இத்துடன் விட்டுவிடலாம்!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சர்ச்சையில் சிக்குவது இது புதிதொன்றுமில்லை.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சர்ச்சையில் சிக்குவது இது புதிதொன்றுமில்லை. இம்முறை ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்றாவது தூணான நீதித் துறையின் மீது கை வைத்து சுட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய மற்றும் சில மாநில பள்ளிகளில் பின்பற்றப்படும் என்சிஇஆர்டியின் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் "நீதித் துறையில் ஊழல்' எனும் பாடப் பிரிவால் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து நீதித் துறையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் காட்டமாக தெரிவித்ததுடன் அந்தப் புத்தகத்துக்கு முழுமையான தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
தடை மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) திரும்பப் பெற என்சிஇஆர்டி-க்கு அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், "நீதித் துறையை அவமதிக்க நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதுபோல் தோன்றுகிறது; இந்த விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது?" என்று விளக்கம் கேட்டு, என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாடப் புத்தகத்தில் "முறையற்ற கருத்துகள்' இடம்பெற்றதற்காக மன்னிப்புக் கோரியுள்ள என்சிஇஆர்டி, உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து, பாடப் பிரிவு திருத்தி எழுதப்படும் என்று அறிவித்துள்ளது. கல்வி அமைச்சகமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
என்சிஇஆர்டியின் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. "பள்ளிக் குழந்தைகளுக்கு நீதித் துறை ஊழல் குறித்துப் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன" என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கோபப்பட்டிருக்கிறார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே மன்னிப்புக் கோரியுள்ளார்.
அந்த பாடப் பிரிவில், ஊழல், வழக்குகளின் தேக்கம், நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவர்கள்' என்று குறிப்பிடப்பட்டது. இதுவே உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி அடையவும், தாமாகவே முன்வந்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் காரணமாக அமைந்துவிட்டது.
நீதித் துறையின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஊழல் என்பது ஒன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல. திமுக எம்.பி.யான வி.எஸ். மாதேஸ்வரன், பணியில் உள்ள நீதிபதிகள் மீதான ஊழல், பாலின முறைகேடு மற்றும் இதர தகாத செயல்பாடுகள் குறித்துப் பதிவாகியுள்ள புகார்கள் குறித்த புள்ளிவிவரத்தை அளிக்குமாறு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அண்மையில் மக்களவையில் பதில் அளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பணியில் உள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பாடத் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள என்சிஇஆர்டி, நீதித் துறையை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், கடந்த 2022-இல் அப்போதைய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலின் அடிப்படையில்தான் பாடத் திட்டத்தில் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக எழும் புகார்கள் குறித்து அரசு தனியாக விசாரணை எதுவும் நடத்துவதில்லை. மாறாக, நீதித் துறையின் புனிதத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மேற்பார்வையில் உள்விசாரணை நடத்தப்பட்டு புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிபதி பணி விலக அறிவுறுத்தப்படுவார். அல்லது அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் திரும்பப் பெறப்படும். கடும் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அவரை பணிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச்சில் தீ விபத்து ஏற்பட்டபோது,
அங்குள்ள அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டைகளில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டன. அந்தப் பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதற்கு சரியான பதில் இல்லை. அவரைப் பதவிநீக்கம் செய்ய 208 எம்.பி.க்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதவி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
எந்த ஒரு அரசியல் சாசன அமைப்பிலும் குற்றம் குறைகள் இருக்கத்தான் செய்யும். அவை குறித்த விமர்சனங்கள்தான் அந்தக் குறைகளைக் களைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஆனால், அந்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி நியாயமானது.
நீதித் துறையின் மாண்பையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதிலும், அதன் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் மக்கள் அதன் பின்னால் நிற்பார்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், நீதித் துறை தனது குறைபாடுகள் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
என்சிஇஆர்டி புத்தகத்தை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது. நீதித் துறை சார்ந்த குறிப்புகள் அகற்றப்படும் என்று கூறிவிட்டது. இந்தப் பிரச்னையை மேலும் வளர்க்காமல் இத்துடன் முடித்துக்கொள்வதுதான் நீதித் துறைக்கும் அதன் மாண்புக்கும் உகந்ததாக இருக்கும்.