FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு - அறிவார்ந்த விவாதங்களும் அறிந்த விளக்கங்களும்...

தமிழ் வெண்பாவும் வடமொழி அனுஸ்துப்பும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் யாப்பு இலக்கண விதிகளின்படி உருவானவை என்பது பற்றி...

7 செப்டம்பர் 2026, 5:37 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

 [மு.கு: இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை (தினமணி.காம் - 26 ஆகஸ்ட் 2026) கட்டுரைக்குப் புகழ்சூழ் தமிழ் அறிஞர்கள், ஆழ்ந்தாய்ந்த தமிழாய்வாளர்கள், ஆய்வுநெறிப் பேராசிரியர்கள், அறிவார்ந்த நட்பினர், என் உளங்கொண்ட உலகறிந்த எழுத்தாளர் எனத் தகுநிலை கொண்ட பலதரப்புகளிலிருந்து செறிவான விவாதக் கருத்துகள் விளைந்து சேர்ந்துள்ளன. அவர்களது ஆழ்ந்துதேர்ந்த கருத்துகளுக்கு நன்றிபரப்பி, மறுப்புரைகளாக அல்லாமல், கட்டுரையாளர் அறிந்துள்ள விளக்கங்களாகப் பொதுப் பந்தியில் பரிமாற முற்படுவதால், தனிப்பட வளக்கருத்துகள் வழங்கியோர் பெயர்களைக் குறிப்பிடுவது - அவர்கள் மீது கட்டுரையாளர் வளர்த்து நிறைத்துவரும் உயர்மதிப்பு கருதித் தவிர்க்கப்பட்டுள்ளது].

கோவை வேளாண் பல்கலைக்கழகப் பூச்சியியல் அறிஞர், தமிழ்தோய்ந்த, பெயர் வெளிப்பட விழையாத தமது நண்பரின் கருத்தாகப் பகிர்ந்தது இது:

‘’ஆசிரியர் வைக்கின்ற சான்றுகள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழியியலாளர்கள் வைக்கின்றவை ஆகும். 95 விழுக்காடு திராவிட, இந்தோ - ஆரிய இலக்கிய மரபுகள் முற்றிலும் மாறுபட்டவை என அறியும் நான் அவற்றுக்கிடையேயான ஒருசில ஒற்றுமைகளையும் கண்டிருக்கிறேன்.

Advertisement

Advertisement

சற்றுக் கடினமான தாளகதி கொண்ட ஆசிரியப்பாவில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்ச் செய்யுள்கள் எளிய தாளகதி கொண்ட வெண்பா போன்றவற்றிற்கு மாறியதன் காரணம் வட மொழியின் தாக்கமே. ⁠பதினெண் கீழ்க்கணக்கில் வருகின்ற பெருவாரியான நீதி நூல்கள் வெண்பாவில் இயற்றப்பட்டன. வெண்பா முழுக்க முழுக்க அனுஸ்துப் என்ற வட மொழி சந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ⁠

பிற்கால இலக்கியங்களான கம்ப ராமாயணம் போன்றவற்றின் விருத்தப்பாவும் வடமொழிச் சந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை. ⁠

ஐவகை நிலங்களின் கடவுளர்களில் வருணன், இந்திரன் மேலும் ஐயமுண்டு. தொல்காப்பியம் மருத நில கடவுளை ‘வேந்தன்’ என்று குறிப்பிட்டாலும் அது ஆரியம் கூறும் இந்திரன்தானா என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை உண்டு. ⁠

தேவநேயப் பாவாணர், அரசேந்திரன், அருளியார் போன்றோர் இந்தோ - ஐரோப்பிய சொற்களின் மூலங்கள் திராவிடத்தில் இருப்பதைச் சான்றுகளோடு விளக்கி உள்ளனர். .....விரிவாகப் பேச வேண்டிய பொருள் இது.’’ 

இக்கருத்து வழங்கலுக்கு விளக்கமாக இது:

திருக்குறள் போன்ற குறள் வெண்பாக்கள் இரண்டு அடிகளைக் கொண்டு, மொத்தம் 7 சீர்களுடன் (சொற்கள்) சுருக்கமாக அமைந்திருக்கும். வடமொழி அனுஸ்துப் சுலோகங்களும் - பெரும்பாலும் மந்திரங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை கருதி - இரண்டு வரிகளாக எழுதப்பட்டு வெகு சுருக்கமாகக் கூறுவனவாக இருக்கும். இந்தப் புறவடிவத்தை (சுருக்கத்தை) கண்டு, வெண்பா, அனுஸ்துப் வழியே வந்தது என்ற தவறான மயக்கம் சிலர் கொள்வதுண்டு. வெண்பாவுக்கும் அனுஸ்துப்பிற்கும் முடிச்சுப் போடுவது என்பது வண்ணத்தை மட்டும் கருதி ஆப்பிளையும் பிளம்ஸையும் ஒன்றாகக் கூறுசேர்ப்பதற்கு ஒப்பாகும்.

தெளிவுபட அறிய உரியது யாதெனில், ‘வெண்பா’ வடமொழியின் 'அனுஸ்துப்' (Anustubh) யாப்பு வடிவத்திலிருந்து தோன்றியது அல்ல. தமிழ் வெண்பாவும் வடமொழி அனுஸ்துப்பும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் தனித்துவமான யாப்பு (Prosody) இலக்கண விதிகளின்படி உருவானவை. இரண்டின் (வெண்பா- அனுஸ்துப்) உள் கட்டமைப்பு, ஒலி விதிகள் முதலியனவும் முற்றிலும் வேறானவை. 

"வெண்பா முழுக்க முழுக்க அனுஸ்துப் என்ற வடமொழி சந்தத்தை அடிப்படையாகக் கொண்டது" என்ற வாதம் தொல்காப்பியம் வழியாக எடுப்பிலேயே மறுக்கப்பட உரிய கருத்தாகும். தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் வெண்பாவுக்கான இலக்கணங்கள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. வெண்பா என்பது தமிழின் அடிப்படைப் பாவகைகளுள் (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா) ஒன்றாகும். 

வெண்பாவின் சீர், தளை, அடி போன்ற கட்டமைப்பு விதிகள் முழுக்க முழுக்கத் தமிழ் மொழிக்குரிய மாத்திரை மற்றும் ஒலி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை ["வெண்பா வுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் இன்பா நேரடிக்கு ஒருங்குநிலை இலவே" (தொல். செய்யுளியல் - 22)] தமிழ் வெண்பா, செப்பலோசை பெற்று ["செப்பல் என்பது வெண்பாவாகும்" (தொல். செய்யுளியல் - 82)]; இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை ["வெண்பா வடிவம் ஏனை யடியே இரண்டிறந் தொழுகும் எனைத் துவு மென்ப" (தொல். செய்யுளியல் - 57)] இறுக்கக் கட்டுப்பாடுகளுடன் பாடப்படும் பா வகை ஆகும். 

தமிழில் வெண்பா நேர், நிரை என்ற அசை அலகுகளையும், அவற்றின் சேர்க்கையான தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், காய்ச்சீர் போன்ற சீர்களையும் அடிப்படையாகக் கொண்டது. அனுஸ்துப் என்பது லகு (குறில் - Laghu), குரு (நெடில் - Guru) என்ற எழுத்து மாத்திரை அலகுகளையும், எட்டு எழுத்துகள் கொண்ட 'கணங்களையும்' அடிப்படையாகக் கொண்டது. வெண்பாவிற்கு தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) மிக முக்கியமானது. முந்தைய சீரின் ஈற்றசையும் அடுத்த சீரின் முதலசையும் எப்படி ஒன்ற வேண்டும் என்ற கடுங் கட்டுப்பாடு இதற்கு உண்டு. அனுஸ்துப் என்பது ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்களை (வரிகளை)க் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாதத்திலும் சரியாக எட்டு எழுத்துகள் (Syllables) இருக்க வேண்டும் (மொத்தம் 32 எழுத்துகள்). இதில் தமிழில் உள்ள தளை போன்ற கட்டுப்பாடுகள் கிடையா. 

மேலும், பாடலுள்பொதியும் அவசிய நயங்கள், எதுகை, மோனை போன்றவை வடமொழியில் இல்லை. தமிழ்ச் ‘செப்பலோசை’ (இருவர் உரையாடுவது போன்ற சீரான ஓசை), இசை மற்றும் உச்சரிப்பு அழுத்தங்களை (சந்தம்) அடிப்படையாகக் கொண்டது. 

"புலவர்க்கு வெண்பா புலி" என்ற பழமொழிக்கு ஏற்ப, ‘தளை’ தட்டாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பாடப்படும் வடிவமைப்பு - வெண்பா- தமிழர்களின் மொழி ஆளுமைக்குச் சான்று. வெண்பா ஒரு தமிழ் ‘சுதேசி’க் கவிதை வடிவமேயன்றி வடமொழியின் இறக்குமதி அல்ல. எனவே, தமிழ் வெண்பா என்பது எவ்வித வடமொழித் தாக்கமும் இன்றி- தமிழின் சொந்த ஒலி நய அமைப்பில் உருவான - தனித்துவமான, மரபுசார்  இலக்கிய வடிவமென அறிந்துகொள்ளலாம்.

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட், "தமிழின் யாப்பு முறையானது இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது திராவிட மொழிகளுக்கே உரித்தான தனித்துவமான தாளக் கட்டமைப்பைக் கொண்டது" என ஆணித்தரமாக நிறுவியுள்ளதையும் [George L. Hart, The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts, Berkeley, California, 1975, pp. 214-216.]  இவ்விடத்தே மனங்கொள்ள வேண்டும்

ஆசிரியப்பாவில் இருந்து நீதி நூல்கள் (பதினெண் கீழ்க்கணக்கு) வெண்பாவிற்கு மாறியதற்கு வடமொழி காரணம் அல்ல. தமிழ், ‘’வழக்கொழிந்து சிதையாத சீரிளமைத்திறன்’’ கொண்டது; காலந்தோறும் தன் கரைகளைச் சீர்படுத்திக்கொண்டே தொடர்ந்து பாயும் தீராநதியணையது. அகத்தையும் புறத்தையும் அழகுறப் பகுத்துப் பாடிய சங்கப் பாடல்கள்,  உணர்வுகளை வெளிப்படுத்தும் நெகிழ்வான பா மரபைச் சேர்ந்தவை. எனவே, வாகான, கட்டற்ற, ஓசை நயம் கொண்ட ஆசிரியப்பா (அகவலோசை) அங்கு கைக்கொள்ளப்பட்டது.

சங்கம் மருவிய காலத்தில் (களப்பிரர் காலம்) சமூகத்தில் நீதியறிவுரைகளைச் சொல்ல வேண்டிய அவசியமானது. அறக் கருத்துகளை மக்கள் எளிதாக மனத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு மந்திரம் போலக் கச்சிதச் சுருக்க, ஓசையமைப்பு மாறா ஒரு வடிவம் தேவைப்பட்டது. அதற்கு, வெண்பா (செப்பலோசை) மிகச் சரியாகப் பொருந்தி வந்ததால் சமண, பௌத்த முனிவர்கள் அதனைத் தேர்ந்துகொண்டனர். இது சமூக - இலக்கியப் பரிணாம வளர்ச்சிப் படிநிலையே தவிர, வேற்று மொழித் தாக்க விளைவல்ல.

கம்பராமாயண விருத்தப்பாக்களின் வேர் வடக்கிலிருந்தா?

'விருத்தம்' (Vritta) என்ற சொல்லே வடமொழிச் சொல்தான். பக்தி இலக்கியக் காலத்திலும், காப்பியக் காலத்திலும் (சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்) வடமொழிச் சந்தங்களின் பரவல் தமிழை நனைத்தது. ஆனால், தமிழ் அதைக் கண்மூடித்தனமாக அப்படியே உறிஞ்சியுட்கொள்ளவில்லை. வடமொழிச் சந்தங்கள் வந்தாலும் அதனைத் தமிழ் யாப்பிலக்கணத்தின் அசை, சீர், தளை, எதுகை, மோனை விதிகளுடுத்தி  - 'தமிழ்ப்படுத்தியே' - கம்பர் போன்றோர் கவிநெய்தனர். (எ.கா: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்). அதனால்தான் கம்பனின் சந்தங்கள், சமஸ்கிருத ஸ்லோகங்களைப் போல காதில் மட்டும் ஒலிக்காமல், தனித்துவமான தமிழோசையுடன் இனிக்கின்றன இதயம் வரை.

திணைக் கோட்பாடும் தெய்வங்களும்

ஐவகை நிலங்களுக்குமான வாழ்வியல், உணர்வுகள் மற்றும் தெய்வங்களை வகுத்தளித்த 'திணைக் கோட்பாடு' உலக இலக்கியங்கள் எதிலும் இல்லாத திராவிடச் சிந்தனையாகும். தொல்காப்பியம் நிலத் தெய்வங்களைப் பின்வருமாறு கூறுகிறது:

"மாயோன் மேய காடுறை உலகமும் / சேயோன் மேய மைவரை உலகமும் / வேந்தன் மேய தீம்புனல் உலகமும் / வருணன் மேய பெருமணல் உலகமும்..." / - (தொல். அகத்திணையியல் 5)

மருத நிலக் கடவுளான 'வேந்தன்', வேத கால 'இந்திரன்'தானா என்ற கேள்விக்கு நுட்பமான வரலாற்றுப் பார்வை தேவை. வேதகால இந்திரன் போருக்கும், மழைக்கும், இடிக்குமான கடவுள்; இந்திரன் சோம பானம் அருந்தி ஆரியர்களைப் போரில் வழிநடத்துபவராக ரிக் வேதம் சித்திரிக்கிறது. ஆனால், தமிழின் 'வேந்தன்' என்பவன், வேளாண்மை செழித்த மருத நிலத்தின் தலைவன் (King / Chief). மருத நிலத்தில் ஆற்று நீரைச் சேமித்து வேளாண்மை செய்ய, நீதி வழங்க ஒரு வலுவான தலைமை தேவைப்பட்டது. அந்த நிலத் தலைவனையே அவர்கள் வேந்தனாக வழிபட்டனர். அதனால்தான் ‘வேந்தன்’, ‘இறை’யானான் (குறள் 388). பிற்காலத்தில் நிகழ்ந்த பண்பாட்டுக் கலப்பில் (Syncretism), வேந்தனும் மழைக்கடவுளான இந்திரனும் ஒன்றாகக் கருதப்பட்டனர்.

அதேபோல, நெய்தல் நிலக் கடவுளான 'வருணன்', சங்கத் தமிழில் அலைகடலின் தெய்வம். வேதங்களில் வருணன் ஆகாயத்திற்கும், பிரபஞ்ச ஒழுங்கிற்குமான தார்மிகக் கடவுள். ஆனால், தேவநேயப் பாவாணர் போன்ற மொழியறிஞர்கள், 'வார்' (நீர்) என்ற திராவிட வேர்ச்சொல்லில் இருந்தே வாருணன் -> வருணன் என்ற சொல் உருவானதாகக் குறிப்பிடுவதைக் கவனங்கொள்ள வேண்டும். பெயர்கள் பிற்காலத்தில் ஒன்றாகியிருக்கலாம்; ஆனால் "குறிப்பிட்ட நிலத்திற்கும், அங்கு வாழும் மக்களின் தொழிலுக்கும் ஏற்ற தெய்வம்" என்ற கோட்பாடு தூய தமிழ்ச் சிந்தனையாகும்.

வேர்ச்சொல் ஆய்வுகளும் திராவிடத்தின் கொடையும்

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு 'நன்கு செப்பனிடப்பட்டது' என்று பொருள் கூறப்படுகிறது. அது பல்வேறு பிராந்திய மொழிகளிலிருந்து சொற்களைப் பெற்றுத் தன்னை வளப்படுத்திக் கொண்டது. தேவநேயப் பாவாணர் தன்னுடைய 'வடமொழி வரலாறு' மற்றும் 'ஒப்பியன் மொழிநூல்' ஆகிய நூல்களில், இந்தோ - ஆரிய மொழிகளுக்குள் சென்ற திராவிட வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். "வடமொழியிலுள்ள திராவிடச் சொற்களையெல்லாம் நீக்கிவிட்டால், அம் மொழிக்கு உடலுமிருக்காது; உயிருமிருக்காது" என்று பாவாணர் உரத்துக் கூறியிருப்பது செவிநிறைக்கும்.

டாக்டர் கால்டுவெல், தமிழைத் திராவிட மொழிக் குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினராகக் கருதியதோடு,” குடும்பத்தின் பிரதிநிதித்துவ மொழியாக, சந்தேகத்திற்கு இடமின்றி பண்டைய வடிவங்களின் வேர்கள் கொண்ட வளமிகு பரம்பரை" என்கிறார். வெண்பா உள்ளிட்ட பாவகை வடிவங்களும் அப்பரம்பரை வளப்பட்டியலில் இருந்திருக்கும் எனும் எதிர்பார்ப்பு இயற்கையானதன்றோ?

விவாதக் கருத்தளித்துள்ள ஆய்வாளர் குறிப்பிடும் மொழியாய்வு அறிஞர்கள் கு. அரசேந்திரன்  (‘தமிழும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளும்’), அருளியார் (‘அருளியம்’) ஆகியோர் ஒப்பியல் மொழியியல் நோக்கில் இக்கருத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். 

இவர்களது ஆய்வுகள் தனித்த கற்பனைகள் அல்ல; கமில் சுவலபில் (Kamil Zvelebil), தாமஸ் பர்ரோ (Thomas Burrow), எம்.பி. எமினோ (M.B. Emeneau) ஆகியோர் தொகுத்த 'திராவிட வேர்ச்சொல் அகராதி' (Dravidian Etymological Dictionary) , தாமஸ் ஆர். டிரவுட்மென்  (திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்,’ தமிழில் இராம. சுந்தரம்) போன்ற அறிஞர்களின் நூற்கருத்துகளும் வலுகூட்டி நிற்கின்றன‘ மொழிகளின் ஒற்றுமை தானே வெளிப்படும் உண்மையல்ல; அது அசைக்கவியலாச் சான்றுகளோடு விளக்கப்பட வேண்டிய உண்மை’ என்பதை வலியுறுத்தும் பெரும் சான்றுகளாகவும் விளங்குகின்றன.

திராவிட மொழிக் குடும்பத் தலைமொழியான தமிழுக்குச் “சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு” (எல்லிஸ்,1777-1819),  மூலவேர்கள் திராவிட மண்ணிலேயே உள்ளன என்ற கருத்துநிலை வலுப்பெற்றுள்ளது அறிஞர்களது ஆய்வுகளால்.

வலிந்து திணிக்கப்படும் பிற 'ஒற்றுமை'களும் விளக்கங்களும்

மேற்கண்டவை தவிர, தமிழ் இலக்கண, இலக்கியங்களை வடமொழியோடும் ஆரிய மரபோடும் இணைக்க இன்னும் பல புனைவுகள் வலிந்து திணிக்கப்படுவதுண்டு.

அகத்தியர் புனைவு

தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ஆரிய முனிவரான அகத்தியர் என்பது சொல்லப்பட்டு வரும் தொன்மம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார்,

"வடவேங்கடம் தென்குமரி / ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து... /முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி"

என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, எந்த இடத்திலும் தொல்காப்பியம் அகத்தியத்திடமிருந்து வந்ததென்று குறிப்பிடக் காணோம். தொல்காப்பியரே தமக்குமுன் தமிழ்ப் பரப்பில் தம்முன்னோர் மொழிந்துள்ளவற்றை அறிந்துள்ளவராக ‘என்ப’, ‘என்மனார் புலவர்’, எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளாரே. இவ்வளவு குறிப்புகள் வழங்கிய தொல்காப்பியர் அகத்தியம் பற்றி ஏதும் சொல்லவில்லையே. தென்னகத்தின் வளமையான இலக்கண மரபை, வடக்கின் அதிகாரத்தோடு இணைக்கப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அடிப்படையிலாப் புராணப் புனைவே ‘அகத்தியர் தொன்மம்’.

அறம், பொருள், இன்பம் - தர்ம, அர்த்த, காம

திருக்குறள் முதலான தமிழ் நூல்களின் முப்பால் பகுப்பு, சமஸ்கிருதத்தின் 'புருஷார்த்தம்' (தர்ம, அர்த்த, காம, மோட்ச) என்பதன் மொழிபெயர்ப்பே என்றொரு முடவாதமும் உண்டு. இதுவும் நேர்நிற்கவியலாதது. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் மனித வாழ்வை நுட்பமாக அகம் (உள்ளத்து உணர்வுகள், காதல்), புறம் (வீரம், கொடை, சமூக வாழ்வு) என இரண்டாகப் பகுத்தன. இது வேறு எந்த மொழியிலும் இல்லாத தமிழருக்கே உரிய பகுப்பு என்பது வெள்ளிடை மலையன்றோ?

வடமொழி மரபில் 'மோட்சம்' என்பது மனித வாழ்வின் இறுதி இலக்காகக் கொண்டாடப்படும் நிலையில், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிலையற்ற மறுமையைப் பற்றிப் பெரிதுபடுத்தாமல், வாழும் இம்மை வாழ்வின் ஒழுங்கைச் சிறப்பை ஏத்தின. அதனால்தான் தொடக்க காலங்களில், தமிழில் 'வீடுபேறு' என்ற நான்காம் பகுப்பு இல்லை. முப்பால் சிந்தனை தமிழின் அக-புற மரபிலிருந்து முகிழ்த்ததே அன்றி வடமொழி இறக்குமதி அல்ல.

காவிய மரபுகள்

வடமொழியின் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் கடவுள் அவதாரங்களையும், மாயாஜால நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டவை. ஆனால், தமிழின் புறநானூற்று மரபும், சிலப்பதிகாரம் போன்ற தொடக்க காலக் காப்பியங்களும் சாதாரண மனிதர்களின் வீரத்தையும், அறத்தையும், மானுட மேன்மைகளை, பிழைகளைப் பேசுபவை. தமிழ் இலக்கியம் மண்ணோடும் மனிதப் பண்போடும் கொண்டிருந்த நெருக்கத்தைப் பகிர்ந்தன.

ஒரே புவிப்பரப்பில் நெடுங்காலத் தொடர்பினால் மொழியியல்  பண்பாட்டுத் தளங்களில், இரண்டு மரபுகளுக்கிடையே ‘கொள்வினை கொடுப்பினை’ நிகழ்வது - மேட்டிலிருந்து பள்ளம் பாய்நீர் போல - இயற்கையே. ஆனால், "சில மேலோட்ட வெளிப்பாடுகள் காணப்படுவதாலேயே ஒற்றுமைகள்" எனக் கொண்டாட இயலாது. ஒன்று மற்றொன்றின் நகலென்றோ, இரண்டும் ஒரே ஊற்றிலிருந்து கிளம்பியவை என்றோ நிற்பது மொழியியல் அறிவியலுக்கு முரணானது. தொல்காப்பியத்தின் யாப்பு விதிகளும், திணைக் கோட்பாடும், அக - புற வாழ்வியலும், பல்லாயிரக்கணக்கான திராவிட வேர்ச்சொற்களும் தமிழ் - இந்தோ ஆரிய மரபுகளுக்கிடையேயான அடிநாதம் முற்றிலும் வேறானது என்பதைச் சந்தேகமற மெய்ப்பிக்கின்றன.

இவ்விளக்கத்தின் நிறைவாக, “தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் பகிரப்பட்ட மரபுகள், மீட்டர்கள் மற்றும் நுட்பங்களை ஒரு பொதுவான மூலத்திலிருந்து பெறுகின்றன என்பதையே சான்றுகள் வலுவாகத் தெரிவிக்கின்றன. இரண்டும் மற்றொன்றிடமிருந்து நேரடியாகக் கடன் வாங்கவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கவில்லை. ஏனெனில் பல மரபுகள் முதலில் தமிழில் தோன்றியுள்ளன. ‘மீட்டர்’ சமஸ்கிருதத்திற்குச் சொந்தமானது அல்ல; ஆனால் தமிழுக்குச் சொந்தமானது. சமஸ்கிருதம் தமிழிலிருந்து கடன் வாங்கவில்லை, ஏனெனில் சமஸ்கிருத எழுத்தாளர்கள் தமிழ் பாரம்பரியத்தை அறிந்திருக்கவில்லை என்பதாலும், மீண்டும், இரண்டு இலக்கியங்களுக்கிடையேயான ஒற்றுமை நேரடி கடன் வாங்குவதைக் குறிக்கும் அளவுக்கு நெருக்கமாக இல்லை” (George Luzerne Hart, The Relation between Tamil and classical Sanskrit Literature) என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

எக்களத்திலும் ஆராய்ச்சிகள் முற்றுப்பெற்று நிற்பன அல்ல; முடிவற்ற தேடல்களாகத் தொடர்வனவே. மூழ்கி, முத்துக்கள் ‘கண்டவர்’ ‘விண்டது’ காண்கிறோம். இனிக் காண்பவர் விண்டதும் கேட்போம்.  ஆய்வொளி வெளிச்சம் அகலாது விளைக்கட்டும். அறிவைத், தெளிவை அகிலமெலாம்.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

There is no underlying unity in Indian classical literature- comments and explanations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments