துருப்புச் சீட்டு ஈரான் கையில்...
நான்கு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்றுவரும் ரஷியா-உக்ரைன் போரால் உலகில் ஏற்படாத தாக்கம், நான்கு வாரங்கள்கூடத் தாண்டாத அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் ஏற்பட்டிருக்கிறது
நான்கு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்றுவரும் ரஷியா-உக்ரைன் போரால் உலகில் ஏற்படாத தாக்கம், நான்கு வாரங்கள்கூடத் தாண்டாத அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் போரால் உலகளாவிய பொருளாதாரத்தில் சிறிய அளவிலான பாதிப்பு, விநியோகச் சங்கிலியில் தடை, நேரடி அந்நிய முதலீடு குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் என்றால், ஈரான் போரால் அனைத்துத் துறைகளுக்கும் ஆதார சக்தியான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்திருக்கிறது.
உலகின் 20% அளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கப்பல்களை அனுமதிக்க மறுப்பதுதான் உலக நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மூன்று கண்டங்களிலும் ஈரான் போரின் பாதிப்பு எதிரொலித்துள்ளது. பல்வேறு நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இலங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை, வங்கதேசத்தில் வீடுகளுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு, பாகிஸ்தானில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே பணி, பிலிப்பின்ஸில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை முறை, எகிப்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்பவை சில எடுத்துக்காட்டுகள். பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கச்சா எண்ணெய்த் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் இறக்குமதி செய்யும் இந்தியாவிலும் இதன் தாக்கம் இல்லாமல் இல்லை. இருப்பினும், அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும், எல்பிஜி சமையல் எரிவாயுவைப் பொருத்தவரை, அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும் இந்தியாவில் இயல்பு நிலை பாதிக்காமல் இருப்பதற்கு மத்திய அரசைப் பாராட்ட வேண்டும்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலையும் ஓரணியில் திரண்டு தடுக்க முடியாமல் போனதன் தொடர்ச்சியாகத்தான் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போரையும் தடுக்க முடியாத சூழலுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் தலையாட்டிய அதன் நட்பு நாடுகள், இப்போது தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளபோதிலும் எதிர்ப்பை ஓங்கி ஒலிக்காமல் முணுமுணுக்கத்தான் முடிகிறது.
போரைத் தொடங்கும் அமெரிக்காதான் அதை முடித்தும் வைக்கும். கடந்தகால வரலாறுகள் அதைத்தான் சொல்கின்றன. ஈரான் மீதான போரையும் அமெரிக்கா நிறுத்துவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. 'ஈரான் அரசின் கோரிக்கையின்பேரில்' அந்த நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஐந்து நாள்களுக்கு நிறுத்திவைத்ததாக அறிவித்த டிரம்ப், அதை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
போர் நிறுத்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தில் அணுசக்தித் திட்டக் கட்டுப்பாடு, ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்
பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் உள்ள அம்சங்கள் ஒருதலைப்பட்சமாகவும், இஸ்ரேலுக்குச் சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஈரான், இதற்குப் பதிலாக ஐந்து அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது. அதில், தங்களது அதி உயர் தலைவர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும், போரால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மைக்கு அங்கீகாரம் போன்ற நிபந்தனைகளை அது விதித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்துவரும் அதேநேரத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 1,000 பாராசூட் வீரர்கள் மற்றும் 5,000 கடற்படை வீரர்களை அப்பகுதிக்கு அனுப்ப அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதால், அமெரிக்காவின் முயற்சியை 'வெறும் நாடகம்' என ஈரான் சந்தேகத்துடன் பார்க்கிறது.
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவிக்கிறார்; ஆனால், எந்தவொரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுக்கிறது; தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்னொரு புறம் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி, மேற்காசியப் போர் நிறுத்தத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
நான்கு வார போரில் இதுவரையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியுள்ளது. இஸ்ரேல் தரப்பிலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினாலும், ஈரான் அதற்குத் தயாராக இல்லையே...!