FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

வருமுன் காப்பது நல்லது!

இலங்கைச் சிறைகளில் நிலவும் பிரச்னைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இந்திய சிறைகளிலும் இடநெருக்கடி உள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கொழும்பு மேகசின் சிறையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் ஒரு கைதியும், தலைநகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள குருவிட்ட சிறையில் நிகழ்ந்த வன்முறையில் 2 பேரும் இறந்துள்ளனர்; மேலும் 23 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களிடையே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது மேலும் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சிறைச்சாலை வன்முறைகளுக்கு முக்கியமான காரணம் போதைப் பொருள் புழக்கம், அதை விநியோகம் செய்யும் கும்பல்களுக்கு இடையேயான விரோதம் மற்றும் சிறைக்குள் நிகழும் கைதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் சொல்லும் சக கைதிகள் மீதான தாக்குதல் என்றாலும், சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க இயலாது.

இலங்கையில் உள்ள சிறைகளில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் 300 முதல் 400 சதவீதம் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டுச் சிறைகளில் மொத்தம் சுமார் 11 ஆயிரம் பேரை அடைக்க வசதி உள்ள நிலையில் தற்போது சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

சிறைச்சாலைகளில் கொள்ளளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்படும்போது இடநெருக்கடி, உணவு விநியோகத்தில் பிரச்னை, சுகாதார சிக்கல், மருத்துவ வசதி குறைபாடு என ஒவ்வொரு பிரச்னையாக எழுவது இயல்பு. அப்போது கைதிகளுக்குள் ஏற்படும் உரசல் கலவரமாக வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

இலங்கைச் சிறைகளில் நிலவும் பிரச்னைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இந்திய சிறைகளிலும் இடநெருக்கடி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின்படி கடந்த 2024-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 1,333 சிறைச்சாலைகளின் மொத்த கொள்ளளவு சுமார் 4.53 லட்சம் பேர் மட்டுமே. ஆனால், சுமார் 5.11 லட்சம் கைதிகள் இருக்கின்றனர்.

இது கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச எண்ணிக்கை எனக் கூறப்பட்டாலும், சில சிறைகளில் கொள்ளளவை விஞ்சி 150 சதவீதம் வரையில் கைதிகள் காணப்படுகின்றனர். மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சிறைச்சாலைகளில் கொள்ளளவைவிட அதிகமானவர்கள் இருப்பது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பிடி ஆணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் இதர சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர் நடவடிக்கைகள்மூலம் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வருவதால் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை புழல் - 1, 2, கோவை, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளிலும் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் பழைய மத்திய சிறையில் கடந்த 1999-இல் நிகழ்ந்த வன்முறையில் சிறையின் துணைக் கண்காணிப்பாளர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். 2017-இல் மும்பை பைகுலா பெண்கள் சிறையிலும், கொல்கத்தா டம்-டம் சிறையிலும் நிகழ்ந்த வன்முறைகளில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறைகளுக்குக் காரணம் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இடநெருக்கடி, சித்திரவதை புகார் போன்றவையே என விசாரணையில் தெரிய வந்தது.

சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் விசாரணைக் கைதிகள். நீதிமன்றங்கள் விசாரணையை விரைவுபடுத்தினால் இந்த எண்ணிக்கை குறையும். நீதிமன்ற பிணை கிடைத்தும் உரிய ஆவணங்கள் மற்றும் பிணையத் தொகை செலுத்த முடியாமல் அடைபட்டு கிடப்பவர்களும் உண்டு. இவற்றுக்கு தீர்வுகாண இலவச சட்ட ஆலோசனை மையங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

அது மட்டுமல்லாது சிறு குற்றங்களுக்கு சொந்த பிணையில் விடுவித்தல், வீட்டுக் காவல், மின்னணு சாதனங்களின் மூலம் கண்காணித்தல், கைது செய்யாமல் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருத்தல் போன்றவற்றால் சிறைகளில் கூட்டத்தைக் குறைக்க முடியும். சிறை வன்முறைகளையும் தடுக்க முடியும்.

சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைத்தல், கொடுங்கைதிகளிடமிருந்து சாதாரண கைதிகள் மற்றும் இளம் வயதினரைப் பிரித்து வைத்து பராமரித்தல், சுகாதாரச் சீர்கேடுகளைக் களைதல், மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.என். முல்லா (1980 - 83), நீதிபதி கிருஷ்ண அய்யர் (1987 - 88), நீதிபதி அமித்தவ ராய் (2018) ஆணையங்களின் பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இலங்கை நிகழ்வுகளை கவனத்தில் கொண்டாவது சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், அவற்றைச் சீர்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தவிர்க்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 948) அதிகாரம்: மருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments