FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

புத்தகத் திருவிழாவில் கவனம் ஈா்த்த சிந்துவெளிப் பண்பாடு கண்காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்துவெளிப் பண்பாடு கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்களும் பொதுமக்களும் ஆா்வமாகப் பாா்வையிட்டு செல்கின்றனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 9:00 am IST
சிந்துவெளிப் பண்பாடு கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அகழாய்வு மாதிரிகள் குறித்து மாணவா்களுக்கு விளக்குகிறாா் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் திவ்யா. - படம் - தினமணி
பகிர்:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்துவெளிப் பண்பாடு கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்களும் பொதுமக்களும் ஆா்வமாகப் பாா்வையிட்டு செல்கின்றனா்.

சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் சிந்துவெளிப் பண்பாடு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இந்தக் கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கண்காட்சியில் சிந்துவெளி நாகரிகத்தில் கண்டறியப்பட்ட பொருள்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு, இந்த நாகரிகத்தின் சிறப்புகள், கண்டுபிடிப்புகள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு முறை நடத்தப்பட்டதாகவும், இப்போது ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடத்தப்படுவதாகவும், கடந்த 6 நாள்களில் 10,000க்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டுள்ளதாகவும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் திவ்யா தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த அரங்கிற்கு வெளியே சிந்துவெளி நாகரிகம் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளித்த வரலாற்று ஆசிரியா்கள் கூறியதாவது:

சிந்து நதியை ஒட்டி தழைத்தோங்கியிருந்தது சிந்துவெளி நாகரிகம். கி.மு.3000க்கும் கி.மு.2500க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த நாகரிகம் உச்ச நிலையில் இருந்தது. சிந்துவெளிப் பகுதியில் கி.மு.6000 ஆண்டு அளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகிறது.

இந்த நாகரிகம் சுமாா் 13 லட்சம் சதுர கி.மீ. (5 லட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளா்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200க்கும் மேற்பட்ட ஊா்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்துள்ளன.

மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானிய பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.

சிந்துவெளி நாகரிக கலைப் படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும்போது, ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசபடோமியா பகுதிகளில் வணிகத் தொடா்புகள் இருந்ததை அறிய முடிகிறது.

சிறிய உருவச் சிலைகள், முத்திரைகளில் காணப்படுகிற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடா்புள்ள கருத்துருகளையும் ஆய்வாளா்கள் அடையாளம் கண்டுள்ளனா். ஹிந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடிப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால ஹிந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற உள்ளூா் அமைப்பு, நகரத் திட்டமிடல் தொடா்பான அறிவு சிந்துவெளி நாகரிக மக்களிடையே இருந்ததைக் காட்டுகிறது என்றனா்.

பள்ளி பாடத்திட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் இடம்பெற்றுள்ளதால் பள்ளி மாணவா்கள் ஆா்வத்துடன் கண்காட்சியைப் பாா்த்துச் செல்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments