முகப்பு
தலையங்கம்

விசும்பின் துளிவீழின் அல்லால்...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நமது அன்றாட வாழ்க்கைப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது என்னவோ வருண பகவான்தான்.

Updated On : 3 ஜூன் 2026, 6:15 am IST
தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கு முன்னதாகவே தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்தது.
பகிர்:

தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கு முன்னதாகவே மே மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. 2016, 2023-ஆம் ஆண்டுகளில் ஜூன் 8-ஆம் தேதிதான் தொடங்கியது என்றால் 2024-இல் மே 30-ஆம் தேதியும், 2025-ஆம் ஆண்டில் மே 24-ஆம் தேதியும் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கேரளத்தில் முதலில் தொடங்கி தமிழ்நாடு, கர்நாடகத்தின் கடற்கரைப் பகுதி என்று இந்தியா முழுவதும் வடக்கு நோக்கி நகரும் என்பது வானிலை ஆய்வாளர்களின் அனுமானம்.

2026-இல் வழக்கமான சராசரியில், 90% மட்டுமே இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதாவது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான அளவில்தான் மழைப் பொழிவு காணப்படும் என்பது அவர்களது கணிப்பு.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நமது அன்றாட வாழ்க்கைப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது என்னவோ வருண பகவான்தான். மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் என்பது அவரது ஏட்டுக் கணக்கே தவிர, உண்மையான பட்ஜெட்டை பருவமழைப் பொழிவுதான் தீர்மானிக்கிறது என்று சொல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

பருவமழைப் பொழிவு குறைவது அல்லது அளவுக்கதிகமான தாமதம் இரண்டுமே இன்றைய சூழலில் கவலை அளிப்பவையாகத்தான் இருக்க முடியும். மேற்காசியப் போரால் ஏற்பட்டிருக்கும் அதிகரித்த சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் ஏற்படும் தடுமாற்றத்துக்கு நடுவே, பருவமழை பொய்ப்பதோ, குறைவதோ ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கெனவே சர்வதேச வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது போதாதென்று, விலைவாசி உயர்வும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.

பலவீனமான பருவமழை மேலே சொன்ன பட்டியலில் இணையும் என்று நகர்ந்துவிட முடியாது. அவற்றுடன் இணைந்த ஒவ்வொரு பொருளிலும் பருவமழைப் பொழிவின் குறைவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நான்கு மாத பருவமழைக் காலத்தில் 50 ஆண்டு சராசரிப் பொழிவு என்பது 87 செ.மீ.; அதாவது 35 அங்குலம். அதன் 97% முதல் 104% வரையிலான மழைப் பொழிவை வழக்கமான பருவமழைப் பொழிவாக இந்திய வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையான கோடை வெப்பத்தால் வறண்டு போய்க் கிடக்கின்றன. நகர்ப்புறங்களில் வீசும் வெப்ப அலையால் உயிரிழப்புகள் பதிவாகின்றன. பல நகரங்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியûஸ கடந்து கொண்டிருக்கும் நிலையில், பருவமழைப் பொழிவு மட்டும்தான் இதிலிருந்து விடுதலை தரக்கூடும் என்பது எதார்த்த நிலைமை.

இந்த ஆண்டின் கணிப்பை, பசிபிக் மகா சமுத்திரத்தில் உருவாகும் "எல் நினோ' பாதிக்கும். வழக்கத்தைவிடக் கடுமையான "எல் நினோ' உருவாகிறது என்றும், அது ஜூன்-செப்டம்பர் பருவத்தில் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஏற்பட்ட எந்தவொரு வறட்சியின் போதும் "எல் நினோ' ஏற்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். பருவமழைப் பொழிவு குறிப்பிட்ட நேரத்தில், சமச்சீராக இருந்தால் மட்டுமே இந்திய விவசாயி பயன்பெற முடியும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பலவீனமான, சமச்சீரற்ற பருவமழைப் பொழிவின் நேரடித் தாக்கத்தை சமையல் அறையில் பார்க்கலாம். காரீஃப் சாகுபடிப் பருவத்தில் ஏற்படும் மகசூல் குறைவு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலையைக் கடுமையாக அதிகரிக்கும். மேற்காசியப் பிரச்னை காரணமாக டீசல் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது, உணவுப் பொருள்களின் விலையை மேலும் கடுமையாக உயர்த்தும்.

முன்புபோல, இந்தியப் பொருளாதாரம் பருவமழையை மட்டுமே நம்பி இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. பாசன வசதிகள் அதிகரித்திருக்கின்றன என்பதுடன் பருவமழையை நம்பி இருக்கும் காரீஃப் பருவ சாகுபடியைப் போலவே, ராபி பருவ சாகுபடி உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் வேளாண் துறையின் பங்களிப்பு 14% முதல் 15% -ஆகக் குறைந்துவிட்டது. அதனால், இந்தியப் பொருளாதாரத்தின் தலையெழுத்து பருவமழையையும், விவசாயத்தையும் நம்பி இருக்கிறது என்கிற நிலைமை இப்போது இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மத்தியத் தொகுப்பில் அரிசியின் கையிருப்பு 4 கோடி டன் இருக்கிறது. இத்தனைக்கும் கடந்த நிதியாண்டில் அரிசி விநியோகத்துக்கும், எத்தனால் உற்பத்திக்கும் மட்டுமல்லாமல், ஒரு கோடி டன் அரிசி சந்தைக்கும் விற்கப்பட்டிருக்கிறது. அதே போல, மத்தியத் தொகுப்பில் 5.13 கோடி டன் கோதுமை கையிருப்பும் இருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் மிக அதிகமான கொள்முதலை இந்திய உணவு தானியக் கழகம் கடந்த ஆண்டு மேற்கொண்டிருக்கிறது.

உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. தென்மேற்குப் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் விவசாயிகள் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பயிரிடத் தயாராகிறார்கள். அடுத்த நான்கு மாதங்கள் சமச்சீரான மழைப் பொழிவு ஏற்பட்டால்தான், உணவுப் பொருள்களின் விலைவாசி கட்டுக்குள் இருக்கும். வருண பகவான் காப்பாற்றுவாராக.

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

திருக்குறள் (எண் 20) அதிகாரம்: வான் சிறப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.