FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

வெற்றி மேல் வெற்றி!

செஸ், ஹாக்கி, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் இந்திய ஆடவரும், மகளிரும் மாபெரும் வெற்றிகளைக் குவித்து நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளதைப் பற்றி...

Updated On : 8 ஜூன் 2026, 3:30 am IST
ஆர். பிரக்ஞானந்தா
பகிர்:

இந்திய விளையாட்டுக்கு கடந்த வாரம் பொன்னான வாரம். செஸ், ஹாக்கி, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் இந்திய ஆடவரும், மகளிரும் மாபெரும் வெற்றிகளைக் குவித்து நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடந்த மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் ஆனதன் மூலம் இளம் செஸ் வீரர் ஆர்.பிரக்ஞானந்தா (20) தனது வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துக் கொண்டுள்ளார். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஆறு பேர் மட்டுமே இதில் பங்கேற்று தலா இரண்டு முறை மோதினர்.

6-ஆவது சுற்று முடிந்தபோது, பிரக்ஞானந்தா புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், ஃபீனிக்ஸ் பறவைபோன்று மீண்டெழுந்து அடுத்த நான்கு சுற்றுகளில் வெற்றி பெற்று மொத்தம் 18 புள்ளிகளுடன் இந்தப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார்.

Advertisement

Advertisement

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், மண்ணின் மைந்தருமான மேக்னஸ் கார்ல்செனை, சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்துவதுபோன்று, இந்தப் போட்டியில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை வீழ்த்தி உண்மையிலேயே தான் சாம்பியன்தான் என்பதை பிரக்ஞானந்தா நிரூபித்தார்.

நடப்பு உலக சாம்பியனான, தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷை 9-ஆவது சுற்றில் சாய்த்தார். செஸ் விளையாட்டின் பிதாமகனான, தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வே செஸ் போட்டியில் 6 முறை பங்கேற்றும் அதிகபட்சமாக 2022-ஆம் ஆண்டில்தான் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இதிலிருந்து பிரக்ஞானந்தாவின் வெற்றி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை அறிய முடியும்.

தனது இளைய சகோதரர் பிரக்ஞானந்தா நார்வேயில் வென்ற நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சனிக்கிழமை (ஜூன் 6) வரை நடைபெற்ற டபிள்யுஆர் மகளிர் ரேப்பிட் செஸ் போட்டியில் அவரது மூத்த சகோதரி வைஷாலி (24) சாம்பியன் ஆனார். பின்தங்கினாலும் மீண்டெழும் போராட்ட குணம் இருவரின் மரபணுவிலும் இருப்பது உறுதிப்பட்டிருக்கிறது.

இவர்கள் இருவரைப் போன்றே மற்றோர் இளம் பெண்ணும் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரது வெற்றி அதிக ஊடக வெளிச்சம் பெறவில்லை.

மங்கோலியாவில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 6) வரை நடைபெற்ற 21-ஆவது ஆசிய மகளிர் தனிநபர் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் (19) பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2027-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

ஒருபுறம், செஸ் விளையாட்டில் நமது இளைஞர்களும் மகளிரும் சாதனை படைக்கின்றனர் என்றால், நாம் ஒரு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹாக்கியிலும் இப்போது புத்தெழுச்சி ற்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் மே 29 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது.

9 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்திய ஆடவர் தாங்கள் விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஐந்தில் வென்றனர். அரை இறுதியில், பாகிஸ்தானை 5-3 கோல் கணக்கிலும், இறுதி ஆட்டத்தில் ஜப்பானை 4-1 கோல் கணக்கிலும் சாய்த்து வாகை சூடியது இந்திய அணி. ஆசிஷ் தானி பூர்த்தி என்ற இளம்வீரர் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்ததுடன் போட்டியில் அதிகபட்சமாக 17 கோல்கள் அடித்து இந்திய வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.

இதே போட்டியில், மகளிர் பிரிவில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்திய மகளிர் வெண்கலப் பதக்கம் வென்றனர். கிரிக்கெட், செஸ், ஹாக்கி, இறகுப்பந்து, தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, மல்யுத்தம், பளுதூக்குதல், ஈட்டி எறிதல் உள்ளிட்டவற்றில் அண்மைக் காலமாக ஆதிக்கம் செலுத்தி

வந்தாலும் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் நாம் சற்று பின்தங்கியே உள்ளோம். இந்தச் சூழலில் நமது மகளிர் அணி கால்பந்திலும் முத்திரை பதிக்கத் தொடங்கி இருக்கிறது. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டி கோவாவில் மே 25 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது. ஆறு அணிகள் பங்கேற்ற இதில் பங்கேற்ற நான்கு ஆட்டங்களிலும் இந்திய

மகளிர் வென்றனர். மொத்தம் 18 கோல்களை அடித்த இந்திய மகளிர், நான்கு ஆட்டங்களிலும் சேர்த்து ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்தனர் என்பதில் இருந்தே கால்பந்திலும் இந்திய மகளிரின் ஆதிக்கம் ஏற்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் இந்தப் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்றிருந்த இந்திய மகளிர் 2019-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் மீண்டும் சாம்பியன் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அரசியலை விலக்கி, தகுந்த பயிற்சியும், ஊக்கமும் அளித்தால் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய இளைஞர்களும், மகளிரும் சாதிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதையே செஸ், ஹாக்கி, கால்பந்து போட்டிகளின் சமீபத்திய வெற்றிகள் உணர்த்துகின்றன.

*****

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

திருக்குறள் (எண் 595) அதிகாரம்: ஊக்கம் உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments