக்கோ மாறுதலுக்கோ உட்பட்டவையல்ல.
சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசு ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்பிலும் எடுத்துரைக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த உடன்பாடு உருவாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ள தத்துவம் என்னவென்றால்,
அ. இந்த ஆற்றுப்படுகைகளில் வேறு எந்த ஒரு பகுதியிலும் புதிய திட்டம் எதையும் மேற்கொள்வதற்கு முன்னர் இப்படுகையின் பல பகுதிகளிலுள்ள தற்போதைய பாசனத்தின் தேவை முழுமையாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆ. இந்தப் படுகையில் மேற்கொண்டு பாசன விரிவாக்கத்துக்குக் கிடைக்கக்கூடிய நீர் எத்தகைய பாகுபாடும் இன்றி நியாயமான முறையில் பங்கீடு செய்துகொள்ளப்படும்.
தற்போது தமிழகத்தில் பாசனவசதி பெறுகிற நிலங்களில் பெரும்பகுதி காவிரி சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பாசனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே கிருஷ்ணராஜசாகர் நீர் தேக்கத்துக்கு நாள்தோறும் வரும் நீரை இவ்விரு மாநிலங்களும் அன்றன்றைக்கே எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும்?, சென்னை மாநிலத்துக்கு எவ்வளவு நீர் விடப்படவேண்டும்?, மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகர் நீர்த் தேக்கத்தில் எந்தளவுக்கு நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளலாம்? என்பதற்கான முறையை இவ்விதிகளில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மொழிவழியாக மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்ட பின்னர், கர்நாடகம் காவிரிப் பகுதியில் புதிய திட்டப் பணிகளை மேற்கொள்ள விரும்பியது. கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய ஆறுகளில் 45 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணைகளை கட்டிக்கொள்ள கர்நாடகம் திட்டமிட்டது. தனது உரிமைகளும், நலன்களும் இந்தத் திட்டங்களால் பாதிக்கப்படும் என தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தது.
புதிய அணைகள் கட்டுவதை கர்நாடகம் நிறுத்தி வைக்க ஆணையிடுமாறு உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு வேண்டிக்கொண்டது. இந்திய அரசு தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில் சட்டப்படி இனியும் பேச்சுகளால் பலனில்லை என்ற முடிவுக்கு ஒன்றிய அரசு வந்தால்தான், நடுவர் குழுவை அமைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும்தான் அந்த முடிவுக்கு இன்னும் வரவில்லை என்றும் பிரச்னையை மேலும் தாமதப்படுத்தியது.
1971-ஆம் ஆண்டின் இறுதியில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், கர்நாடக அரசின் அணைத் திட்டங்களை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு வழங்க அது மறுத்துவிட்டது.
1972-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்னை குறித்துப் பேசினார். தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றால், பேச்சுகளை மீண்டும் நடத்தி தீர்வுகாண உதவுவதாக இந்திரா காந்தி அளித்த வாக்குறுதியை நம்பி தமிழ்நாடு அரசு மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடனும், நீதிமன்றத்தின் ஒப்புதலுடனும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் வைக்கப்பட்டது.
இந்தியாவின் அரசியல் சூழல் அவ்வேளையில் முற்றிலுமாக மாறியிருந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசும், கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸ் அரசும், கேரளத்தில் கம்யூனிஸ்ட்-இ. காங்கிரஸ் கூட்டாட்சியும் இருந்தன. இந்த மூன்று மாநிலங்களிலும் இருந்த ஆட்சிகள் இந்திரா காந்திக்கு ஆதரவான ஆட்சிகளே ஆகும். இம்மூன்று மாநிலங்களிலும் முதல்வர்களாக இருந்த கருணாநிதி, தேவராஜ் அர்சு, அச்சுத மேனன் ஆகியோர் 1971-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமராக இந்திரா காந்தி வரவேண்டும் என்பதற்காக பேராதரவு அளித்தார்கள். எனவே, இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்திரா காந்தி உண்மையிலேயே விரும்பியிருந்தால் அந்தநேரத்தில் தீர்த்து வைத்திருக்க முடியும். ஆனால், அந்த முயற்சியில் அவர் அக்கறை காட்டவில்லை.
1972-ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தில்லியில் மூன்று மாநில முதல்வர்கள் பேசியதில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வும் அதுவரை எந்த மாநிலமும் புதிய பயன்
முறைகளை உருவாக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டறிக்கையில் மூன்று மாநில முதல்வர்களும் இந்திய அமைச்சரும் கையொப்பமிட்டார்கள். ஆனால், கர்நாடகம் இதை மீறி புதிய பாசனத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றத் தொடங்கியது.
காவிரி உண்மை அறியும் குழு தனது அறிக்கையை 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பியது. 1973-ஆம் ஆண்டு தில்லியில் மூன்று மாநில முதல்வர்களும், மத்திய பாசனத் துறை அமைச்சரும் உண்மை அறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந்தார்கள். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சரியானது என மூன்று மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டனர். 1973-ஆம் ஆண்டு அக்டோபரில் தில்லியிலும், 1974-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் சென்னையிலும் நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
காவிரிப் படுகையில் புதிய பாசனங்கள் பழைய பாசனங்கள் எல்லாம் சேர்ந்து சராசரியாக 1,25,000 கோடி கன அடி அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கிடைக்கும் தண்ணீரின் அளவோ 74,000 கோடி கன அடி மட்டுமே. இதில் கர்நாடகம் புதிய பாசனத் தேவைகள் உள்பட 44,000 கோடி கன அடி தண்ணீரையும், கேரளம் புதிய பாசனத் தேவைகள் உள்பட 17,000 கோடி கன அடி தண்ணீரையும் எடுத்துக்கொள்ள திட்டமிட்டன. இவை எடுத்துக்கொண்ட பிறகு, மீதமாகும் நீரின் அளவு 13,000 கோடி கன அடி தண்ணீர் மட்டுமே.
தமிழகத்துக்கு இதுதான் கிடைக்கும். இத்தனை ஆண்டுகாலமாக கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு 36,000 கோடி கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், 13,000 கோடி கன அடி நீர் மட்டுமே கர்நாடகம் தருமானால், தமிழ்நாட்டில் காவிரிப் பாசன நிலத்தின் மொத்தப் பரப்பளவு 28.21 லட்சம் ஏக்கரில் 12.5 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் தரிசாகும்.
தமிழக உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 25,000 ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்பட்ட குறுவைப் பயிர், 4,295 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்திலேயே பயிரிடப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன், உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடைபெற்றபோது, அதற்கு முன்பாக கீழ்க்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார். தமிழ்நாட்டுக்கு காவிரி ஒன்றே வற்றாத பேராறாகும். கர்நாடகத்தில் காவிரி மட்டுமின்றி கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, அதன் கிளை நதிகள் மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன.
தமிழ்நாட்டின் 34 சதவீதம் நிலப்பகுதி காவிரிப் படுகையில் அமைந்துள்ளது. கர்நாடகத்தின் நிலப்பகுதியில் காவிரிப் படுகையின் பரப்பு 17 சதவீதம் மட்டுமே ஆகும். தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசன நிலத்தில் 60 சதவீதம் காவிரி ஆற்றையே நம்பியுள்ளது. தமிழ்நாடு தனது உணவு தானிய உற்பத்திக்குக் காவிரியையே பெரிதும் சார்ந்துள்ளது எனக் கூறினார்.
காவிரிப் பிரச்னை உருவான காலத்திலிருந்து 9 பிரதமர்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். நடுவர் மன்றம் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை மதிக்கக் கர்நாடகம் மறுத்தபோது, இவர்களில் யாரும் முன்வந்து தமிழகத்திற்கு நீதி வழங்கத் தவறிவிட்டார்கள்.
காவிரிப் பள்ளத்தாக்கு அமைப்பு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று முதல்வர்களும் ஒப்புக்கொண்டபோதுகூட அவ்வாறு செய்ய பிரதமர் இந்திரா காந்தி முன்வரவில்லை. காவிரிப் பள்ளத்தாக்கு அமைப்பு அமைக்கப்படுமானால், இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள காவிரி மற்றும் துணை நதிகள் ஆகியவற்றில் உள்ள அணைகள் யாவும் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின்படி காவிரிப் பள்ளத்தாக்கு அமைப்பு உடனுக்குடன் செயல்பட்டிருக்கும். தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், ஜனதா, பா.ஜ.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை ஒருகாலத்திலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.
மாநிலக் கட்சிகளே தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளன. அவற்றின் தயவில்தான் இந்த அகில இந்தியக் கட்சிகள் சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற நிலைமை இங்கு உள்ளது. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா, பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் ஆட்சியில் மாறிமாறி அமர்ந்துள்ளன. மாநிலக் கட்சிகள் எதுவும் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. எனவே, அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் எதிர்காலம் கர்நாடகத்தில் பாதிக்கப்படக் கூடாது எனக் கருதுகிறார்கள். எனவே, காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளை அவர்களால் எளிதில் புறந்தள்ள முடிகிறது.
கர்நாடகத்தின் கயமைப் போக்கைக் கண்டிக்கவோ, தமிழகத்துக்குச் சட்டப்படி உள்ள உரிமைகளை மதிக்கவோ அகில இந்திய கட்சிகளைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் தவறிவிட்டனர். தேசியத் தலைவர்களுக்கு இருக்கவேண்டிய தகைமை அறவே இல்லை. கர்நாடகத்தின் அடாவடிப் போக்கின் விளைவாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவதைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நெஞ்சுரம் அகில இந்திய கட்சித் தலைவர் ஒருவருக்குக்கூட இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.