வாங்கிய சர்வதேச விருதுகள்! பிரதமர் மோடி 33; நேரு 2!
இந்திய பிரதமர்கள் வாங்கிய சர்வதேச விருதுகள் பட்டியலில் பிரதமர் மோடி 33 விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றது முதலே அண்டை நாடுகளுடனான நட்பை பேணிப் பாதுகாத்து வரும் நிலையில், வேறெந்த பிரதமருக்கும் இல்லாத பெருமையாக, இவர் இதுவரை 33 சர்வதேச விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த விருதுகளில் பல நாடுகளின் உயரிய கௌரவ விருதுகள் அடங்கும். ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, பல்வேறு சர்வதேச அமைப்புகளும், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு கௌரவ விருதுகளை வழங்கியிருக்கின்றன.
கடந்த ஓராண்டில் பிரதமர் மோடி ஐந்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ்!
பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
அந்நாட்டுத் தலைநகா் பிராட்டிஸ்லாவாவில், இந்த விருதை ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லேக்ரீனி வழங்கி கெளரவித்தாா்.
கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட்
இந்தியா - நார்வே இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வே நாட்டின் மன்னர் ஹரால்ட் -5 ஆல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வெல்விட்சியா மிரபலீஸ் விருது
நமீபியா நாட்டில், அந்நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பழைமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது. உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டது.
கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் - பிரேசில்
பிரேசிலில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு, அந்நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷன் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது.
ஸ்டார் ஆஃப் கானா
கானா நாட்டின் அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆற்றல்மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு கானா நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அண்மையில் பிரதமர் மோடி பெற்ற இந்த விருதுகள் அல்லாமல், பல சர்வதேச நாடுகளின் குறிப்பிடத்தக்க பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது, ரஷியாவில் வழங்கப்படும் செயின்ட் ஆன்ட்ரூ விருது, அமெரிக்க அரசால் மிகவும் சிறப்பான, பாராட்டுக்குரிய செயல்பாடுகளுக்காக வழங்கப்படும் இராணுவ விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரக அரசால், அந்நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, சௌதி அரேபியாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதினையும் பிரதமர நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
தனிப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி சர்வதேச அமைப்புகளின் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்தியதற்கு, பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருதான "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்" என்ற விருது வழங்கப்பட்டது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக சியோல் அமைதி விருதினை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்!
நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் இதுவரை 101 சர்வதேச சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, 78 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இந்த ஜூன் மாதம் ஸ்லோவாகியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம், அவர் சர்வதேச பயணங்களில் சதத்தை எட்டினார்.
முதல்முறை பிரதமராக பதவியேற்றபோது (2014 - 2019), பிரதமர் மோடி 49 சர்வதேச பயணங்கள் மேற்கொண்டிருந்தார். பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணமாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் சென்றிருந்தார்.
இரண்டாவது பதவிக்காலத்தின்போது (2019-2024) 27 சர்வதேச பயணங்களை மேற்கொண்டிருந்தார். மூன்றாவது பதவிக் காலத்தில் இதுவரை 25 சர்வதேச பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச சுற்றுப் பயணங்களில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில், நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையையும் நரேந்திர மோடி படைத்திருந்தார். பிரதமா் பதவியில் 4,399 நாள்களை (ஜூன் 10) நிறைவு செய்ததன் மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி விஞ்சியுள்ளாா்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு கடந்த 1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27-இல் காலமாகும் வரை அந்தப் பதவியை வகித்தாா். 16 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பிரதமராக இருந்த அவா், நாட்டின் நீண்ட கால பிரதமா் என்ற பெருமையை பெற்றிருந்தார். அவா் தொடா்ந்து பிரதமராகப் பதவி வகித்த காலம் 4,398 நாள்களாகும். அதிக நாள்கள் நாட்டின் பிரதமராக பதவியேற்றிருந்தாலும், முன்னாள் பிரதமரும் நாட்டின் முதல் பிரதமருமான ஜவாஹர்லால் நேரு, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தென்னாப்ரிக்காவின் உயரிய விருது உள்பட சர்வதேச நாடுகளின் 2 விருதுகளை மட்டுமே பெற்றிருக்கிறார் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.