FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

மெல்லிசையின் ராஜகுமாரி!

தமிழ்நாடோ, கர்நாடகமோ, கேரளமோ எதுவானாலும் ஜானகி அம்மாவை சொந்தம் கொண்டாடித் தீர்க்கிறதே, இந்த அதிசயத்தை என்னவென்று சொல்ல?

Updated On : 15 ஜூலை 2026, 6:15 am IST
மெல்லிசையின் ராஜகுமாரி எஸ். ஜானகி
பகிர்:

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து, இனிமையான திரையிசையின் மற்றொரு வசந்த காலமும் கடந்து போயிருக்கிறது. லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், சுமன் கல்யாண்பூர், ஆஷா போஸ்லேவைத் தொடர்ந்து இன்னுமொரு இசைக் குயில் வானுலகில் தேவகானம் இசைக்க விடை பெற்றுச் சென்று விட்டது. மௌனத்தையும் பாட்டாக்க முடியும் என்று நமக்கு உணர்த்திய ஜானகி அம்மா, தனது இசையால் காலனைக் கூடத் தோற்கடித்து விட்டார். அவர் மறைந்தாலும், காற்றுள்ள காலம் அதில் அவரது கந்தர்வ கானம் கலந்து கோலோச்சிக் கொண்டிருக்கும்.

இருபதுக்கும் அதிகமான மொழிகளில், பல்லாயிரம் பாடல்கள்; தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஜானகி அம்மாவைத் தனதாக்கிக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்வது? தெலுங்கைத் தாய் மொழியாகவும், ஆந்திரத்தை சொந்த மாநிலமாகவும் கொண்டிருந்தாலும் அது தமிழ்நாடோ, கர்நாடகமோ, கேரளமோ எதுவானாலும் ஜானகி அம்மாவை சொந்தம் கொண்டாடித் தீர்க்கிறதே, இந்த அதிசயத்தை என்னவென்று சொல்ல? அவர் பாடிய காலத்தில் இந்த மாநிலங்களில் வாழ்ந்த ஒவ்வொரு ஜீவனிலும் அவரது குரலும், பாடலும் ரத்தத்தில் அணுக்கள் போலக் கலந்திருக்கின்றனவே, அந்த ரகசியம்தான் என்ன?

எந்த ஸ்ருதியிலும் பாடக் கூடியதாக இருப்பது ஜானகி அம்மாவுடைய குரலின் வீச்சு (ரேஞ்ச்). சங்கதிகள் அநாயாசமாக ஆற்றொழுக்குபோல வந்து விழும். கதாநாயகிகளுக்குப் பாடும் அதே லாகவத்தில், குழந்தைகளின் குரலிலும் அவரால் பாட முடியும். மெல்லிசையானாலும் சரி, சாஸ்த்ரீய சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த பாடலானாலும் சரி, நாட்டுப்புறப் பாடலோ, மேல்நாட்டு வகைப் பாடலோ, எதுவானாலும் அவரது குரலுக்கு அடிமையாகும் அந்த வித்தகத்தை வேறு யாரிடம் நாம் பார்க்க முடியும்?

Advertisement

Advertisement

குரல் வளத்தால் மட்டுமல்ல, பாடும்போது அவர் வெளிப்படுத்தும் பாவங்களாலும் நம்மை ஆச்சரியப்படுத்துபவர் ஜானகி அம்மா. ஒலிப்பதிவுத் தளத்தில் ஆனாலும் சரி, மெல்லிசை நிகழ்ச்சியானாலும் சரி ஒலிபெருக்கி முன்னால் ஜானகி அம்மா நின்று பாடுவதைக் கவனிப்பவர்களுக்கு ஒரு தனித்துவம் தென்படும். அவரது உதடு மட்டும்தான் அசைந்து கொண்டிருக்கும். அவரது பாடலில் சங்கதிகளும், உணர்ச்சிகளும், ஏற்ற இறக்கங்களும் அலைமோதிக் கொண்டிருக்கும். ஆனால், அவர் அசையாமல் நின்றபடி பாடிக் கொண்டிருப்பார்.

1990-களில் அமெரிக்கா சென்றபோது, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் உடனடியாக ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார். மயங்கிய நிலையில் இருந்த ஜானகிஅம்மா, நினைவு திரும்பிக் கண்விழித்துப் பார்த்தபோது, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த செவிலியர்கள் அவரைச் சுற்றி தூங்காமல் கண் விழித்துக் காத்திருந்ததைப் பார்த்து அவர் வியப்படைந்தார்.

"நீங்கள் உங்களது தூக்கத்தை விட்டுவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்ட ஜானகி அம்மாவுக்கு அந்த செவிலியர்கள் சொன்ன பதில் "நீங்கள் தூங்கும்போதுகூட உங்களது உதட்டில் ஒரு பாடல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?'' அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் அழுது விட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஜானகி அம்மா...

ஒரு சிறிய கிராமம்; அதில் ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த சிறுமி; நாதஸ்வர வித்வானான பைதி ஸ்வாமியிடம் சங்கீதத்தின் அடிப்படை பாடங்களைப் படித்ததுடன் நின்றுவிடுகிறது அந்தச் சிறுமியின் சாஸ்த்ரீய சங்கீதப் புரிதல். ஆகாசவாணியின் தேசிய இசைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெறும் அளவுக்கு அந்த சிறுமியின் இசை வளமானது; தரமானது; மேன்மை வாய்ந்தது.

ஏவிஎம் நிறுவனத்தில் பின்னணி பாட்டுக்கு வாய்ப்புக் கேட்டு அவரது மாமனார் தபால் கார்டு எழுதியபோது அவரும் சரி, ஏவிஎம் நிறுவனமும் சரி, காலம் கடந்து நிற்கப்போகும் இசைக்கு அவர்கள் ரத்தினக் கம்பளம் விரிக்கப்போகிறார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

1957-இல் ஏவிஎம் தயாரிப்பில் உருவான "விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்தில் டி. சலபதி ராவ் இசையமைப்பில் பாடி, திரையுலகில் முதலடி எடுத்து வைத்தார் எஸ். ஜானகி. அந்தத் திரைப்படம் வெளிவரவே இல்லை. ஆனால், ஒரு கானக் குயில் அங்கிருந்து சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. ஜப்பானிய, ஜெர்மானிய, சிங்கள, ஆங்கில மொழிகள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடிப் பறந்து இசை மழையால் பூமியை நனைத்தது அந்த கானக் குயில்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் சென்னையில் ஒரு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து இன்னொரு ஒலிப்பதிவுத் கூடத்துக்கு விரைந்து நாள்தோறும் 10 முதல் 15 பாடல்களைப் பதிவு செய்திருக்கிறார் ஜானகி அம்மா. சில ஆன்மிக, சினிமா அல்லாத குறும்படங்களுக்கும் இசைத் தட்டுகளுக்கும் ஜானகி அம்மா இசையமைத்திருக்கிறார் என்பது வெளியில் அதிகம் தெரியாது.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடலும், அவரும் பி.பி. ஸ்ரீனிவாசும் இணைந்து பாடிய பல காதல் டூயட்டுகளும் மட்டுமல்ல, எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர், ரகுமான் இசையில் பாடிய பாடல்களும் காலத்தை வென்ற சங்கீதச் சிற்பங்கள்; கட்டுக் குலையாத இசை மெட்டுகள்; தலைமுறைகள் கடந்தும் முணுமுணுக்கப்படும் 'ஜானகி அம்மா' குரலின் அடையாளச் சின்னங்கள்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

திருக்குறள் (எண் 234) அதிகாரம்: புகழ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments