FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை!

இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் இருக்கும் பன்முகத் தன்மை பற்றி...

26 ஆகஸ்ட் 2026, 4:53 pm IST
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை - cict.in
பகிர்:

[(மு.கு): சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ‘இந்தியச் செம்மொழிகளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை (12 நாள்கள்) ஒரு பயிலரங்கினை நடத்துவதாக அறிவிப்புச் செய்துள்ளதையொட்டி எழுந்த சிந்தனைகளே இக்கட்டுரை விளையக் களம்].

இந்தியத் துணைக்கண்டத்தின் இலக்கிய வரலாற்றை ஆராயும் நவீன ஆய்வாளர்கள் பலரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலானது "இந்திய இலக்கியம்" என்ற ஒற்றை ஆதிக்கக் சொல்லாடல் (Monolithic Discourse) குறித்ததாகும். ஏனெனில், அடிப்படையில், இந்தியத் துணைக்கண்டம் (நிலப்பகுதி) என்பது ஒரே மாதிரியான பண்பாட்டுத் திரள் (Cultural Homogeneity) கொண்டதல்ல. மாறாக, அது திராவிட, ஆரிய, ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் மற்றும் திபெத்தோ - பர்மிய பழங்குடி மரபுகள் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு மூலங்களின் (Heterogeneous Roots) ஒரு சிக்கலான கூட்டிணைவு ஆகும். இப்பண்பாடுகளும் அவை ஒவ்வொன்றின் வெளிப்பாடுகளும் (மொழி, இலக்கியம், கலை முதலியன) தனித்துவமான உலகப் பார்வையைக் கொண்டுள்ளன என்பதே அறியக்கூடிய உண்மை.

விடுதலைப் போராட்ட காலத்தில் மிகு அவசியமானதானது தேசிய ஒருமைப்பாடு, ஆன்மிகப் பொதுமை என்பவை. இந்த அரசியல் - பண்பாட்டுத் தேவைகளுக்காகவே ‘இந்திய இலக்கியப் பொதுமை வாதம்’ அக்காலத்தில் கட்டமைக்கப்பட்டு, கூடவே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கற்பிதமும் (குழந்தைகளுக்கு நிலாக் காட்டுவதுபோல) காட்சிப்படுத்தப்பட்டுத் தொடர்கிறதே தவிர, மொழியியல், அழகியல், இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இது முழுமையான உண்மையல்ல. 

Advertisement

Advertisement

ஒரு காட்டைப் பற்றி சிந்தித்தோமானால், தேக்கு, பைன், ஃபெர்ன், செடிகள், கொடிகள், புல், பூண்டு மற்றும் பாசிகள் ஆகிய முற்றிலும் மாறுபட்ட தாவரவியல் குடும்பங்களைச் சேர்ந்தவையும், சிங்கம்,புலி, யானை, மான், நரி, முயல் போன்ற பல்வேறு விலங்கினங்களையும் கொண்ட (பன்முகத் தன்மைமிகு) இடமெனக் காண்போமல்லவா? அவை யாவும் ஒரே மண்ணைப் பகிர்ந்து கொள்கின்றன; ஒரே நீர்ச் சுழற்சியில் பங்கேற்கின்றன; மேலும், அவை ஒரே சுற்றுச்சூழல் அமைப்பில் வாழ்கின்றன என்ற ‘சுற்றுச்சூழல் ஒற்றுமை’ தவிர  வேறென்ன ஒற்றுமை பாராட்டக் கூடும்? 

‘இந்தியச் செம்மொழிகளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்’ காண முற்படுவது, ‘இந்தியா’ எனும் ஒரு புவியியல் பரப்பில் பல்லாண்டுகளாகப்  - பல்வேறு கால வரலாற்றுப் பின்னணிகளுடன்- நிலைகொண்டுள்ள வேறுபட்ட மொழி, இனக்குடும்பங்களின் ‘சுற்றுச்சூழல் ஒற்றுமை’ (Ecological Unity) பற்றியது மட்டுமே. இந்தச் செம்மொழி மரபுகளின் முழுமையான அடித்தள டி.என்.ஏ. (DNA) வைப் பார்க்கும்போது, "ஒற்றுமை" என்ற சொல்லுக்குப் "புவியியல் சார்ந்து, விரியும் பல நூற்றாண்டுத் தொடர்புகளின் மூலம் பகிரப்பட்ட ஒற்றுமை" என்ற வகைப் பொருள் கண்டு அணுக வேண்டும். உண்மையில் பகிரப்பட்டதும் அடிப்படையான மரபியல், கருத்தியல் விதைகளல்ல; மேற்பூத்த சில வண்ண மலர்களே! 

மாந்தர் வாழ்க்கையை அதிநுட்பமான அகம் - புறம் என இரு பெரும் வகையாகப் பகுத்து, தனித்துவமான, ஐந்து நிலப்பரப்புகள் குறித்த ஐந்திணைக் கோட்பாட்டுடன் பிணைத்து, வாழும் மனித உணர்ச்சிகளுடன் இணைந்த இலக்கியங்களில் எழுத்துச் சித்திரமாக்கியுள்ளது - திராவிடப் பாரம்பரியத்திற்கு, குறிப்பாகச் சங்கத் தமிழுக்கு – காத்திரமான, சுதந்திரமான கருத்தியல் மையங்களின் பூர்விகப் பாத்தியதையாக உள்ளன. ஆனால், ஐந்திணைக்கு அறவே அந்நியம் சமஸ்கிருத கவிதை (காவ்யா). அதன் கருத்தியல் மையமானது முற்றிலும் மாறுபட்ட, ரஸ (அழகியல் சுவை) மற்றும் அலங்காரம் (அலங்காரம்) ஆகிய கட்டமைப்புகளைச் சுற்றி வருவதாக உள்ளது. தமிழ் - சமஸ்கிருத மரபுகளின் தொன்மை நூல்களைக் காய்தல் உவத்தலின்றி அணுகும் எவருக்கும், அவை முற்றிலும் மாறுபட்ட இரு இலக்கியப் பிரபஞ்சங்களை விரித்து நிற்பது வெளித் தெரியும்.

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள் தவிர இந்தியாவில் செம்மொழிகள் என அரசு அறிவிப்பு பெற்றுள்ள பிற ஒன்பது மொழிகளும் ‘’நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’’ நாமே அறிவித்து அங்கீகரித்துக் கொண்டவைதான்.  அம்மொழிகளுக்கு உலகளாவிய ஏற்பு (Recognition) எதுவும் கிடையாது (இவ்வாறு கூறுவது ஒளிக்காது உண்மையுரைப்பதே தவிர, எம்மொழி மீதும் வெறுப்புக் காட்டுவதல்ல). 

மறுக்க இயலா உண்மைகளாக எழுந்துயர்ந்து நிற்பது, ‘அனைத்து இந்தியச் செம்மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறக்கவில்லை’; ‘அவற்றின் இலக்கியங்களும் ஒரே மாதிரியான சிந்தனைப்போக்கின் வெளிப்பாடுகளும் அல்ல’ என்பதே. ஆனாலும், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழுக்கும், இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் சமஸ்கிருதத்துக்கும் இடையே ஒருமைப்பாடு நிலவுகிறது என்ற மெல்லிய, பசலைபடிந்த வாதம் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்தியச் செம்மொழிகளின் வேர்கள் வேறு வேறு; குறிப்பாகத் திராவிடத் தமிழ் மரபு வேறு, இந்தோ- ஆரிய சமஸ்கிருத மரபு முற்றிலும் வேறு என்பதை நன்குணர்ந்து கொண்டு, ‘இந்தியா’ எனும் அரசியல் – புவியியல் (Politico-geographical land mass) நிலப்பரப்பில் விளைந்துள்ள இலக்கியங்களை ஒரு "பல இன, பல வண்ண மலர்வனம்" என்று ஒருக்கால் கூறலாம். ஏற்கெனவே குறிப்பட்டதுபோல் இவ்விரண்டு மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வளர்ந்த மண், காற்று, சூழல் இந்திய நிலப்பரப்பைச்  சேர்ந்தது என்பதுதான் பொதுமை. 

தமிழின் திராவிட மரபு, இயற்கையோடு இயைந்த, மண்ணியல் சார்ந்த (Secular / Materialistic), சமத்துவக் கூறுகளைக் கொண்ட - சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் - வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்ப காலத் தமிழ்க் கருத்தாக்கம் உலகளாவிய, மதச்சார்பற்ற நெறிமுறைகள், தனிப்பட்ட நல்லொழுக்கம், சமூக நீதி இல்வாழ்க்கை, விருந்தோம்பல் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறது.

ஆனால், ஆரிய மரபோ பிரபஞ்ச ஒழுங்கு, வானியல் சக்திகள், யாகச் சடங்குகள் - கடமைகள், சாதி - அடுக்குக் கடமைகள் (வர்ணாசிரமப் படிநிலைகள்) மற்றும் அதீத ஆன்மிகவாதத்தை (Transcendentalism) முதன்மையாகக் கொண்டவை. 

ஆஸ்ட்ரோ - ஆசியாடிக் மற்றும் திபெத்தோ - பர்மிய மரபுகளைச் சார்ந்த கிழக்கிந்திய, மத்திய இந்தியச் செம்மொழிகளான ஒடியா போன்றவற்றின் அடித்தளத்தில், பழங்குடி மக்களின் ஆன்மா சார்ந்த வழிபாட்டு முறைகளும், கூட்டு நடன இசை மரபுகளும் ஆழமாகப் பொதிந்துள்ளன. 

வேறுபட்ட கால முதிர்வும், தொடர்ச்சி வரலாறும் கொண்ட இந்த நான்கு பெரும் (திராவிட, இந்தோ - ஆரிய / இந்தோ - ஐரோப்பிய , ஆஸ்ட்ரோ - ஆசியாடிக், திபெத்தோ - பர்மிய) பண்பாட்டுக் குடும்பங்களின் அழகியல் வெளிப்பாடு ஒற்றைத் தன்மையைக் கொண்டிருக்கச் சாத்தியமேயில்லை. பல காலங்களில் இம்மொழிகள் பழகிய நிலப்பரப்புகளுக்கிடையே நிகழ்ந்த வரலாற்றுத் தொடர்புகள், வணிகப் பரிமாற்றங்கள் முதலியன  மேலோட்டமான ஒப்புமைகளை உருவாக்கினவே தவிர, அவற்றின் ஆழமான தனித்துவ அடையாளங்களுக்குள் புகுந்து –  ‘செம்புலப் பெயல்நீர் போல’ ஒன்றிணையவில்லை.

மொழிக் குடும்ப வேற்றுமைகளும் சிந்தனை முறைப் பிரதிபலிப்பும்

மொழியின் அமைப்பே ஒரு சமூகத்தின் சிந்தனை முறையை (Cognitive Pattern) தீர்மானிக்கிறது; ஒரு சமூகம் உலகை எவ்வாறு கருத்தாக்கம் செய்கிறது என்பதை மொழியியல் கட்டமைப்புகளே ஆணையிடுகின்றன என்ற மறுக்கவியலா மொழியியல் தத்துவம் (Linguistic Relativity) நிலைகொண்டுள்ளதறிவோம். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கணங்கள் முற்றிலும் வேறுபட்டிருப்பதால், அவற்றின் இலக்கியங்கள் தனித்துவமான வெளிப்பாட்டு முறைகளையே பிரதிபலிக்கின்றன என்பதே நிதர்சனம். 

தமிழும் பிற திராவிட மொழிகளும் ஒட்டுநிலை (Agglutinative) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சமஸ்கிருதம் வளைநிலை (Inflectional) இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்விருமொழிகளின் இலக்கணம், தொடரியல், உருவவியல் கட்டமைப்புகள், முக்கிய சொற்களஞ்சியங்கள் அவற்றின் தோற்றத்தில் முற்றிலும் தொடர்பற்றவை. 

ஒட்டுநிலை என்பது, ஒரு வேர்ச்சொல்லுடன் பல ஒட்டுகள் (Prefixes / Suffixes) வரிசையாகச் சேர்ந்து புதிய சொற்களையும் பொருளையும் உருவாக்கும். இது சிந்தனையில் பகுப்பாய்வுத் தன்மையையும் (Analytical clarity), நேர்க்கோட்டுத் தன்மையையும், யதார்த்தப் பார்வையையும் வழங்குகிறது. தமிழின் ஒட்டுநிலை அமைப்பு, புலன்களைக் கடந்த, வெற்றுப் புனைவுகளைத் தவிர்த்த, மண்ணில் வாழும் மனித வாழ்வின் துல்லியமான விவரிப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.

வளைநிலை என்பதில் சொல்லின் வேரே வளைந்து, திரிந்து, உருமாறி இலக்கணச் செயல்பாட்டைக் காட்டும். இது சிந்தனையில் அதிகச் சேர்க்கைத் தன்மையையும் (Synthesis), சிக்கலான தத்துவக் கட்டுமானங்களையும், அண்டவெளி சார்ந்த அதீத கற்பனைகளையும் (Abstract cosmic system) தூண்டுவதாக அமைகிறது.

இலக்கியக் கோட்பாடு வேறுபாடு

இலக்கியங்களை அணுகும் கோட்பாட்டு ரீதியில் தமிழும் சமஸ்கிருதமும் முற்றிலும் முரண்பட்ட இரு துருவங்களாக இயங்குகின்றன எனக் குறிப்பிட்டோம்.

தமிழ் இலக்கியக் கோட்பாடு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மைத் தொல்காப்பியம் வகுத்தளித்து முன்வைக்கும் கோட்பாடு முற்றிலும் நிலம் சார்ந்த அமைப்பியல் (Eco-centric Structuralism) ஆகும். தொல்காப்பியர் தொகுத்து வகைப்படுத்தியுள்ள கோட்பாடுகள் பல, அவர் காலத்திற்கு முன்பே நிலைபெற்றிருந்தன என்பது, ‘என்ப’ (141 இடங்களில்), ‘மொழிப’ (87 இடங்களில்) ’என்மனார் புலவர்’ (72 இடங்களில்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்தே எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.  

அத்தகைய தொல்மரபில் ஒரு கவிதையின் பொருள் என்பது காற்றில் மிதந்து கரையும் உணர்ச்சி அல்ல; அது குறிப்பிட்ட நிலம் (குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை), பொழுது (கார் காலம், மாலை, போன்றவை) மற்றும் அங்குள்ள கருப்பொருள்களோடு (பறவை, விலங்கு போன்றவை) பிணைக்கப்பட்டது [உள்ளுறை உவமம் மற்றும் இறைச்சி]. தமிழ் மெய்ப்பாடு, சமஸ்கிருத ரஸக் கோட்பாடு போல ஆன்மிகப் பேரின்பத்தை நோக்கியது அல்ல; மாறாக, புற உலகில் மனிதன் வெளிப்படுத்தும் இயல்பான உடல் - மன எதிர்வினைகளின் அறிவியல் வகைப்பாடு ஆகும்.

சமஸ்கிருத இலக்கியக் கோட்பாடு

பரத முனியின் சமஸ்கிருத நாட்டிய சாஸ்திரம் மற்றும் பிற்கால ஆனந்தவர்த்தனரின் கோட்பாடுகள் உணர்ச்சிகளின் பொதுமைப்படுத்தலை மையமாகக் கொண்டவை. இப்பண்பாட்டின் ரஸக் கோட்பாடு (Rasa Theory), மனிதனின் உள்ளார்ந்த ஒன்பது சுவைகளை (நவரசம்) மையப்படுத்தி, கலையின் நோக்கமாக வாசகனுக்குள் ஓர் அழகியல் இன்பத்தை (Rasa-Ananda) தூண்டுவதாகும். அலங்காரம் மற்றும் தொனி: சொற்களின் அணிவகுப்பும் (Alankara), மறைமுகப் பொருளின் உச்சகட்ட வெளிப்பாடும் (Dhvani) இதில் முதன்மை பெறுகின்றன. இது பெரும்பாலும் நாடக மேடைகளையும், அரசவைகளையும் மையமாகக் கொண்டது.

காதல் அழகியல் வேற்றுமை

காதல் என்ற இயற்கையான மானுட உணர்வைச் சித்திரிப்பதில் தமிழ் - சமஸ்கிருத மரபுகளுக்கும் இடையே உள்ள அழகியல் வேற்றுமை மிக ஆழமானது.

தமிழில் காதல் என்பது தனிமனிதப் பெயர்களைக் கடந்தது. அகக் கவிதைகளில் தலைவன், தலைவி என்ற பொதுப் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி 

"மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்" - தொல். பொருள் 57. 

காதல் என்பது நாடகம் அல்ல; அது நிலத்தோடும் பருவத்தோடும் இணையும்போது மானுடத்தில் இயற்கையாகப் பிறக்கும் தூய மன உணர்வு.

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? ...
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே
." – குறுந்தொகை, 40 

இங்கு எவ்வித உடல்சார்ந்த வர்ணனையோ, தேவலோகப் பின்னணியோ இன்றி, இரு மாந்தர்களின் மனமொன்றுதல் செம்மண்ணில் பெய்த மழைநீராக உவமிக்கப்பட்டு, உன்னதக் காதல் அழகியலை உருவாக்குகிறது.

சமஸ்கிருதத்தில் காதல் என்பது பெரும்பாலும் மன்னர்கள், தேவதைகள், அல்லது புராண நாயகர்களின் தனிப்பட்ட பெயர்களோடு (எ.கா: துஷ்யந்தன் - சகுந்தலை, புரூரவஸ் - ஊர்வசி) சித்திரிக்கப்படும். அது காமசூத்ரா போன்ற கலைகளின் வகைப்பாட்டை ஒட்டி, உடல் சார்ந்த வர்ணனைகளுக்கும், விரக தாபத்தின் அதீத வெளிப்பாடுகளுக்கும் (எ.கா: பில்கணரின் சௌரபஞ்சாசிகா) முக்கியத்துவம் அளிக்கிறது.

 "நாலாடீ விநிவேசிதக நயநயோர உத்பாசிதா காந்தயா..." 

  - அமருக சதகம் - கவிதை 22

(கட்டிலில் தலைவன் ஆடையைத் தொட்டவுடன், தலைவி வெட்கத்தால் விளக்கை அணைக்க முயலும் உடலியல் அசைவுகளின் துல்லிய வர்ணனை).

சமஸ்கிருதக் காதல் அழகியல் சிருங்கார ரசத்தின் (Erotic aesthetic) உச்சத்தை நோக்கியும், தமிழ்க் காதல் அழகியல் வாழ்வியல் ஒழுக்கத்தின் (Ethical aesthetic love) - ‘களவு’, ‘கற்பு’ எனும் - வெளிப்பாடாகவும் அமைகின்றன. ‘களவு’க் குறிவைக்கும் உரிமை தலைவிக்கே உண்டு எனும் மரபும், ‘களவு கால நீட்டிப்புக்குரியதல்ல; இரு திங்களுக்கு மேல் நீட்டிப்பு செய்யப்படக் கூடாது’ எனும் ஒழுக்க வரையறையும் மிகமிக நுட்பமானவை. இவ்வெளிச்சத்தில் தமிழ் – சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கிடையே வெளிப்படையான ஒருமைப்பாடு ஏதுமில்லை என்பது துல்லியமாகத் தெரிகிறது. தமிழின் காதல் அழகியல் மண்ணில் காலூன்றி மானுடக் கூட்டத்தில் தழைக்கிறது; சமஸ்கிருத காதல் அழகியல் மண்விட்டு விலகி அண்டத்தில் விரிகிறது.

அறக்கோட்பாட்டு வேற்றுமை

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற அறநெறியை வரையறுப்பதிலும் இவ்விரு முதன்மைச் செம்மொழி மரபுகளும் தொடக்கம் முதலே வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன.

தமிழின் அற நூல்களான திருக்குறள், நாலடியார் போன்றவை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியப் படிநிலையையோ அல்லது சடங்குகளையோ வலியுறுத்துவதேயில்லை. தமிழ் அறம் என்பது 'உலகளாவிய மனிதநேயம்' (Universal Humanism) மற்றும் 'இம்மை வாழ்வின் ஒழுக்கம்' சார்ந்தது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" - திருக்குறள் -
972

(மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்ற சமத்துவ அறத்தைத் தமிழ் உரக்கப் பேசுகிறது).

சமஸ்கிருதத்தின் மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற நூல்கள் முன்வைக்கும்  ‘தர்மம்’ என்பது வர்ணாசிரம தர்மம் (Varnashrama Dharma) ஆகும். மனிதனின் பிறப்பு அடுக்கு நிலை சார்ந்த கடமைகளும், யாகச் சடங்குகளும், மறுமை வாழ்வின் (Moksha) தேவைகளுமே அங்கு தர்மமாக (Ritualistic Dharma) வரையறுக்கப்படுகின்றன.

"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகசஹ..."   - பகவத் கீதை 4.13

(நான்கு வர்ணங்களும் குண மற்றும் கர்மங்களின் அடிப்படையில் என்னால் படைக்கப்பட்டன என்கிறது கீதை).

வர்ண, குணங்களின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் படிநிலை தர்மத்தையே சமஸ்கிருத மரபு முதன்மைப்படுத்துகிறது. எனவே, தமிழ் இலக்கியங்களின் 'அறம்' என்ற சொல்லும், சமஸ்கிருத இலக்கியங்களின் 'தர்மம்' என்ற சொல்லும் ஒரே பொருளைத் தருவன அல்ல; அவை தத்துவ ரீதியாக அடிப்படையிலேயே முரண்பட்டவை.

பிற இந்தியச் செம்மொழிகளின் தனித்த போக்கும் தமிழ் மரபிலிருந்து வரலாற்று ரீதியான விலகலும்

தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்குப் பின், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய மொழிகள் செம்மொழிகள் என ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புப் பெற்றுள்ளன.

இவற்றுள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை,  தமிழ் முதன்மை கொண்டு நிலைத்துள்ள திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. பிறமொழிகள்,  இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தவை யாதலால், அவை வரலாற்று, பண்பாட்டு ரீதியாகத் தமிழ் மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தவாகின.

தன்னேரிலாத் தமிழ் மொழியானது சமஸ்கிருதக் கலப்பைத் தவிர்த்துத் தன் தொன்மைத் தனித்துவ சங்க இலக்கிய மரபைப் பேணிக் காத்துத் தொடர்ந்தது. ஆனால் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் தங்களின் தொடக்ககால இலக்கியங்களைச் சமஸ்கிருத இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாகவே தொடங்கின. நன்னய்யா (தெலுங்கு) எழுதிய மகாபாரத மொழிபெயர்ப்பே (ஆந்திர மகாபாரதமு) அதன் முதல் இலக்கியச் சான்று. பம்பாவின் விக்ரமார்ஜுன விஜயம் (கன்னடம்) சமஸ்கிருத இதிகாசப் பின்னணியைக் கொண்டது. துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளப்பாட்டு (மலையாளம்) அம்மொழியின் இலக்கிய அடித்தளமாக அமைந்தது. இம்மொழிகள் சமஸ்கிருதத்தை உள்வாங்கின, தமிழின் 'அகம் - புறம்' மரபைப் பின்பற்றவில்லை. மாறாகத், தங்களின் பிராந்தியத் தனித்துவங்களை வளர்த்தெடுத்துக் கொண்டன.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிலவிய வசன சாகித்யம் (வசனக் கவிதைகள்) மற்றும் தேசி (Desi) மரபுகள், தமிழின் சங்க இலக்கிய வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட, எளிய மக்களின் நேரடி ஆன்மிகத் தேடல் வெளிப்பாட்டு வடிவங்களாக இருந்தன. மலையாளத்தின் ஆரம்ப கால பாட்டு மரபும், பிற்கால மணிப் பிரவாள (சமஸ்கிருதமும் மலையாளமும் கலந்த நடை) நடையும் தமிழின் தூய்மைவாத மரபிற்கு முற்றிலும் எதிரானவை.

ஒடியாவின் செம்மொழி இலக்கியம், வட இந்திய மற்றும் திராவிட மரபுகளுக்கு உட்படாமல், தன் தனித்துவமான ஜகந்நாதர் பண்பாட்டை (Jagannath Cult) மையமாகக் கொண்டது. சரள தாசரின் மகாபாரதம் சமஸ்கிருத மூலத்தை மீறி, ஒடிசாவின் பூர்வகுடி மக்களின் வாழ்வியலையும் நாட்டுப்புறக் கூறுகளையும் புகுத்தியது. பிற செம்மொழிகள், தமிழின் ஐந்நில வாழ்வியல் மரபிலிருந்தும், சமஸ்கிருதத்தின் தூய வைதிக மரபிலிருந்தும் விலகி, பிராந்திய நாட்டுப்புறக் கலைமரபுகளோடும் (Folk traditions) பக்தி இயக்கங்களோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.

இந்தியச் செம்மொழி இலக்கியங்கள் ஒற்றைத் தன்மையற்ற பன்முகப் பெருவெளி

சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தியச் செம்மொழி இலக்கியங்களை ஆராயும்போது, அவற்றுக்கிடையே வெளிப்படையான அல்லது குறிப்பிடத்தக்க வலுத்த ஒருமைப்பாடு (Monolithic Unity) ஏதுமில்லை என்பதே தெளிவாகிறது.

மொழிக் குடும்பங்களின் அடிப்படை வேற்றுமை, அம்மொழிகளின் சிந்தனை முறைகளை, வெளிப்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. தமிழின் நிலம் சார்ந்த திணைக் கோட்பாடும், சமஸ்கிருதத்தின் அண்டவெளி சார்ந்த ரஸக் கோட்பாடும் காட்டும் அழகியல் உலகங்கள் வெவ்வேறான துருவங்கள். பிற்காலச் செம்மொழிகளோ இவ்விரண்டு துருவங்களுக்கிடையே, தமக்கே உரிய பிரந்திய நாட்டுப்புற மற்றும் இதிகாசத் தழுவல் பாதைகளை உருவாக்கிக் கொண்டன.

எனவே, இந்தியச் செம்மொழி இலக்கியங்கள் என்பவை ஒற்றை நூலால் கட்டப்பட்ட மாலை அல்ல; மாறாக, அவை வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தத்துவ வித்துகளிலிருந்து முளைத்து மலர்ந்த தனித்துவமிக்க மலர்களின் பெருவனம் என்கிறோம். 

இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் வெளித்தெரியும் அடிநாத ஒற்றை ஒருமைப்பாடு ஏதுமில்லை. அவற்றின் பன்முகத் தன்மையே உண்மையான அழகு என்பது தர்க்கரீதியாக நிறுவப்படும்போது, நிதர்சனமான வேற்றுமைகளையும் பன்முகத்தன்மையையும் அங்கீகரிப்பதே இந்திய இலக்கிய வரலாற்றுக்கு நாம் வழங்க வேண்டிய உண்மையான நீதியாகும். 

(இந்த ஆய்வும், கருத்துநிலையும் தக்க ஆதாரங்களுடன்  மறுக்கப்படுவதும் தெளிவு நோக்கிய வரவேற்புக்குரியதே.)

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

There is no underlying unity in Indian classical literature

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments