FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காந்தியத் தடம் - நூல் அறிமுகம் | விமர்சனம்

பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் எழுதிய காந்தியத் தடம் - நூல் அறிமுகமும் விமர்சனமும்...

25 ஆகஸ்ட் 2026, 5:29 pm IST
காந்தியத் தடம் - நூல் முகப்பு
பகிர்:

காந்தியடிகள் தொடர்பான 14 கட்டுரைகள், 'சர்வோதயம் மலர்கிறது' இதழில் நூலாசிரியரால் 75-க்கும் மேற்பட்ட சான்றாதார நூல்களின் துணையுடன் எழுதியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

காந்தியடிகளுடன் அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, வ.உ.சி., பெரியார் ஆகியோரை ஒப்புநோக்கியுள்ள கட்டுரைகள் இந்நூலில் முத்தாய்ப்பானவை. இவர்கள் எவ்வாறு காந்தியடிகளுடன் உடன்பட்டனர் / முரண்பட்டனர் என்பதையும், வரலாற்றில் எதிரெதிர் துருவமாக நிறுத்தப்பட்டுள்ள இவர்களின் இணக்கப் புள்ளிகள் எவையெவை என்பதையும் நமக்குத் தருகின்றார் நூலாசிரியர் கோ. விஜயராமலிங்கம்.

வணிகவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், வரலாற்றை உற்று நோக்கித் தரவுகளை இயல்பாகப் பொருத்தி ஆய்வுக் கட்டுரையாக மட்டுமின்றிப் பொது வாசகனுக்கும் சென்றடையும் வகையில் எளிய வடிவில் இந்நூலை எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

அண்ணல் காந்தியடிகள்

'ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது' என்று அம்பேத்கரும், 'தீண்டாமை ஒழிந்தால், ஜாதி தானே ஒழிந்து விடும்' என்று நம்பிய காந்தியும் 'தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி' என்ற ஆங்கிலேயரின் முன்மொழிவில் எப்படி முரண்பட்டார்கள், காந்தியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து புணே ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னணி என்ன? என்பவை பற்றி எடுத்துரைக்கப்படுகிறது.

மாவீரன் பகத்சிங்

பகத்சிங் விடுதலைக்குக் காந்தி முழு மனதுடன் முயற்சித்தார். ஆனால், அதே நேரத்தில் அவரது விடுதலையைக் காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கு முன்நிபந்தனையாக வைத்திருந்தால் பகத்சிங் கையும் அவரது தோழர்களையும் காப்பாற்றி இருந்திருக்கலாம் என்ற பலரது கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் மறுமொழியாக சில செய்திகளும் விவரங்களும் தரப்பட்டுள்ளன.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

1929 இல் நடந்த லாகூர் காங்கிரசிலேயே 'ஒரு போட்டி சுதந்திர அரசினை நடத்த வேண்டும்' என்று குரல் கொடுத்தவர் சுபாஷ் சந்திர போஸ். அதனை 1940-களில் செயல்வடிவப்படுத்தியதையும், ஒரு பக்கம் காந்தியடிகள் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கமும் மறுபுறம் நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவமும் எடுத்த நடவடிக்கைகள் எப்படி இந்தியச் சுதந்திரத்தை விரைவுபடுத்தின என்பதையும், காந்தி-போஸ் இருவருக்கும் இடையில் எப்போதும் இருந்த புரிந்துணர்வையும் அறியத் தருகிறது.

எழுச்சியாளர் வ.உ.சி.

தென் ஆப்பிரிக்காவில் காந்தி இருந்தபோதே வ. உ. சி. அவருடன் கடிதத் தொடர்பை வைத்திருந்தார் என்பதையும், 1915 இல் காந்தி இந்தியாவுக்குத் திரும்பிய பின்பு 1920 வரை அவருடன் இணைந்தும், 1920 முதல் 1927 வரை வேறுபட்டும் செய்த அரசியல் பயணத்தையும், 1927 முதல் 1934 வரை காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்தவராக வ.உ.சி. திகழ்ந்ததையும் எடுத்துரைக்கிறது.

தந்தை பெரியார்

காந்தி - பெரியார் இருவரது வரலாற்றுப் பின்னணியுடன் ஒத்துழையாமை இயக்கம், சட்டம் மறுப்பு இயக்கம், கதர் பரப்புரை, மதுவிலக்குப் போராட்டம் ஆகியவற்றில் பெரியார் ஈவேரா எவ்வாறு பங்களித்தார் என்பதையும், ஒரு கிராம் தங்கம் ரூ. 17-க்கு விற்ற காலத்தில் ஒத்துழையாமை இயக்க நெறிமுறையின்படி நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற கோட்பாட்டுக்கு இணங்கத் தனக்கு வரவேண்டிய ஏறத்தாழ ரூ. 78 ஆயிரம் மதிப்பிலான தொகை மற்றும் சொத்துப் பத்திரத்தைப் தான் கொண்ட கொள்கை - அரசியல் நேர்மையுடன் பெரியார் இழந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1923 இல் சட்டப்பேரவையில் பங்கேற்பதில்லை என்ற காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்றார் பெரியார். காந்தியுடனும் காங்கிரசுடனும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து காங்கிரசிலிருந்து விலகித் தனித்து இயக்கம் கண்டாலும் அரசியல் கட்சியாக மாற்றாமல் பெரியார் செயற்பட்டதற்குக் காந்தியுடன் 1923 இல் அவர் எடுத்த முடிவின் தாக்கமே காரணம் என்கிறார் நூலாசிரியர். காந்தியடிகளின் மறைவையொட்டி பெரியார் எழுதிய தலையங்கங்கள், இந்தியாவை 'காந்தி நாடு' என அறிவிக்க வேண்டும் எனப் பெரியார் கோரியது ஆகியவை குறித்தும் பதிவு செய்கிறார்.

இந்தியா ஹவுஸ்

லண்டனில் தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்த 'இந்தியா ஹவுஸ்' பற்றிய கட்டுரையும், காந்திக்கும் அவ்விடுதிக்குமான தொடர்பைப் பற்றிய மற்றொரு கட்டுரையும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. காந்தி - சாவர்க்கர் - வ.வே.சு. விவாதங்கள் பற்றியும், இந்திய விடுதலைப் போரில் தீவிரவாதமும் மதவாதமும் எவ்வாறு இந்தியா ஹவுஸில் கருக்கொண்டன என்பதையும் பார்வைக்குத் தருகிறது.

அரசியல் நிர்ணய சபை

'அரசியல் நிர்ணய சபையே ஒரே தீர்வு' என 1921 ஆம் ஆண்டில் காந்தியடிகள் அறிவித்ததிலிருந்து 1950 குடியரசாக இந்தியா மாறும் வரை அரசியல் நிர்ணய சபை தொடர்பான பல புள்ளி விவரங்களையும் தருகிறது. அண்ணல் அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவுக்கு முன்பு ஒரு முறையும் பின்பு மற்றொரு முறையும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட காங்கிரஸ் பின்புலமாக இருந்ததையும், தமிழ்நாட்டிலிருந்து ஆர்.கே. சண்முகம், ராஜாஜி, காயிதே மில்லத், காமராசர் உள்ளிட்டவர்கள் அரசியல் நிர்ணய சபையில் பணியாற்றியதையும் விரிவாகப் பதிவு செய்கிறது.

1924 ஆம் ஆண்டு பெல்காம் காங்கிரஸ்

காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடு பெல்காம் காங்கிரஸ். இம்மாநாட்டினை முன்னிட்டு பேராளர்கள், பார்வையாளர்கள் பயன்பாட்டிற்காகப் புதிதாக வெட்டப்பட்ட கிணறு இன்றளவும் 'காங்கிரஸ் கிணறு' எனும் பெயரில் பயன்படுவதையும், மாநாட்டினை முன்னிட்டு கிட்டூர் சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா போன்ற விடுதலை வீரர்கள் பற்றிய நாடகங்கள் நடத்தப்பட்டதையும், வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அறிந்துகொள்ள முடிகிறது. மாநாடுகளில் இசை - நாடகம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பதும் அறிய முடிகிறது.

ஏனைய கட்டுரைகளில்...

குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றியும், மகாத்மா காந்தியடிகள் 30.1.1948 இல் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே பேராசிரியர் ஜெகதீஷ் சந்திர ஜெயின் அன்றைய பம்பாய் அமைச்சர் மொரார்ஜி தேசாய் வசம் சதித் திட்டம் குறித்துத் தெரிவித்தும் நிகழ்ந்துவிட்ட வரலாற்றுப் பிழையினைப் பற்றியும், தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சார்ந்த நினைவுச் சின்னங்களை நூலாசிரியர் நேரில் கண்ட அனுபவம் பற்றியும் மூன்று கட்டுரைகள்வழி தெரிவிக்கிறார்.

1942 ஆகஸ்ட் புரட்சியின்போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியில் எவ்வாறு போராட்டங்கள் நடந்தன என்பது குறித்தும், கே.டி. கோசல்ராம், தூக்குமேடை ராஜகோபால், சின்ன அண்ணாமலை, கவிஞர் எஸ்.டி. சுந்தரம், பேராசிரியர் கு. ராஜவேலு, தினமணி குழுமத்தைச் சார்ந்த ராம்நாத் கோயங்கா, ஏ.என். சிவராமன், என். இராமரத்தினம், டி.வி. கணேசன் போன்றோரும் எண்ணற்ற எழுச்சி நாயகர்களும் செய்த பங்களிப்பையும் நூலாசிரியர் ஆவணப்படுத்தி உள்ளார்.

காந்தியடிகள் குறித்து தமிழில் எண்ணற்ற நூல்கள் வந்துள்ளன. காந்தியடிகளின் காலத்தினை வாழ்வியல் - சமூகவியல் பார்வையுடன் தனித்துத் தடம் பதித்துள்ளது 'காந்தியத் தடம்' நூல்.

காந்தியத் தடம் - பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம், பக்கங்கள் - 260, விலை - ரூ. 255, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,  அம்பத்தூர், சென்னை - 600 050, போன்: 044 - 26251968.

An introduction to and Review of the book on Gandhian path, written by Professor Ko. Vijayaramalingam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments