இனியும் தாமதிக்கக் கூடாது!
உள்நாட்டில் கப்பல் கட்டும் தளங்களை அதிகரிப்பதும், அதற்கான முதலீட்டை ஈர்ப்பதும், அதன்மூலம் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதும் பற்றி...
பொதுத் துறை நிறுவனமான கொல்கத்தாவில் இயங்கும் கார்டன் ரீச் கப்பல் கட்டமைப்பு மற்றும் என்ஜினீயரிங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க் கப்பல்கள் கடந்த வாரம் பிரதமரால் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அவற்றில் ஐஎன்எஸ் அக்ரோய், ஐஎன்எஸ் துனாகிரி இரண்டும் போர்க் கப்பல்கள் என்றால், 'ஐஎன்எஸ் சன்ஷோதக்' என்பது ஆய்வுக் கப்பல். இந்த மூன்று அதிநவீன போர்க் கப்பல்களும் 75% உள்நாட்டுப் பொருள்கள் மூலம் வடிவமைக்கப்பட்டவை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் இந்தியக் கடற்படையின் சிறப்புப் படைப் பிரிவுக்கு சனிக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
மசாகான் டாக் நிறுவனத்தில் கட்டமைக்கப்பட்ட 6,670 டன் எடையுள்ள ஐஎன்எஸ் மகேந்திரகிரி அதிகபட்சமாக 28 கடல் மைல்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அது மட்டுமல்ல முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, ரேடார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் போர்க் கப்பலில், பிரமோஸ் உள்ளிட்ட அதிவேகத் தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளைப் பொருத்த முடியும். வான், தரை, கடலுக்கடியில் என எந்த வடிவத்தில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதைத் தடுக்கும் வலிமை கொண்டது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு தளவாடங்களுக்குப் பிற நாடுகளை எதிர்பார்த்து இருந்ததும், அந்த நாடுகளின் சந்தையாக இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் இருந்ததும் கடந்த காலமாக மாறிவிட்டது. ஒருபுறம் அனைத்து நாடுகளையும் தனது ராஜதந்திரத்தால் (டிப்ளமசி) இந்தியாவின் உறவாடு முறைமையை (டிப்ளமட்டிக் ரிலேஷன்ஸ்) வலுப்படுத்திக் கொண்டது போலவே, பாதுகாப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், வலிமையானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் பிரதமர் நரேந்திர மோடி முனைப்பாக இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎன்எஸ் விக்ராந்த் என்கிற விமானம் தாங்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதில் தொடங்குகிறது இந்தியக் கடற்படையின் புதிய அத்தியாயம். புதிய கப்பல்கள் இணைக்கப்படுவதுடன் அவை இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்படுகின்றன. ஐஎன்எஸ் அக்ரோய், ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மூன்றும் இந்தியாவின் போர்க் கப்பல்கள் உருவாக்கும் திறனுக்கு சாட்சியாகத் திகழ்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் 33 போர்க் கப்பல்களும், ஏழு நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும்தான், வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டது. ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் இரண்டும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு நமது கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இந்தியக் கடற்படையில் இப்போது 135 போர்க் கப்பல்கள் இருக்கின்றன; அவற்றில் 39 போர்க் கப்பல்கள் மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரானவை. 2035-க்குள், 250 போர்க் கப்பல்களுடன் கூடிய வலிமையான கடற்படையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு எட்டப்படுமா என்பது தெரியவில்லை.
ஆனால், அதை நோக்கிய பயணம் விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கப்பல் கட்டுமான இலக்கு என்பது போர்க் கப்பல்கள் சார்ந்தது மட்டுமே அல்ல. 2025-26 பட்ஜெட்டில் உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை வலுப்படுத்த ரூ. 25,000 கோடி ஒதுக்கப்பட்டது.
அதை ரூ. 70,000 கோடிவரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் கப்பல் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதால் எஃகு, மின்னணு, நுண்ணுணரி (சென்ஸôர்), மென்பொருள், தளவாடங்கள் உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்பதுதான் இதில் கவனக் குவிப்புக்கான காரணம்.
சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டில் 60 பெரிய கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன. கப்பல்களின் இயக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதும், புதிய துறைமுகங்கள் நிறுவப்படுவதும் அவசியமாகின்றன. 'சாகர்மாலா' திட்டம் துறைமுகங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்டு, இந்தியாவின் 12 அரசுத் துறை துறைமுகங்களும் நவீனப்படுத்தப்படுகின்றன.
சீனாவுடன் ஒப்பிடும்போது நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உலகளாவிய அளவில் 47% கப்பல்களுடன் சீனா முதலிடத்திலும், 29% உடன் தென் கொரியாவும், 17% உடன் ஜப்பானும் இரண்டு, மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. இந்தியாவின் கப்பல் பங்களிப்பு வெறும் 1.2% . கடல்சார் வர்த்தகத்தில் கிரீஸ் (17.8%), சீனா (12.8%), ஜப்பான் (10.8%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நமது பங்கு வெறும் 1.8% மட்டுமே.
இந்தியக் கொடியுடன் வலம்வரும் கப்பல்களின் எண்ணிக்கை வெறும் 0.77% எனும்போது, எந்த அளவுக்கு பின்தங்கி இருக்கிறோம் என்பது புரியும். பலவீனத்தைப் புரிந்துகொண்டு நம்மைப் பலப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உள்நாட்டில் கப்பல் கட்டும் தளங்களை அதிகரிப்பதும், அதற்கான முதலீட்டை ஈர்ப்பதும், அதன்மூலம் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதும் அவசர அவசியம்.
*****
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை.
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
திருக்குறள் (எண் 594) அதிகாரம்: ஊக்கம் உடைமை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.